Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பு என்னும் நெருப்பு
 
பக்தி கதைகள்
அன்பு என்னும் நெருப்பு



பளிங்கும் கண்ணாடியும் சேர்ந்து இழைக்கப்பட்டிருந்தது அந்த அறை. அறையில் நடுநாயகமாகப் பச்சைப்புடவைக்காரியின் பொன் வண்ணச்சிலை வைக்கப்பட்டிருந்தது. மேஜையில் டாக்டர் பாரதி என்ற பெயர்ப்பலகை இருந்தது.
பாரதிக்கு 45 வயது இருக்கும். கம்பீரமும் கருணையும் சரியான விகிதாச்சாரத்தில் கலந்து அவளைப் பேரழகியாக்கியிருந்தது.  அவள் குழந்தைநல மருத்துவர்.
“எங்க குடும்பத்தை பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்”
தெரியும். கோடீஸ்வரர்கள். பென்ஸ் காரும் ஆடிக்காரும் வைத்திருக்கிறார்கள்.  ஊருக்கு வெளியே அரண்மனை போன்ற வீடு. ஒரே மகள். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
“எங்க வீட்டுக்காரர் மாதவனைப் பத்தியும் தெரிஞ்சிருக்கலாம்”
புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவர். நல்ல மனிதர். தர்ம, நியாயத்திற்கு உட்பட்டு தொழில் நடத்தும் சிலரில் அவரும் ஒருவர்.  ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ்  மையம், குறைந்த செலவில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை என பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். மானுடம் என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
“இன்னிக்கு எத்தனை பேர் வீட்டுப் பூஜை ரூம்ல என் வீட்டுக்காரர் படம் இருக்குன்னு தெரியுமா?”
தெரியும்.
“நல்ல மனுஷங்களாப் பாத்துப் பாத்து ஏன் சார் பச்சைப்புடவைக்காரி சித்ரவதை பண்றா? கொரோனா காலத்துல மக்களைச் சுரண்டி கோடிக்கணக்குல கொள்ளையடிச்ச வி.எம். ஆஸ்பத்திரி எம்.டி. நல்லா இருக்காரு. அவர் பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் பேசி முடிச்சிருக்காரு. பல லட்ச ரூபாய்க்கு எங்க சொந்தக் காசச் செலவழிச்சி இலவசமாச் சிகிச்சை பண்ண என் கணவருக்குப் பிரச்னை”
“என்ன”
“எங்க ஒரே பொண்ணு கீர்த்தனா ஒரு மாசத்துக்கு முன்னால தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கா. காப்பாத்திட்டோம். காதல் தோல்வி. பித்துப் பிடிச்சவ மாதிரி உக்காந்திருக்கா. ஹவுஸ் சர்ஜனா இருக்கா. ஆஸ்பத்திரிக்கும் போகாம, படிக்காம படுக்கையிலயே உக்காந்திருக்கா. எதுவும் பேச மாட்டேங்கறா. சரியா சாப்பிட மாட்டேங்கறா,  
அவள அப்படிப் பாத்ததுல  என் வீட்டுக்காரருக்குப் மைல்ட் அட்டாக் வந்திடுச்சி.. காப்பாத்திட்டோம். இப்போ ஆஸ்பத்திரிலதான் இருக்காரு. எதுவும் பேசாம எங்கயோ வெறிச்சிப் பாத்துக்கிட்டு உக்காந்துருக்காரு. நாங்க என்ன பாவம் செஞ்சோம்”
தொடர்ந்து பல நிமிடங்கள் புலம்பினாள். நான் விடைபெற்றேன்..
“அடுத்து எப்போ பாக்கலாம்?”
“அதோ அங்க தங்கச்சிலையா இருக்காளே அவதான் சொல்லணும்..”
யாருடைய கர்மக்கணக்கிலும் குறுக்கிடுவதாக இல்லை. பாரதி, மாதவனை காப்பாற்றுவது பச்சைப்புடவைக்காரியின் பாடு.
“இப்படியா வழிய மறிச்சிக்கிட்டு குறுக்க நிப்பாங்க?” குறுகிய நடைபாதையில் நின்ற பெண்ணிடம் கோபமாகக் கேட்டேன்.
