எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர். அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது. அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர். அணிலே! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது. பாறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதே. ஒதுங்கிப் போய்விடு என்றனர். ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. ராம சேவகர்களே! எனக்கொரு உதவி செய்வீர் களா? நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது தான் அதற்கு காரணம். இந்தப் பதிலைக் கேட்ட சில வானர வீரர்கள் அந்த அணில் மீது சந்தேகமும் அச்சமும் கொண்டன.
இந்த அணில் ஏன் ராமபிரானைச் சந்திக்க வேண்டும்? ஒருவேளை மாயாவி அரக்கன் அணில் வடிவில் இங்கு மாயாஜாலம் செய்து கொண்டிருக்கிறானோ! அவனால் ராமபிரானுக்கு ஆபத்து ஏற்படுமோ! பாலத்தைத் தகர்க்க வந்துள்ளதோ என்று சந்தேகப்பட்டனர். வானரவீரர்கள் அணிலிடம் பேசிக் கொண்டிருந்ததை அஞ்சனை மைந்தன் அனுமன் கவனித்து விட்டார். அவரது கண்களில் அனல் பறந்தது. ஏ வானரங்களே! காலம் பொன்னானது. கடமை கண்ணானது. பாலம் கட்டும் புனிதப்பணியின் போது நேர விரயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அணிலிடம் என்ன வீண்பேச்சு! என்று கர்ஜித்தார். அந்த அணிலைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டுஅணிலே! ஏன் குறுக்கும் நெடுக்குமாக ஓடி எங்கள் பணிக்கு இடையூறு செய்கிறாய்? உன் எண்ணம் தான் என்ன? நீ உண்மையில் அணிலா? அரக்க சக்தியா? உண்மையைச் சொல்! என்று ஆவேசமாகக் கேட்டார். அணில் சிறிதும் அச்சம் கொள்ளவில்லை.
சொல்லின் செல்வரே! எளியேனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்! உங்களைப் போல எனக்கும் ராமபிரானுக்கு சேவை செய்ய ஆவல். ஆனால் உருவில் சிறியவன். உங்களைப் போல எனக்கும் பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று தான் எண்ணம். ஆனால் அந்த வலிமை எனக்கில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள். அதனால் கடற்கரை மணலில் புரண்டு என் உடலில் ஒட்டும் மணலை சேதுவில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் விட பேராசை எனக்கொன்று இருக்கிறது. சத்திய சொரூபமான ராமனைக் கண்குளிரத் தரிசிக்கவேண்டும். அண்ணல் என்னைத் தொட்டால் போதும்! பிறவி எடுத்த பெரும்பயனை அடைவேன் என்று கூறியது கண்ணீருடன்! அணிலின் கண்களில் ததும்பிய அந்த கண்ணீர் அனுமனின் கரங்களைத் தீண்டியது. அணிலின் பேச்சைக் கேட்ட அனுமனின் கோபம் நொடியில் மறைந்தது. அர்ப்பணிப்பு உணர்வுடன் அணில் செய்த அந்த சிறுபணி மலைபோல அனுமனுக்குத் தோன்றியது. கருணை பொழியும் ராமச்சந்திர மூர்த்தியிடம் அணிலை ஒப்படைத்த அனுமன் நடந்த விபரத்தை ஒன்றுவிடாமல் தெரிவித்தார். அன்புணர்வோடு அணிலை தன் மடியில் வைத்துக் கொண்ட ராமன் தன் கரங் களால் மென்மையாக வருடிவிட்டார். ராமனின் பொற்கரங்கள் பட்டதால் அதன் உடம்பில் அன்பின் அடையாளமாக மூன்று கோடுகள் உண்டானது. அது ராமச்சந்திர மூர்த்தியின் நெற்றியில் இட்ட திருநாமம் போல காட்சியளித்தது. அந்த அன்பின் அடையாளத்தை அதன் சந்ததிகள் இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. பிறரது நலனுக்காக நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற உண்மையை உணர்த்திய அணிலை வானர வீரர்கள் போற்றி மகிழ்ந்தனர்.