|
‘பாண்டவர்களில் மூத்தவன் நான். எனினும் என் அன்னை குந்தி தேவியின் முதல் மகன் நான் அல்ல. அந்தப் பெருமை கர்ணனுக்கு தான். அர்ஜுனன் வில்வித்தையில் தலைசிறந்தவன் என்பதும் பீமன் கதாயுதப் பயிற்சியில் சிறந்து விளங்குபவன் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் எந்த ஆயுதத்தை மிகச் சிறப்பாக கையாளுவேன் என்பது தெரியுமா? ஈட்டி எய்வதில் நான் மிகச் சிறந்து விளங்கினேன். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானவர்களை ஈட்டியைப் பயன்படுத்தி என்னால் வெல்ல முடியும். இந்த பயிற்சியை எனக்கு அளித்தது கிருபரும், துரோணரும்தான். என் தாயான குந்திதேவியின் கணவர் பாண்டு ஒருமுறை வேட்டையாட காட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது ஒரு முனிவரும் அவர் மனைவியும் சற்றுத் தொலைவில் மான் உருவம் எடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். இருள் சாய்ந்து கொண்டிருந்த அந்தப் பொழுதில் அவர்களை மான்கள் எனத் தவறாக நினைத்த மன்னர் பாண்டு அவர்களை நோக்கி அம்பு வீச, அந்த முனிவர் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் ‘நீ உன் மனைவியுடன் இல்லற சுகம் அனுபவித்தால் உயிரிழப்பாய்’ என்று சாபம் அளித்தார். குந்திதேவி விருப்பப்பட்டு அழைக்கும் கடவுள் மூலம் அவருக்குக் குழந்தை பிறக்கும். துார்வாசரிடமிருந்து இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருந்தார் குந்திதேவி. முனிவரின் சாபத்தால் தனக்கு வாரிசே இல்லாமல் போகிறதே என்று தவித்த மன்னன் பாண்டுவிடம், துார்வாசர் தனக்களித்த வரத்தைக் கூறினார் குந்தி தேவி. பாண்டுவின் வேண்டுகோளின்படி தர்ம தேவனை மனதில் நினைத்தபடி மந்திரத்தைக் கூறினார் குந்தி. அவர்களுக்கு தர்மன் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரனாகிய நான் பிறந்தேன். பின்னர் பல்வேறு காலகட்டங்களில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரும் என் தம்பிகளாகப் பிறந்தனர். வாழ்க்கை முழுவதும் நீதிக்கும் நியாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். பெரியோரை மதித்தேன். ஒரு கட்டத்தில் பெரியோரை மதித்ததன் காரணமாகவே என் வாழ்க்கை தடம் புரண்டது. பெரியப்பா திருதராஷ்டிரரின் அழைப்பை தட்ட முடியாமல் சகுனியுடன் நான் சூதாட சம்மதித்ததைச் சொல்கிறேன். தர்மத்துக்கு முழு முன்னுரிமை கொடுத்து என் வாழ்க்கையை நடத்தியதால் என் தேரின் சக்கரங்கள் தரையைத் தொடாமல் நான்கு விரற்கடை மேலாகவே இருக்கும். பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர் போன்ற ஆசாரியர்களுக்கு நான் என்றால் தனிப் பாசம். என் தந்தை பாண்டு இறந்ததும் பாண்டவர்களாகிய எங்களுக்கும், அவரது மகன்களாகிய கவுரவர்களுக்கும் போர் மூண்டு விடக்கூடாது என்பதற்காக தனது நாட்டின் ஒரு பாதியை எனக்கு அளித்தார் திருதராஷ்டிரர். ஆனால் அது பசுமை இல்லாத பகுதி. என்றாலும் என் சகோதரர்களை சமாதானப்படுத்தி விட்டு அந்த இடத்துக்குச் சென்றோம். அங்கே எங்களுடைய கடுமையான உழைப்பினால் இந்திரப்பிரஸ்தம் என்ற நகரை உருவாக்கி, அதில் ஆட்சி புரியத் தொடங்கினேன். முனிவர்களும் சான்றோர்களில் பலரும் என்னுடைய நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். ராஜசூய யாகம் ஒன்றை நடத்தினேன். என்னுடைய சகோதரர்கள் பல்வேறு திசைகளுக்கும் சென்று பல நாட்டு மன்னர்களை என் குடைக்குள் கொண்டு வந்தார்கள். இதையெல்லாம் கண்ட துரியோதனன் மனதில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. சகுனி ஒரு சதி திட்டத்தைத் தீட்டினான். இதன்படி துரியோதனின் துாண்டுதலின்பேரில் பெரியப்பா திருதராஷ்டிரர் என்னைப் பகடை விளையாட வருமாறு அழைத்தார். தட்ட முடியவில்லை. பகடை ஆட்டத்தில் என் ராஜ்ஜியம், என் சகோதரர்கள், என் மனைவி திரவுபதி மற்றும் என்னையே வைத்து இழந்தேன். இதன் காரணமாக பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் மற்றும் ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருக்க நேரிட்டது. மிகவும் சோதனைகள் நிரம்பிய இந்த காலகட்டத்தை ஒருவழியாக முடித்தோம். அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்களாகிய நாங்களும், எங்களின் மனைவி திரவுபதியும் தனித்தனியாக மாறுவேடத்தில் மத்ய நாட்டு அரசனான விராடனிடம் மாறுவேடத்தில் வேலைக்குச் சேர்ந்தோம். விராட மன்னனின் ஆலோசகராகவும் ஓய்ந்த நேரத்தில் அவருடன் பகடை விளையாடுபவராகவும் நான் விளங்கினேன். அஞ்ஞாத வாசமும் முடிந்ததும் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சூதாட்டத்தில் தோற்ற ராஜ்ஜியத்தை துரியோதனன் எங்களுக்கே கொடுத்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்தேன். அனைவரையும் நல்லவர்களாக கருதுவதுதானே எனது பலம் மற்றும் பலவீனம். ஆனால் அப்படி நடக்கவில்லை. சமாதானமும் சகோதர பாசமும்தான் முக்கியம் எனக் கருதி எங்களுக்கு ஐந்து கிராமங்களை அளித்தால் கூடப் போதுமென்று கூறினேன். அதைக் கூட கொடுக்க மறுத்தான் துரியோதனன். கவுரவர்களை நான் வெறுத்ததில்லை. நான் அவர்கள் குறித்து வெறுப்பு வார்த்தைகளை என்றுமே உதிர்த்ததில்லை. பீமன், அர்ஜுனன், திரவுபதி ஆகிய அத்தனைபேரும் கவுரவர்களுக்கெதிராக கடும் சபதம் எடுத்தனர். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. என் வாழ்வைப் பற்றி அடுத்த இதழில் இன்னும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது.
|
|
|
|