|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அதிரடி நடவடிக்கை |
|
பக்தி கதைகள்
|
|
“என் வாழ்க்கையே நாசமாயிரும் போலருக்குய்யா. நீங்கதான்யா எப்படியாவது...” என் முன்னால் அமர்ந்திருந்த முப்பது வயது ஆனந்தியைப் பார்த்தேன். கண்கள் கலங்கியிருந்தன. “என் கணவர் பெரிய ஜல்லிக்கட்டு வீரர்யா. காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணமாகி ஒரு வருஷமாச்சு. மாமியாரும் என்னைப் பொண்ணு மாதிரி பாத்துக்கறாங்க. போன மாசம் எங்க வீட்டுல பூஜை வச்சிருந்தோம். தீபாராதனை நடந்தப்ப என் புருஷனோட பங்காளி ஒருத்தனுக்கு திடீர்னு ஆவேசம் வந்து சாமியாட ஆரம்பிச்சிட்டான். அவன்மீது அப்பப்ப மாரியாத்தா வருவாளாம்.. அன்னிக்கு அவன்மீது வந்த மாரியாத்தா என்ன நடத்தை கெட்டவன்னு சொல்லிட்டாய்யா” “ஐயையோ...அப்புறம்...’’ “ஆடிப்போயிட்டேன்யா. எல்லாரும் கூடிப் பேசி என்னை எங்கப்பா வீட்டுக்கு அனுப்பிசிட்டாங்கய்யா. என்ன ஒரேயடியா அத்துவிடப் போறதாப் சொல்றாங்கய்யா. அப்படி நடந்தா என் சாவுக்கு நீதான் பொறுப்புன்னு மாரியாத்தாகிட்ட சொல்லிட்டு நாண்டுக்கிட்டு சாவேன்யா” இவள் உண்மையிலேயே ஒழுங்குதானா? “பச்சைப்புடவைக்காரி மீது சத்தியம்யா. நான் ஒழுக்கமான பொம்பளைதான். நான் அவள நம்பற அளவுக்கு அவ ஏன்யா என்ன நம்பமாட்டேங்கறா” ஏதாவது தெரிந்தால் கூப்பிடுகிறேன் என்று சொல்லித் தொடர்பு விவரங்களை வாங்கிக்கொண்டு ஆனந்தியை அனுப்பிவிட்டேன். அன்று மாலை சொக்கநாதர் கோயிலைவிட்டு வெளியே வரும்போது ஒரு பூக்காரி ஒரு பதினெட்டு வயது இளைஞனைக் கண்மண் தெரியாமல் அடித்துக்கொண்டிருந்தாள். ஓடிப்போய் தடுத்தேன். “வளர்ந்த பிள்ளைய இப்படியா அடிப்பாங்க” “ அரவணைச்சிச் சோறு போடறது மட்டும் அம்மாவோட வேலை இல்ல; தப்பு செஞ்சாத் தண்டிக்கறதும் அவ வேலைதான்” “கொஞ்சம் அன்பு...” “நான் அடிக்கறதுகூட அன்பு காட்டறதுதான். இப்ப நான் இவன அடிக்கலேன்னா நாளைக்கு ஊர்ல எவனோ அடிப்பான். அந்த வலிய இவனால தாங்கமுடியாது. அதான் நான் இப்ப அடிக்கறேன்” பூக்காரியிடம் இவ்வளவு தெளிவா? அடிவாங்கிய இளைஞன் ஓடிவிட்டான். “பூக்காரியும் நான்தான். பூமியைப் படைத்தவளும் நான்தான். ” “தாயே” “உன் மூலமாகத்தான் ஆனந்தியைப் பழித்தவனைத் தண்டிக்கப்போகிறேன். இந்த முறை உன் அன்பு அதிரடி நடவடிக்கையாக வெளிப்பட வேண்டும். வரும் அமாவாசையன்று ஆனந்தியின் கிராமத்தில் பெரிய பூஜை நடக்கும். அதில் அந்தக் கிராதகன் சாமியாடுவான். அப்போது அவனை நீ தண்டிக்கப்போகிறாய்” “நானா” “உன்னை என் சூலாயுதமாகப் பயன்படுத்தப் போகிறேன்” ஆனந்தியைத் தொடர்புகொண்டு அமாவாசை பூஜையைப் பற்றிக் கேட்டேன். “அது எப்படி உங்களுக்கு