“தேவையில்லாமல் நான் உன் வழியில் நிற்க மாட்டேன். அவசியம் இல்லாமல் யாரையும் உன்னிடம் புலம்ப விடமாட்டேன்.”
அன்னையை விழுந்து வணங்கினேன்.
“பாரதி – மாதவனைப் பற்றி ஏதாவது பிரார்த்தித்தால் அடுத்தவரின் கர்மக்கணக்கில் ஏன் குறுக்கிடுகிறாய் எனக் கேட்பீர்கள்.”
“உன் அன்பைச் சோதிக்கத்தான் அந்தக் கேள்வி. யாருடைய கர்மக்கணக்கிலும் குறுக்கிட மாட்டேன் என்ற கொள்கை வைத்துக் கொண்டால் உன்னால் யாருக்காகவும் பிரார்த்தனை செய்ய முடியாது. உன் மனதில் இருக்கும் அன்பு  செத்து விடும்.”
“நான் என்னதான் செய்யட்டும் தாயே”
“நாளை மாதவனைப் பார். பாரதியும் கூட இருக்கட்டும்.”
மாதவனின் படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். அருகே பாரதி அமர்ந்திருந்தாள். அவள் ஆதுாரத்துடன் கணவரின் தலையைத் தடவிக்கொடுத்த காட்சி மனதிற்கு இதம் அளித்தது. ‘தாயே இவர்கள்  குடும்பத்தில் மகிழ்ச்சி தீபம் மீண்டும் எரிய வேண்டும்’ என பிரார்த்தித்தேன்.
மாதவனின் கைகளை இறுகப் பற்றினேன். என் உடல் சிலிர்த்தது. அந்தச் சிலிர்ப்பில் எனக்கு அனைத்தும் புரிந்தது.
“உங்க அந்தரங்க வாழ்க்கையப் பத்திப் பேசப்போறேன். உங்க மனைவி இருக்கலாமா”  கணவனும் மனைவியும் அதிர்ந்தார்கள்.
 “பாரதி என் மனைவி மட்டுமில்ல; என்னப் பெத்த தாய்க்கும் மேல. இவகிட்ட  எதையும் மறைக்க விரும்பல”
பாரதியின் கண்கள் நிறைந்து விட்டன.
ஒற்றை வார்த்தை வெடிகுண்டை மாதவன் மீது போட்டேன்.
“வித்யா.”
மாதவன் திடுக்கிட்டுப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்..
 “உங்ககூட மெடிக்கல் காலேஜ்ல படிச்சவங்க.  நீங்க உயிருக்குயிராக் காதலிச்சவங்க.  நீங்கதான் உலகம்னு வாழ்ந்தவங்க. வாழ்ந்துக்கிட்டிருக்கறவங்க. உங்கம்மாவுக்கு வித்யாவப் பிடிக்கல. அதனால நீங்களும் அவங்கள அம்போன்னு விட்டுட்டீங்க.
உங்களால வித்யாவ மறந்து இன்னொரு பொண்ணக் கட்டிக்கிட்டு குழந்தை பெத்துக்க முடிஞ்சது. ஆனா வித்யாவால  முடியல டாக்டர். இன்னும் உங்களயே நெனச்சிக்கிட்டிருக்காங்க. ஒரு மனநல மருத்துவமனையில நடைப்பொணமா வாழ்ந்துக் கிட்டிருக்காங்க. வித்யாவுக்கு நீங்க செஞ்சத விதி உங்க மகளுக்குச் செஞ்சிருக்கு.”
மாதவன் அழுது கொண்டிருந்தார். பல  நிமிடங்கள் அங்கே மவுனம் நிலவியது.
திடீரென பாரதி கத்தினாள்.
