|
அன்று சதுர்த்தி திதி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம். கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய ஓட்டலில் இருந்து வெளியே வந்தாள் பர்வதம் பாட்டி. இட்லி அவிக்கும் வேலை அவளுக்கு. வயது எழுபது. ‘பிள்ளையாரப்பா...எப்படி உன்னைப் பாப்பேன்..?’ என கொஞ்சம் தயங்கினாள். கிட்டத்தட்ட முப்பது வருஷ பந்தமல்லவா பாட்டிக்கு கற்பக விநாயகரோடு! மனதை தைரியப்படுத்திக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்தாள். சதுர்த்தியன்று தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பவளாயிற்றே... இளம் வயதிலேயே பாட்டியின் கணவர் இறந்து போக, ஒரு வயது குழந்தையுடன் நிர்கதியாய் நின்றார். கணவர் வேலை செய்த சமையல் கோஷ்டியுடன் சேர்ந்து ஊர் ஊராய் அலைந்து.. மகன் கணபதியை வளர்க்க என்ன பாடு பட்டிருப்பாள்? அப்படி ஒருமுறை வெளியூர் சென்ற போதுதான் எட்டு வயது மகன் காணாமல் போனான். எங்கு தேடியும் கிடைக்காமல் போக, கடைசியில் கற்பக விநாயகரே கதியென்று பிள்ளையார்பட்டியில் தங்கி விட்டாள். வருஷங்கள் உருண்டோடி விட்டது. மெதுவாக கோயிலுக்குள் நுழைந்த பாட்டிக்கு அன்று என்னவோ சற்று களைப்பாக இருந்தது. கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்தாள். உள்ளே திரை போட்டிருக்கு என அருகில் இருப்பவர் சொன்னது காதில் விழுந்தது. திடீரென மகன் கணபதி நினைப்பு மனதிற்குள் எழுந்தது. அவளது கைவிரல் வலது காது மடலுக்குச் சென்று, அங்கே இருந்த மச்சத்தைத் தொட்டுப் பார்த்தது. மகனுக்கும் இது போல மச்சம் இருக்குமே என வருந்தினாள். கண்களில் ஈரம் கசிந்தது. நினைப்பை புறம் தள்ளி விட்டு, ‘கணபதி இருக்கும் வரை கவலை இல்லை’ என்னும் பாடலை பாடத் தொடங்கினாள். அன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாத்தி கைங்கரியம் செய்யும் வெளிநாடு வாழ் தொழிலதிபர் ஒருவர், சட்டென்று தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து பாட்டு வந்த திசை நோக்கி வந்தார். திரைக்கு வெளியே நின்றிருந்த குருக்கள், “என்ன ஆச்சு. உங்களுக்கு ஏதாவது அசவுகரியமா?” எனக் கேட்டார். பதில் சொல்லாமல் நடந்தவர், பாடிக் கொண்டிருந்த பாட்டியின் முன்னால் நின்றார். அடுத்த நொடி... அம்மா.... என அவர் கத்த அது எங்கும் எதிரொலித்தது. மறக்கக் கூடிய பாட்டா அது. சிறுவயதில் அடிக்கடி கேட்டுப் பழகியதல்லவா அது. வயது முதிர்ந்தால் என்ன குரல் தளர்ந்தால் என்ன? தாயின் குரலும் அவளின் தாலாட்டும் மறக்குமா என்ன? “இவங்க என் அம்மா...சத்தியமா சொல்றேன்....இங்க பாரும்மா.. ஒன்னோட மகன் கணபதி வந்துருக்கேன்மா.. நாந்தாம்மா.. கணபதி” என்று பாட்டியை உலுக்கினார். அவர் எட்டு வயதில் காணாமல் போய், வெளிநாட்டுக்காரர் ஒருவரால் வளர்க்கப்பட்டு தொழிலதிபர் ஆனது தனிக்கதை. “நீங்க யாரு...எனக்கு தெரியலயே..? எம் புள்ள கணபதி காணாம போயி நாற்பது வருஷமாச்சே’’ என்றவளின் கை, அவரது முகத்தை தடவி காது மடலுக்கு சென்றது. “ஆமா...மா... சின்ன வயசில விரலால தொட்டு பார்ப்பியே... இந்த மச்சத்தை! தன்னையும் அறியாமல் அனைவரும் பார்க்கிற மாதிரி கணபதி...என் கண்ணே....” எனக் கத்தினாள் பாட்டி. தாயின் மடியில் முகம் புதைத்து மகன் அழுத போது சன்னதியில் திரை விலக்கப்பட்டது தங்க கவசத்தில் காட்சி தந்தார் கற்பக விநாயகர். தாயுடன் மகனை சேர்த்து விட்டு சுவாமி புன்முறுவல் புரிவது தீபாராதனை ஒளியில் பிரகாசித்தது.
|
|
|
|