தெரியும்” “உன் கிராமத்துல விசாரிச்சேம்மா. நீ போவியாம்மா” “இன்னும் முடிவு பண்ணலங்கய்யா.” அமாவாசை. ஆனந்தியின் கிராமத்தில் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. தெரிந்தவர் உதவியோடு முன் வரிசையில் இடம்பிடித்து அமர்ந்தேன். பின்னாலிருந்து யாரோ என்னைத் தொட்டார்கள். சிலிர்த்துப் போய்த் திரும்பினேன். அழகான நடுத்தர வயதுப் பெண். “அதோ காவி வேட்டி கட்டியிருக்கிறானே அவன்தான். ஒரு காலத்தில் என் அடியவனாக இருந்தான். இப்போது அகங்காரமும் ஆசையும் வந்துவிட்டது. “தீபாராதனை காட்டும்போது அவன் சாமியாடத் தொடங்குவான். நான் உன்னைத் தொடுவேன். நீ என்ன செய்யவேண்டும் என்று தெரியும். நீ சாமியாட வேண்டாம். ஆவேசமாகப் பேசினால் போதும். ஆனால் மனதில் எள்ளளவும் அன்பு குறையக்கூடாது.” கண்களை மூடிக்கொண்டு அபிராமி அந்தாதி பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தேன். வழிபாடு நல்லபடியாக முடிந்தது. தீபாரதனை நடந்தபோது அனைவரும் ஆவேசம் வந்து அம்மா எனக் கத்தினார்கள். அந்தக் காவியுடைக்காரன் ஆவேசமாக சாமியாட ஆரம்பித்தான். “நான் ஆத்தாடா... இந்த ஊர்ல சில வீடுகளில் ஒழுக்கம்கெட்ட பொம்பளைங்க இருக்காங்கடா. அந்த வீடெல்லாம் வெளங்காதுடா” என் நடு முதுகில் ஒரு தொடு உணர்வு. சிலிர்த்து எழுந்தேன். சாமியாடியவன் அருகே போனேன். அவன் கண்களை மூடியபடி கத்திக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கட்டியிருந்த காவி வேட்டியை பலமாக உருவினேன். ஒரே நொடியில் அடங்கிப்போனான். கூனிக்குறுகி தரையில் உட்கார்ந்தான். எல்லோரும் அதிர்ந்தார்கள். நான் கத்தினேன். “இந்தாளுமேல நிஜமாவே மாரியாத்தா இறங்கியிருந்தா நான் வேட்டிய உருவினது தெரியாம ஆவேசத்துல ஆடிக்கிட்டு இருந்திருப்பான். ஏன் உக்காந்தான்? அவனுக்கு நிஜமாவே சாமி வரல. எல்லாம் வேஷம்” அவனுடைய ஆட்கள் சிலர் என்னைத் தாக்க வந்தனர். கையை உயர்த்தினேன். “என்ன நெருங்கினா எரிச்சிருவேண்டா. இந்தாளுக்கு ஆனந்திங்கற பொண்ணுமேல ஒரு கண்ணு. அவமேல அபாண்டமா பழியப் போட்டு அவள வாழாவெட்டியாக்கிட்டா அப்புறம் அவள அடையறது சுலபம்னு கணக்கு போட்டான். மாரியாத்தாவுக்குத் விஷயம் தெரிஞ்சிப் போச்சி. இதுக்கு மேலயும் நீ ஆடினா மவனே செத்தடா” அவனது ஆட்கள் மீண்டும் என்னை நெருங்கினர். “நான் சொன்னது பொய்ன்னு அவனசை் சத்தியம் பண்ணச் சொல்லுங்க. சத்தியம் பண்ணிட்டு அவன் உயிரோட இருந்தான்னா என்ன அடிச்சே கொல்லுங்க” எல்லோரும் இப்போது அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழிந்து எழுந்து நின்றான். என்னைப் பார்த்துக் கை கூப்பிவிட்டு ஓடிவிட்டான். அதற்குமேல் என்னால் நிற்க