Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யுகம் கடந்தும் போற்றப்படுபவர்
 
பக்தி கதைகள்
யுகம் கடந்தும் போற்றப்படுபவர்


ஜனகர்
‘ராஜரிஷி’ என்று வர்ணிக்கப்பட்ட மகான். தர்மம், நியாயம், நேர்மை, பெருந்தன்மை என மனித குலத்துக்கென்று என்னவெல்லாம் நற்குணங்கள் உண்டோ அத்தனையையும் ஒருங்கே கொண்ட உத்தமர்.
சிந்தை கலங்காதவர். எந்த சூழ்நிலைக்கும் மனம் பாதிக்கப்படாதவர். சந்தோஷம் என்றால் துள்ளி குதிப்பதும், சோகம் என்றால் துவண்டு விடுவதும் அதுநாள்வரை அவரது வாழ்க்கையில் – பால பருவத்திலிருந்தே நடந்ததேயில்லை. எல்லா சந்தர்ப்பங்களையும் ஒன்று போல பாவித்ததாலேயே அவரால் பல நிகழ்கால நடப்புகளையும், எதிர்கால விளைவுகளை அனுமானிக்க முடிந்தது. அந்த அனுமானமெல்லாமே உண்மையானதில் அவருடைய தீர்க்கமான மனோநிலையின் வெற்றி அமைந்தது.
தன் குருநாதர் பஞ்சசிகரிடம் ஆன்ம ஞானம் பயின்றவர் ஜனகர். எந்தச் சூழ்நிலையிலும் தன் மனதைத் தளரவிடாத ஆன்ம பலம் பெற்றவர். ஒரு மன்னராக இருந்தும் வேதம், சாஸ்திரம், புராணம், கடவுள் தத்துவம் என அனைத்தையும் கற்று மேன்மையடைந்தவர். அதனாலேயே முனிவர்களையும், ரிஷிகளையும், வேத விற்பன்னர்களையும் பெரிதும் போற்றி மகிழ்ந்தார்.  
இவருடைய மன வலிமையை சோதிக்க விரும்பினார் பஞ்சசிகர். பேரழகியாகத் தான் உருமாறினார். ஆனால் சந்நியாசினியாகக் கோலம் கொண்டார். ஜனகரின் அரச மண்டபத்துள் நுழைந்தார். தன் பெயர் சுலபை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நேர்பார்வையாக ஜனகரை நோக்கினார்.
அவையில் கூடியிருந்த அனைவரும் சுலபையின் வியக்கவைத்த அழகில் மயங்கினர். இத்தனை எழில் கொண்ட பெண் ஏன் சந்நியாசினியாக ஆனாள் என்று ஏங்கவும் செய்தனர். அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துப் பார்த்து மனமிழந்தனர்.
ஆனால் சுலபையோ ஜனகர் மீதே குறி வைத்தாள். ஆனால் அவர் சிறிதும் கலங்கவில்லை. மிகவும் யதார்த்தமாக, அவளை ஒரு முனிவர் என்ற அங்கீகாரத்தோடு மட்டுமே வரவேற்று இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார். மயக்கும் புன்னகையை வீசிய சுலபை, தன் தெய்வீக சக்தியால் அவருடைய உள்ளத்தை ஊடுருவி மயக்கினாள். அவருடைய கண்கள், இதயம், ஏன் உடலெங்கும் அவள் வியாபித்தாள்.
ஒருகணம் தன்னை இழந்த ஜனகர் உடனே சுதாரித்துக் கொண்டார். கோபம் மிகுந்தது. ‘‘முனி நங்கையே உம்மை நான் வணங்குகிறேன். ஆனால் என்னுள் நீங்கள் அத்துமீறி நுழைவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இப்படி ஒரு வரம்பு மீறிய அதர்மச் செயலைச் செய்ய எப்படி முடிகிறது? வெட்கமாக இல்லையா உங்களுக்கு...?’’ என்று சினத்துடன் வார்த்தைகள் அவர் வாயிலிருந்து சீறிப் பாய்ந்தன.
