|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அன்புள்ள அப்பா |
|
பக்தி கதைகள்
|
|
ஒருநாள் மாலையில் சிறுவன் நரேனை அழைத்துக் கொண்டு அவனது அப்பா காட்டிற்குச் சென்றார். ‘‘நரேன்... நான் விடுக்கும் சவாலில் வெற்றி பெற்றால் பெரிய வீரனாகி விடுவாய். இன்றிரவு தனியாக நீ காட்டில் இருக்க வேண்டும். உன் கண்களை இப்போது கட்டி விடுவேன். ஆனாலும் பயப்படக்கூடாது; கட்டை அவிழ்த்துக் கொண்டு இங்கிருந்து கிளம்ப முயற்சிக்க கூடாது” என்றார். நரேனும் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களை துணியால் கட்டி விட்டு அவனது அப்பா புறப்பட்டார். அவரது காலடி ஓசை மெல்ல மெல்ல குறைந்தது. அப்பா அருகில் இருக்கும் வரை நரேனுக்கு பயம் தெரியவில்லை. ஆனால் இப்போது பறவைகள், விலங்குகள் கத்தும் சத்தம் நடுக்கத்தை ஏற்படுத்தியது. விலங்குகள் தாக்குமோ என்ற பயத்தில் இதயத்துடிப்பு எகிறியது. காற்றடித்ததால் மரங்கள் சலசலத்தன. திடீரென மழை வேறு துாறத் தொடங்கியது. குளிர் காற்று உடலைத் துளைத்தது. ‘‘அய்யோ! இப்படி நடுக்காட்டில் தவிக்க விட்டு அப்பா போய் விட்டாரே! யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்” எனக் கத்தினான். யாரும் வரவில்லை. சிறிது நேரம் கடந்ததும் இனி கத்துவதால் பயனில்லை என உணர்ந்தான். திடீரென மனதிற்குள் துணிச்சல் எழுந்தது. என்ன தான் நடக்கும் பார்ப்போமே என சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை கவனிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் துாக்கம் வர கண்கள் அயர்ந்தான். காலையில் சூரியன் உடம்பைச் சுட்டபோது தான் துாக்கம் களைந்தது. கண் கட்டை அவிழ்த்தான் எதிரில் அப்பா நின்றிருந்தார். ‘’அப்பா” எனக் கத்தியபடி அவரைக் கட்டிக் கொண்டான். “எப்போ வந்தீங்க?” என ஆவலாகக் கேட்டான். ” நரேன்...நான் எப்போது உன்னை விட்டுப் போனேன்” என திரும்பிக் கேட்டார் அப்பா. “ இரவு முழுவதும் இங்கு தான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் அலறிய போது நீங்கள் வாய் திறக்கவில்லை?” என்றான். ‘’உனக்கு தைரியம் வர வேண்டும் நரேன். அஞ்சாத வீரனாக நீ இருக்க வேண்டும் என்பதற்காக மவுனமாக இருந்தேன். பயத்தின் உச்சத்தை எட்டும் போது துணிச்சல் தானாகவே மனதிற்குள் வரும்” என்றார். நரேனுக்கும் உண்மை புரிந்தது. அன்புள்ள இந்த அப்பாவைப் போலத்தான் கடவுளும். எப்போதும் நம்முடனே இருக்கிறார். துன்பத்தில் நாம் தவிக்கும்போது துவண்டு விடாமல் வீர தீரத்துடன் மாற வேண்டும் என்பதற்காக அவரும் வாய் திறப்பதில்லை.
|
|
|
|
|