முடியவில்லை. அப்படியே படுத்துவிட்டேன். கண் விழித்த போது ஒரு பெரிய வீட்டில் இருந்தேன். அருகே கட்டுமஸ்தான இளைஞன் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்துக் கைகூப்பினான். “ஐயா... நான் வீராச்சாமி. ஆனந்தியோட புருஷன். அவன் பேச்சை நம்பி என் பொண்டாட்டிய தள்ளி வச்சேன் பாருங்க. என் புத்தியை... அந்தக் காவாலிப்பயலக் கத்தியால குத்திட்டு வரலாம்னு தோணுது” “அவனப் பச்சைப்புடவைக்காரி பாத்துப்பா. முதல்ல நீ போய் உன் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு வாப்பா. அவள அழ வச்சதெல்லாம் போதும்” “கூட்டிக்கிட்டு வந்துட்டேன்யா. அவளும் பூஜைக்கு வந்திருந்தா. நடந்ததெல்லாம் பாத்தா. இப்பவாவது என்ன நம்புங்க மாமான்னு அழுதா. நான் அவ காலத் தொட்டு மன்னிப்பு கேட்டேன்யா” நான் எழுந்து நின்றேன். ஆனந்தி வந்தாள். என்னைப் பார்த்துக் கண்ணீர் மல்கக் கைகூப்பினாள். சிறிது நேரத்தில் விடைபெற்றேன். கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. பூட்டியிருந்த என் காருக்குள் யாரோ அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது. பதறியபடி ஓடினேன். பச்சைப்புடவைக்காரி. அவள் பக்கம் கதவைத் திறந்து சாலையில் விழுந்து வணங்கினேன். “அந்தச் சாமியாடி உன் மீது கடுப்பில் இருக்கிறான். அவனிடம் ஆயுதம் தாங்கிய அடியாட்கள் இருக்கிறார்கள். இவ்வளவு சொல்கிறேன் உன் முகத்தில் பயத்தின் ரேகைகளையே காணோமே?” “தாயே... உங்கள் கையில் உள்ள சூலாயுதம் நான். எதற்காக, யாருக்காகப் பயப்படவேண்டும்?” “அவன் உன்னை அடிக்க வந்தால்...” “நான் அடிபட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்று பொருள். உங்கள் விருப்பம் அதுவென்றால் அப்படி நடப்பதுதான் இந்தக் கொத்தடிமை செய்யக்கூடிய உத்தமமான வழிபாடு” அன்னை அழகாகப் புன்னகைத்தாள். “உனக்கு என்ன வேண்டுமோ கேள். போலிகளின் முகத்திரையை கிழிக்கும் ஆற்றலைக் கொடுக்கட்டுமா? வருங்காலத்தை அறியும் வல்லமையைத் தரட்டுமா?” “வேண்டாம் தாயே... அந்தச் சாமியாடிக்கு வந்த அகந்தை எனக்கும் வந்துவிடக்கூடாது. அதற்குப் பதிலாக....” “பதிலாக...’’ “அவன் கபடவேஷதாரிதான். ஒரு பெண்ணின் வாழ்வையே நாசமாக்கப் பார்த்தவன்தான். இருந்தாலும் ஒரு காலத்தில் உங்கள் மனதிற்கினிய மகனாக இருந்தான் அல்லவா? அதனால்...’’ “அதனால்..’’ புவியேழையும் படைத்து, காத்து, அழிக்கும் தொழிலைச் செய்யும் அன்பரசியின் முன் கண்ணீர் மல்கக் கைகூப்பினேன். அவளே எனக்குச் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையை அவளிடமே சொன்னேன். “அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்” |
|
|
|
|