உடனே கலகலவென்று சிரித்தாள் சுலபை. ‘‘நீங்கள் ஒரு ஞானவான், ராஜரிஷி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்படி கோபத்தை வெளிப்படுத்தி நீங்களும் சாமானியர்தான் என்பதை நிரூபித்து விட்டீர்களே’’ என்று கேட்டு கேலி செய்தாள்.
திடுக்கிட்ட ஜனகர் தன் நிலை உணர்ந்து வெட்கம் கொண்டார். ‘‘என்னை மன்னித்து விடுங்கள், அம்மா. தங்களுடைய எந்த வசீகரத்திற்கும் நான் ஆட்பட்டிருக்கக் கூடாது. அது என் பிழைதான்…’’ என்று தழுதழுத்த குரலில் தன் குறையை ஒப்புக் கொண்டார்.
அப்போது பளிச்சென்று சுலபை மறைந்து அங்கே பஞ்சசிகர் தோன்றினார். ‘‘மன்னா, உன்னுடைய மன திடத்தை சோதிக்கதான் நான் இந்த உபாயத்தைக் கையாண்டேன். இவ்வாறு செய்தது தவறுதான் என்றாலும், நீ சூழ்நிலை உணர்வுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதை போதிக்கவும்தான் இப்படிச் செய்தேன்…’’ என்றார் பஞ்சசிகர்.  
 ராஜ பரிபாலனம் செய்வதாலேயே தன்னால் உணர்வைக் கட்டுப்படுத்த இயலவில்லையோ என்று சிந்தித்த ஜனகர், அரசையும், அண்டியவரையும் துறந்து காட்டிற்குச் சென்று எந்தவகை ஆசாபாசங்களுக்கும் ஆட்படாதவகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தீர்மானித்தார். அப்போது அவருடைய மனைவி சுநயனா அவரைத் தடுத்தாள்.
‘‘பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் போவதற்குப் பெயர் துறவு இல்லை. நீங்கள் எத்தனையோ முனிவர்களை, சாமானியர்களை, பலதரப்பட்ட மக்களை மன நிம்மதியுடன் வாழுமாறு பராமரிக்கிறீர்கள். இப்படி ஒரு பொறுப்பைக் கைகழுவி விட்டு, உங்கள் ஆதரவில் வாழ்வோரை அனாதரவாக விட்டுவிட்டுப் போவதாகிய அதர்ம செயலால் பாபம் சேருமே, அதைத் தீர்க்க என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று கேட்டாள்.
பஞ்சசிகரைப் போலவே  தன் மனைவியும் மனதைப் பண்படுத்திய நேர்த்தியை வியந்து பாராட்டினார் ஜனகர். அவள் அறிவுறுத்தியபடி தொடர்ந்து அரசுக் கட்டிலில் அமர்ந்து கூடுதல் நேர்மையுடன் செயலாற்றினார்.
அத்தகையப் பேராண்மை மிகுந்தவராக இருந்ததால் தன்னைச் சுற்றி நிகழும் எல்லா அசைவுகளையும் அவரால் எளிதாக ஊகிக்க முடிந்தது; பிறர் உணர்வுகளையும் அனுமானிக்க முடிந்தது.
இந்த ஜனகர் ஒரு சமயம் குருவின் உபதேசம் கேட்பதற்காக அவருடைய குடிலுக்கு வந்திருந்தார். அப்போது வேறு சிலரும் அவரைப் போலவே வந்திருந்தனர். ஜனகரைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். உணர்வுகள் தனக்கு அடிமை என்ற வகையில் எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்தினராய், ஒளிரும் கண்களுடன், நிர்ச்சலனமாகக் காட்சியளிக்கும் அவர் மீது அவர்கள் பொறாமை கொண்டார்கள் என்றே சொல்லலாம். என்னதான் ராஜரிஷி என்று போற்றப்பட்டாலும, இவரும் ஆசாபாசத்துக்கு உட்பட்ட சாதாரண மனிதரே என்பதை நிலைநாட்ட அவர்கள் விரும்பினர்.
ஆனாலும் குருவின் அனுமதியின்றி ஜனகருக்கு எதிரான திட்டம் எதிலும் இறங்கத் துணியாத அவர்கள், அவரிடம் அனுமதி கோரினார்கள். அவரும் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பியதால் அதற்கு சம்மதித்தார்.
குருவின் போதனையில் ஜனகர் முழு மனதோடு ஆழ்ந்திருந்தார். அப்போது குடிலுக்கு வெளியே ஒரு சீடர் மிகுந்த பதற்றத்துடன், ‘‘எல்லோரும் ஓடி வாருங்கள், மிதிலை அரண்மனை தீப்பற்றி எரிகிறது. அரசியார், இளவரசிகள் தீக்குள் சிக்கிக் கொண்டுவிட்டார்கள்…’’ என்று ஓலமிட்டார். உடனே திட்டமிட்டபடி ஜனகருடன் அமர்ந்திருந்த பிற சீடர்கள் விழுந்தடித்துக் கொண்டு குடிலுக்கு வெளியே ஓடி வந்தனர். ஆனால் ஜனகர் சற்றும் அசரவில்லை.
அவருக்கு தீ பற்றிய ஓலக்குரல் கேட்கத்தான் செய்தது, உடனிருந்தவர்கள் பதறி ஓடியதும் தெரிந்தது. ஆனாலும் அமைதியாகவே இருந்தார். காரணம் தன் மனோதிடம் காரணமாக அந்தச் சூழ்நிலையை அவரால் எளிதாக அனுமானிக்க முடிந்தது. ஓலக்குரலின் போலித்தனம், வெளியேறியவர்களின் வேகத்தில் காட்டப்படாத பரபரப்பு, அதற்கும் மேலாகத் தன் அரண்மனை தீப்பிடிக்க முடியாதது, அப்படியே தீ பற்றினாலும், அதை உடனே அணைத்து, எந்தவகை சேதமும் ஏற்படாதவகையில் காக்கும் பயிற்சி பெற்ற தன் வீரர்கள் என எல்லாவற்றையும் ஒரே கணத்தில் மனதில் ஓடவிட்டு அமைதி காத்தார் ஜனகர்.
இந்த சம்பவம் மூலம் ஜனகரைப் பற்றி சீடர்களுக்கு புரியவைத்தார் குரு முனிவர்.
பொதுவாக ஒருவர் ஞானியாகத் திகழ்ந்தால் அவர் அந்த ஒரு ஜன்மத்தில் பிறரால் போற்றப்படுபவராக இருப்பார். ஆனால் ஜனகரோ அடுத்த யுகத்திலும் பாராட்டப்பட்டார்.  பகவான் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தபோது,
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யன்கர் தும்ர்ஹஸி (அத்தியாயம் 3, ஸ்லோகம் 20) என்று வர்ணிக்கிறார்.
‘‘ஜனகரும் அவரைப் போன்றவர்களும் தாம் இயற்றிய கர்மத்தாலேயே முக்தியடைந்தவர்கள். அவர்களைப் போல உலகத்தை நல்வழியில் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இரு’’ என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார்.  
குடிமக்களை நல்வழிப்படுத்துவதுதான் ஒரு மன்னனின் தலையாய கர்மாவாகும். அந்த மன்னன் எந்த தவறும் இன்றி கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பலனில் பற்று வைக்காவிட்டால் தான் இப்படிப் பணியைத் தொடர முடியும். அதாவது ஜனகரைப் போன்ற ஞானிகளால் தான் முடியும் என்கிறார் கிருஷ்ணர்.
இவ்வாறு யுகத்தையும் கடந்து போற்றப்படுபவர்தான் ஞானி. அத்தகையவர் ஜனகர்.
அந்த ஜனகர், இப்போது தன் மகள் சீதையை மணப்பதற்காகவே வந்திருக்கிறான் ராமன் என்பதை ஊகித்தறிந்து மகிழ்ந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar