Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கன்னிமாடத்துக் காரிகை
 
பக்தி கதைகள்
கன்னிமாடத்துக் காரிகை


வானத்திலிருந்து தான் மின்னல் ஒளிரும். ஆனால் இதென்ன அதிசயமாக இந்த கன்னி மாடத்திலிருந்து பிரகாசிக்கிறதே என்று ஆச்சரியமுற்றான் ராமன். தன் கண்களுக்குள் ஊடுருவிய ஒளி தன் மனதைப் பறித்த மாயம் உணர்ந்து வியந்தான். இதே மாயத்தை எதிர்த் தரப்பிலும் தன் பார்வை உண்டாக்கியிருக்குமா? உண்டாக்கியிருக்க வேண்டும் என்பதே அவனது விருப்பமாக இருந்தது.
விஸ்வாமித்திரர் தாடிக்குள் ஒளித்துக் கொண்டு மெல்லப் புன்முறுவல் பூத்தார். இதுபோன்ற தருணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அப்படி தற்செயலாக இந்தப் பார்வை சந்திப்பு அமைந்துவிட, அது தன் வேலையை சுலபமாக்கிவிட்டது என நிம்மதி கொண்டார். ஆமாம், ராமனின் திருமணத்தை தான் முடித்து வைக்க வேண்டிய பிராயசித்தத்துக்கு, ராமனே பிள்ளையார் சுழி போட்டுவிட்டதில் அவருக்கு பரம திருப்தி! இந்த கணநேர சம்பவத்தை கவனித்தாற்போல காட்டிக் கொண்டால், ராமனின் மனதில் காதல் வளர்வதில் தயக்கம் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட அவர்,  எதையும் பார்க்காதது போல இயல்பாக நடந்தார். ஆனால் அவர்களை உளமாற ஆசீர்வதித்தார்.  
தம்பி லட்சுமணன் குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தான். முன்னால் சென்ற அண்ணனின் பாதங்களில் மட்டுமே அவனது பார்வை பதிந்திருந்தது. சீராகப் போய்க் கொண்டிருந்த அண்ணன் ஒரு கட்டத்தில் கொஞ்சம் தடுமாறுவதை உணர்ந்தான். அவனது அனுபவத்தில் அது மிகவும் புதியது. பாதையில்  பள்ளமோ அல்லது கல்லோ இடறினால் கூட ராமனின் உறுதியான நடையில் தொய்விருக்காது. ஆனால் சீரான இந்தப் பாதையில் அவன் கொஞ்சம் தயங்குகிறான் என்றால் இந்தத் தடைக்குச் சாலைத் தடங்கல் காரணமில்லை என்பது லட்சுமணனுக்குப் புரிந்தது.  
அது மனதளவில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஏதோ ஒரு சலனம். ராமனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் நடையில் வேகம் குறையாமல் இருந்ததால், அவரால் அந்தச் சலனம் ஏற்பட்டிருக்காது என ஊகித்தான். பார்வையை அவன் சற்று உயர்த்தியபோது அரண்மனை உப்பரிகையிலிருந்து ஒரு நிலவு உதிப்பதைக் கண்டான். சட்டென புரிந்து கொண்டான். அந்தப் பூரண நிலவால் அண்ணன் சந்தோஷமாக மன சஞ்சலம் அடைந்திருப்பானானால் அது அவனுக்கும் சந்தோஷமே! ஆக அண்ணன் மனதில் காதல் அரும்பத் தொடங்கியிருக்கிறது! ராமன் மனதில் தோன்றியிருக்கிறது என்பதால் அந்தக் காதல் புனிதமானதாக இருக்க முடியும். என்ன வேடிக்கை, முதன் முதலாக தாடகை என்ற பெண்ணை வதைத்த ராமன், இப்போது வேறொரு பெண்ணால் வதைபட்டுக் கொண்டிருக்கிறான்! இந்த காதல் வெற்றி பெற வேண்டுமே என பிரார்த்தித்துக் கொண்டு முனிவரையும், அண்ணனையும் தொடர்ந்தான் லட்சுமணன்.