“இத உங்ககிட்டச் சொல்லல, உங்களக் கொத்தடிமையாக் கொண்டவகிட்ட சொல்றேன். என் புருஷனோட கர்மக்கணக்குல எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது. அதுக்கு என் உயிரையே கொடுக்கவும் தயாரா இருக்கேன். வித்யா உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் கூட்டிக்கிட்டு வந்து எங்க வீட்டுல வச்சிப் பாத்துப்பேன். தேவைப்பட்டா அவளுக்கு ஒரு தாதியா, ஆயாவா இருக்கவும் தயங்க மாட்டேன். நான் அவளுக்குச் செய்யற சேவையில அவ மகிழ்ந்துபோய் என் புருஷன மன்னிக்கணும். இத எங்க பொண்ணு நல்லா இருக்கணுங்கறதுக்காகச் செய்யல. என் புருஷனுக்கு யாராலயும் எந்த விஷயத்துலயும் கெட்ட பேர் வரக் கூடாது, அவர் கணக்குல எந்தப் பாவமும் சேரக்கூடாதுனு தான் செய்யறேன்.
இதுக்கும் மேல ஏதாவது செய்யணும்னு உங்களுக்குத் தோணிச்சின்னா அதையும் கூட  செய்யறேன்”
பாரதியையே பார்த்தபடி சில நொடிகள் அசையாமல் அமர்ந்திருந்தேன். என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள் உத்தரவு கொடுத்துவிட்டாள். மெதுவாக எழுந்து நின்று பாரதியிடம் சென்று அவள் முன் தலைகுனிந்தேன்.
“உங்க கைய என் தலையில வச்சி ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா.  உங்க மனசுல இருக்கற அன்ப பாத்தா உங்களுக்கும் பச்சைப்புடவைக்காரிக்கும் எனக்கு வித்தியாசம் தெரியலம்மா. உங்களவு அன்பு என் மனசுலயும் வரணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா.”
அழுதபடியே பாரதி என் தலையில் கைவைத்தாள்.
மாதவன் பலவீனமாகப் பேசினார்.
“எங்க பொண்ணு நிலை...”
“இதோ இவங்க – டாக்டர் பாரதி – என் தலையில கைவச்சி வாழ்த்தின மாதிரி உங்க பொண்ணு தலையில கைவைச்சாங்கன்னா எல்லாம் சரியாயிரும் டாக்டர்”
பாரதியைப் பார்த்துக் கண்ணீர்மல்கக் கைகூப்பி விடைபெற்றேன்.
மருத்துவமனை வாசலில் ஒரு நர்ஸ் என்னை தடுத்தாள்.
“என்னப்பா கட்சி மாறிவிட்டாய்? பச்சைப்புடவைக்காரி வேண்டாம், பாரதியே போதும் என்று சொல்லிவிட்டாயே!”
அவள் காலில் விழுந்து வணங்கினேன்.
“இன்று உங்கள் அடிமையோடு விளையாட வேண்டும் என முடிவு செய்துவிட்டீர்களாக்கும்? தன் கணவரின் முன்னாள் காதலிக்கு ஆயாவாக வேலை செய்யவும் தயார் என்று சொன்ன அன்பு, அதையும் தன் பெண்ணின் வாழ்க்கைக்காகச் செய்யாமல் தன் கணவரின் கர்மக்கணக்கை நேர் செய்வதற்காகச் செய்கிறேன் என்று சொன்ன பாசம்.... தாயே அவளிடத்தில் நான் உங்களையே பார்த்தேன். நான் செய்தது தவறா?”
“நிச்சயம் இல்லை.”
“இனிமேல் என்ன நடக்கும்”
“பாரதியின் அன்பு என்னும் நெருப்பு மாதவனின் கர்மக்கணக்கு என்ற காட்டை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. அவர்களின் மகள் அமோகமாக வாழ்வாள். மீண்டும் சந்திப்போம்”
“என்மீது கோபமா, தாயே? உனக்கு ஏதாவது வேண்டுமா என்று ஒரு பேச்சுக்குக்கூட கேட்கவில்லையே”
“அன்பானவர்களிடம் என்னையே காணும் பேற்றை கொடுத்து விட்டேனே! அதற்கு மேல் யாராலும் உனக்கு எதுவும் கொடுக்க முடியாது”
என்னை அழவிட்டு விட்டு மறைந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.



 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar