|
காஷு என்னும் அனாதைச் சிறுவன் ஒருவன் இருந்தான். மூன்று நாளாக பட்டினியால் வாடினான். பசி பொறுக்க முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தான். அப்போது நாரதர் தோன்றி ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்து, ‘ நீ விரும்பும் போதெல்லாம் அறுசுவை உணவு கிடைக்கும்’ என்றார். அவனும் தேவையான போதெல்லாம் விரும்பியதைச் சாப்பிட்டான். இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு பேராசை ஏற்பட்டது. ஆற்றில் மூழ்குவது போல நடித்து நாரதர் மூலம் பணக்காரனாக மாற நினைத்தான். ஆனால் நாரதர் காட்சி தரவில்லை. அவனது பாத்திரத்தையும் காணவில்லை. வருந்திய அவன் துன்பம் தீர கிருஷ்ணரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான். அவனது நிலை கண்ட மகாலட்சுமி அவனுக்கு விரைந்து அருளும்படி கேட்க பகவானும் சம்மதித்தார். காட்சி கொடுத்த கிருஷ்ணரை சரணடைந்தான். ‘‘சிறுவனே...கலியுகத்தில் நீ வாகை மரமாக குருவாயூரில் பிறப்பாய். அப்போது எனக்கு தினமும் அபிஷேகம் முடிந்ததும் வாகை மரத்துாளைத் தேய்த்து என்னைத் துாய்மைப்படுத்துவர். அந்த வகையில் எனக்கு சேவை செய்யும் பேறு பெறுவாய். இந்த வாகை சார்த்துபடி மூலம் பக்தர்களின் தோல் நோய் தீரும்’’ என ஆசியளித்து மறைந்தார். குருவாயூர் குருவாயூரப்பனுக்கு ‘வாகை சார்த்து’ வழக்கம் இன்றும் தொடர்கிறது.
|
|
|
|