|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கிருபியாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
மகாபாரதத்தில் ஹஸ்தினாபுர அரண்மனையில் ராஜகுருவாக விளங்கிய கிருபாச்சாரியாரின் சகோதரி நான். அந்த நாட்டின் தளபதியாகவும், பாண்டவர் கவுரவர்களுக்கு வில்வித்தை ஆசானாகவும் விளங்கிய துரோணரின் மனைவியும் கூட. என் தந்தையின் பெயர் சரத்வான். கவுதம முனிவரின் பேரனான அவர் பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தார். பிராமண குலத்தில் பிறந்தாலும் அவருக்கு ஏனோ வேதங்களைப் படிப்பதில் ஆர்வமில்லை. வில்வித்தையில் மிக மிக தேர்ச்சி பெற்றார். ஒரு முறை ‘தேவலோக இந்திரனைக் கூட என்னால் போரில் வெல்ல முடியும்’ என்று அவர் கூற, இந்திரன் அச்சம் அடைந்தான். என் தந்தையாகிய சரத்வான் மனதை மாற்றுவதற்காக வானுலக அழகியான ஜனபதி என்பவளை அனுப்பினான். அவளது அழகிய தோற்றம் என் தந்தையை மயக்கியது. அவரிடமிருந்த காம விதை கீழே விழுந்தது. எனினும் தன் மனதை வென்று அந்த அழகியைத் தொடாமலேயே அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார். கீழே விழுந்த அவரது சக்தி இரண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பாதி ஆணாகவும் மறுபாதி பெண்ணாகவும் மாறியது. அந்த ஆண்தான் என் சகோதரன் கிருபர். அந்தப் பெண்தான் நான் என்பது நான் கூறாமலேயே உங்களுக்கு விளங்கியிருக்கும். காலப்போக்கில் துரோணருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குதிரை என்றால் அஸ்வம் என்பார்கள். பிறந்தபோது என் மகன் ஒரு குதிரையைப் போலவே குரல் கொடுத்துக் கொண்டிருந்தான். எனவே அவனுக்கு அஸ்வத்தாமா என்ற பெயர் வைக்கப்பட்டது. என் கணவர் துரோணரைப் போலவே மகன் அஸ்வத்தாமனும் வளர்ந்தபிறகு சிவனை நோக்கி தவம் புரிந்தான் - அதுவும் ஒரு காலில் நின்று கொண்டு கடும் தவம் புரிந்தான். அஸ்வத்தாமனின் நெற்றியில் ஒரு மாணிக்கக் கல் இயல்பாகவே பதிந்திருந்தது. இதன் காரணமாக அவன் மற்றவர்களை விட மிகவும் சக்தி மிகுந்தவனாக விளங்கினான். நினைக்கும்போது மறையும் வல்லமையும் அவனுக்கு இருந்தது. என் மகன் அஸ்வத்தாமன் போர்ப் பயிற்சிகளில் சிறந்து விளங்கினான். என்றாலும் என்ன செய்ய, துரியோதனனுக்கு நண்பன் ஆகிவிட்டான். மகாபாரதப் போருக்குப் பிறகும் உயிர் வாழ்ந்தவர்கள் குறைவுதான். அவர்களில் என் சகோதரர் கிருபரும், என் மகன் அஸ்வத்தாமனும் உண்டு. சொல்லப்போனால் மார்க்கண்டேயன், பிரகலாதன் போல என் மகனும் எப்போதும் உயிர் வாழ்கிறான். ஆனால் அவன் வாழ்வில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறின. மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்கு எதிராகப் போர் புரிந்தவன் என் மகன். துரியோதனன் இறந்ததும் அஸ்வத்தாமன் ஒரு கொடும் செயலை செய்யத் துணிந்தான். பாண்டவர்கள் துாங்கும் கூடாரத்துக்கு தீவைத்து அவர்களை கொல்ல நினைத்தான். ஆனால் அப்போது பாண்டவர்கள் உள்ளே இல்லை. மாறாக அவர்களின் ஐந்து மகன்கள் உள்ளே இருந்தார்கள். அவர்கள் தீயில் இறந்தார்கள். எனவே பாண்டவர்களைக் கொல்வதற்காக அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை தயார் செய்தான். அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணன், ‘நீயும் பிரம்மாஸ்திரத்தை விடு’ என்றார். வியாசர் இருவரையும் தடுத்தார். இரு பிரம்மாஸ்திரங்களும் மோதினால் பூமி அழியும் என்று அவர் கருதினார். இதைக் கேட்ட அர்ஜுனன் தன் பிரம்மாஸ்திரத்தை விடாமல் அமைதி காத்தான். ஆனால் என் மகனிடமிருந்து பிரம்மாஸ்திரம் விடுபட்டுவிட்டது. அர்ஜுனனின் மனைவி உத்தரை அப்போது அபிமன்யுவைக் கருவுற்றிருந்தாள். அந்த கருவை நோக்கி தனது பிரம்மாஸ்திரத்தை செலுத்திவிட்டான் அசுவத்தாமன். அந்தக் கரு சிதைந்தது (பின்னர் கிருஷ்ணர் அந்தக் கருவுக்கு உயிர் கொடுத்தது வேறு விஷயம்). இதைக் கண்ட கிருஷ்ணர் அவனுக்கு சாபமிட்டார். இதன் காரணமாக அஸ்வத்தாமனின் நெற்றியில் இருந்த மாணிக்கக் கல்லை இழக்க நேரிட்டது. ‘பெரும் காயமடைந்த நெற்றியோடு அஸ்வத்தாமன் பூமியில் தொடர்ந்து வாழ்வான்’ என்றும் அவர் சாபமிட்டார். பெரும் திறமைகளைப் பெற்றிருந்தும் சேராத இடம் சேர்ந்ததால் என் கணவர் துரோணரும், மகன் அஸ்வத்தாமனும் அல்லல் அடைந்தனர். வாழ்வின் நிலையாமையை உணர்ந்து கொண்ட நான் அமைதி வழியில் பயணம் செய்யத் தொடங்கினேன்’. ............... ஹரியானாவில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் உள்ளது சீதளா தேவியின் கோயில். கோயில் உள்ள சாலைக்கு சீதள மாதா சாலை என்று தான் பெயர். சீதள மாதா என்பது வேறு யாருமல்ல துரோணாச்சாரியாரின் மனைவியான கிருபியைத்தான் அப்படி அழைக்கிறார்கள். இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அதிகம். முக்கியமாக வெள்ளிக்கிழமைகளிலும், நவராத்திரியின் போதும் பக்தர்கள் அதிகம் பேர் வந்து வழிபடுகிறார்கள் துரோணரின் மனைவியான கிருபி, அஸ்வத்தாமனைப் பெற்றெடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது கேஷோபூர் என்ற கிராமத்தை. அங்கு தங்கியபடி அங்குள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்குச் சேவை செய்து வந்தார். முக்கியமாக பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதுகாத்து வந்தார். இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அவரை அன்புடன் சீதள மாதா என்று அழைக்கத் தொடங்கினார்கள். குருகிராம் பகுதியிலிருந்த ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டிருந்த துரோணர் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்து தன் மனைவியை சந்தித்து விட்டுச் செல்வார். கிருபி இறந்தபிறகு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்காக அங்கு ஒரு கோயிலைக் கட்டினர். சீதள மாதா என்றும் மாசாணி மாதா என்றும் அவரை அழைத்தனர். சீதள் என்றால் குளிர்ச்சி என்றும், மாசாணி என்றால் பெரியம்மை என்றும் பொருள். செளத்ரி சிங் ராம் என்பவரின் கனவில் மாதா தோன்றி தன் கணவர் முன்பு ஆஸ்ரமம் அமைத்து வசித்த குருகிராமத்துக்குச் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். எனவே குருகிராமில் ஒரு கோயிலை எழுப்பினர். குருகிராம் கிராமத்தின் தெற்கிலுள்ள பீமகுன்ட் பகுதியில் உள்ளது இக்கோயில். இங்கு மொட்டை அடித்தல், திருமணம் செய்தல் ஆகியவை மிக சகஜம். குழந்தை இல்லாதவர்கள் தங்கள் விருப்பத்தை சீட்டுகளில் எழுதி இங்குள்ள ஆலமரத்தில் வைக்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்ததாகக் கருதப்படும். ஆனால் இந்த அம்மனுக்கு திங்கட்கிழமை உகந்தது.
|
|
|
|
|