 மன்னர் ஜனகரின் அரண்மனையை அடைந்தார் விஸ்வாமித்திரர். அவரை எதிர்கொண்டழைத்த ஜனகர் சம்பிரதாயப்படி உபசரித்து, மாளிகை ஒன்றில் மூவரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.
இனிய மணம் மிக்க அந்த மாளிகையில் எங்கு நோக்கினாலும், அங்கே கண்களில் புகுந்து மனதில் தங்கிய காரிகையின் உருவத்தையே ராமன் கண்டான். அறுசுவை உணவைக் கூட உண்ண மனமில்லாமல், ஏற்கனவே தன் வயிற்றுப் பசியைப் போக்கிய அந்த மோகனப் பார்வையிலேயே லயித்து விட்டான். அவனுடைய மனம் போலவே வயிறும் நிறைந்துவிட்ட பிரமை! மிகவும் மிருதுவான பட்டு மெத்தையே ஆனாலும் அதிலும் அவனால் உறக்கம் கொள்ள முடியவில்லை. அயோத்தி அரண்மனை சுகவாசத்திலிருந்து வெளியே வந்து முனிவருடன் எளிய முறையில் உண்டு, உறங்கி வந்த அவனுக்கு மீண்டும் அயோத்தி மாதிரியான ராஜபோகம் இந்த மிதிலையில் கிட்டியபோதும் அதை அனுபவிக்க இயலாமல் ஏக்கம் கொண்டிருந்தான்.
அவனுடைய அவஸ்தையை விஸ்வாமித்திரர், லட்சுமணன் இருவரும் கவனித்தனர். இருவருக்குமே ஒரே எதிர்பார்ப்பு – ராமனைத் தன் கண்ணால் கவர்ந்த காரிகையே அவனுடைய கரம் பற்ற வேண்டும்.
இரவுப் பொழுது மிக நீண்டதாக இருந்ததை உணர்ந்து ராமன் பெருமூச்சு விட்டான். மறுநாள் பொழுது விடிந்தாலும், தன் மனதிற்கு விடிவு கிடைக்குமா, அந்தப் பேரழகியை மீண்டும் சந்திக்க முடியுமா என்ற ஏக்கம் அதிகரித்தது. ஆனாலும் அன்றாட கடமைகளை அவன் ஒத்திப்போடாமல் மேற்கொண்டான்.
‘மன்னர் ஜனகரை சந்திக்கலாம்’ என்று  விஸ்வாமித்திரர், சகோதரர்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். சற்று  தொலைவிலிருந்த யாகசாலையில் இருந்து ஹோமப்புகை நறுமணம் கமழ வீசுவதை உணர்ந்து அங்கே சென்று  வேள்வி இயற்றிக் கொண்டிருக்கும் ஜனகரை சந்திப்பது எனத் தீர்மானித்துக் கொண்டார்.
வேள்விச்சாலையில் அவர்களை மனமும், முகமும் மலர வரவேற்றார் ஜனகர். அவர்களுக்கு உரிய ஆசனங்கள் அளித்து பெருமைப்படுத்தினார். பூரண ஆஹுதி அளிக்கப்பட்டு யாகம் முழுமை பெற்ற போது அனைவருக்கும் பிரசாதம் தரப்பட்டது. ஜனகர் தம் கைகளாலேயே முனிவருக்கும், ராம, லட்சுமணனுக்கும் வழங்கினார். பிறகு முனிவரிடம் சகோதரர்களைப் பற்றிய விபரம் கேட்டார்.
