|
கிருஷ்ணருக்கு மனைவியர்கள் கணக்கில் அடங்காது என்பர். எத்தனையோ ஆயிரம் மனைவிகள். பட்டமகிஷிகள் எட்டுப் பேர். நரகாசுர வதம் முடிந்தபின் அவனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் பெண்களும் கிருஷ்ணரை மணந்தனர். நாரதருக்கு இதில் பெரும் சந்தேகம் உண்டானது. கிருஷ்ணர் எப்படி இத்தனை பெண்களோடு குடும்பம் நடத்துகிறார். அவருடைய மாயாசக்தியை நேரில் சென்று அறிய வேண்டும் என துவாரகாபுரிக்கு கிளம்பினார். கிருஷ்ண பத்தினிகளின் அழகிய மாளிகைகளைக் கண்டு பிரமித்தவராக ருக்மணி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் ருக்மணி. நாரதரைக் கண்டதும், ‘‘வாருங்கள் நாரதரே! உமது வரவு நல்வரவாகட்டும்’’ என வரவேற்றாள். “நாரதா! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார் கிருஷ்ணர். ‘‘பிரபோ! இதென்ன கேள்வி! தங்கள் திருப்பாதங்களைச் சரணடைந்த பின் வேறு என்ன வேண்டும்’’ என்றார். ‘‘ உன் மனம் போலவே ஆகட்டும்’’ என ஆசியளித்தார் கிருஷ்ணர். நாரதர் தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடம் கேட்காமல் உத்தவரின் மாளிகைக்குச் சென்றார். அங்கு கிருஷ்ணர் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். நாரதரைக் கண்டதும், ‘‘ என்ன நாரதரே... சவுக்கியம் தானே...’’ என கிருஷ்ணர் நலம் விசாரித்தார். ‘‘பிரபோ! உம் அருளால் நலமாக இருக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு புறப்பட்டார். இன்னொரு வீட்டில் கிருஷ்ணர் குழந்தைகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். வேறொரு வீட்டில் சங்கீத சொற்பொழிவைக் கேட்டு ஆடிக் கொண்டிருந்தார். அடுத்த வீட்டில் யாகம் வளர்த்துக் கொண்டும், ஒரு வீட்டில் நீராடிக் கொண்டும், ஒரு வீட்டில் அந்தணர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டும் இருப்பதைக் கண்டார். “கிருஷ்ணா! உன் மாயா சக்தியை அறிந்து மகிழ்ந்தேன். எங்கும் கிருஷ்ணமயமாகவே இருக்கிறது” என பரவசம் கொண்டார்.
|
|
|
|