|
எந்த நேரமும் கிருஷ்ணரின் நினைவாக வாழ்ந்த உத்தமர் அக்ராஜி. தினமும் அவர் மடத்தில் பூஜை முடித்து விட்டு, தியானத்தில் அமர்வார். அப்போது கிருஷ்ணர் காட்சியளிப்பது வழக்கம். மடத்தில் அனாதை சிறுவனான நாபாஜி என்பவன் சேவை செய்து வந்தான். அக்ராஜியின் உபதேசங்களைக் கேட்டதால் அவனும் கிருஷ்ண பக்தனாக மாறினான். ஒருநாள் தியானத்தில் அமர்ந்து நீண்ட நேரமாகியும் கிருஷ்ணர் தரிசனம் அக்ராஜிக்கு கிடைக்கவில்லை. “ என்பக்தியில் குறை நேர்ந்து விட்டதோ’ எனக் கண் கலங்கினார் அக்ராஜி. “குருதேவா... தாங்கள் தவறு செய்யவில்லை. வியாபாரி ஒருவரின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. ‘ஆபத்தில் இருந்து உயிருடன் தப்பினால் கப்பலில் உள்ள நவரத்தினங்களில் நாலில் ஒரு பங்கை கிருஷ்ண பக்தர்களுக்கு அளிக்கிறேன்’ என வேண்டிக் கொண்டார் வியாபாரி. அவரைக் காப்பாற்றவே கிருஷ்ணர் சென்றிருக்கிறார். அதனால் தான் தரிசனம் கிடைக்கவில்லை” என்றார். சற்று நேரத்தில் மடத்திற்கு வந்த கிருஷ்ணர் தாமதம் ஏற்பட்டதற்கு நாபாஜி சொன்ன காரணத்தையே தெரிவித்தார். குருவை மிஞ்சிய நாபாஜியை அனைவரும் பாராட்டினார். “அடியேன் செய்த சேவை, குருநாதரின் ஆசியால் தான் இந்த நிலையை அடைந்தேன்” என்றார் நாபாஜி பணிவுடன். இந்த நாபாஜி எழுதிய நுாலின் பெயர் பக்த விஜயக் கதைகள். கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாறு இதில் இடம் பெற்றுள்ளது.
|
|
|
|