விஸ்வாமித்திரர் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் அவர்களைப் பற்றி தெரிவித்தார்.  சீர்மிகு அயோத்தியின் இளவல்கள் அவர்கள் என ஆரம்பித்து  சித்தாஸ்ரமத்தில் மேற்கொண்ட யாகம் முழுமையாக நிறைவேற அவர்கள் உதவியதையும் நன்றியுடன் குறிப்பிட்டார். முக்கியமாக ராமனின் பராக்கிரமத்தை விவரித்தார். தாடகையை அவன் வதைத்த லாவகம், சுபாகுவை வீழ்த்திய தீரம், மாரீசனை கடலில் ஆழ்த்திய அவனுடைய வில் திறம்,  அகலிகைக்கு சாப விமோசனம் அளித்த தெய்வீகம் என்று அனைத்தையும் உணர்ச்சி பொங்க விளக்கினார். அவற்றை கேட்டு பெரிதும் மகிழ்ந்த ஜனகர் அப்போதே மனதிற்குள் ஆறுதல் அடைந்தார். ஆமாம்... சீதைக்கேற்ற கணவன் கிடைத்து விட்டான். இவன் வெறும் ராஜகுமாரன் அல்ல, வீர, தீர பராக்கிரமம் மிகுந்தவன். அதே சமயம் அரக்கி என்றாலும் தாடகையைக் கொல்லத் தயக்கம் காட்டியவன். இதிலிருந்து அவன் பெண்மையைப் போற்றுபவன் என்பது புரிகிறது. அதனால் அவனைக் கரம் பற்றும் பெண், நிம்மதியுடன் வாழ முடியும். அத்தகைய அதிர்ஷ்டசாலி தன் மகளாக இருந்தால்  அதைவிடப் பேறு வேறு என்ன இருக்க முடியும்?
‘ஆனால்…  ஒரு நிபந்தனை விதித்திருக்கிறேனே! சீதையின் பேராற்றலுக்கு நிகராக, ஏன் அதையும் விட பேராண்மை மிகுந்தவனுக்குதான் அவளை மணமுடிப்பேன் என அறிவித்திருக்கிறேனே! அதாவது  சிவதனுசை வளைத்து நாணேற்றும் திறம் படைத்தவனாக அவன் இருக்க வேண்டும் என்று விதித்துவிட்டேனே! அதை ராமனால் சாதிக்க முடியுமா? தோற்றத்தில் பாலகனாகக் காணப்படும் இவன், என்னதான் வில்லுடன் இருந்தாலும், சிவதனுசில் நாணேற்றும் அளவுக்கு பலம் கொண்டவனா? ஆனால், தாடகை, சுபாகுவை அனாயசமாகக் கொன்றிருக்கிறான் என்று விஸ்வாமித்திரர் விளக்கிய பிறகு, இந்த பாலகத் தோற்றத்துக்குள் குடியிருக்கும் பராக்கிரமத்தை உணர முடிகிறது. ஆகவே இவன் சாதிப்பான்’’  என மனதிற்குள் சொல்லிக் கொண்டார் ஜனகர்.
ஆனால் ராமனை எதுவும் கவரவில்லை. அவனது மனதிற்குள் அந்த கன்னிமாடக் காரிகையே நிறைந்திருந்தாள்.
ஜனகரின் நிபந்தனையை ஏற்கனவே அறிந்த விஸ்வாமித்திரர், ‘‘நாளைக்கு உன்னுடைய ஆற்றலை இந்த விதேக நாடு அறியப் போகிறது. சிவதனுசை வளைத்து நாணேற்றி, இதுவரை யாரும் புரியாத சாகசத்தை சாதித்துக் காட்டப் போகிறாய்’’ என ராமனிடம் தெரிவித்தார்.
தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர்ந்து புன்னகைத்தான்.
‘‘இன்னொரு விஷயம். சிவதனுசை வளைக்கும் உனக்கு தன் மகள் சீதையை ஜனகர் மணமுடித்துத் தரப் போகிறார்’’  என விஸ்வாமித்திரர் சொன்னபோது உற்சாகத்தை இழந்து சோர்ந்து போனான் ராமன்.
‘அடடா, அப்படியென்றால் நான் பார்த்த பேரழகியை மணக்க முடியாதா? அவள் யாராக இருப்பாள்? அரண்மனை கன்னிமாடத்தில் காட்சி தந்தாள் என்பதற்காக அவளே சீதையாக இருப்பாள், இருக்க வேண்டும் என மனம் துடிக்கிறதே, இது நிஜமாகிவிட வேண்டுமே’  என்று தவிக்க ஆரம்பித்தான் ராமன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar