|
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும், சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்மன், யமுனை என்னும் நதி. சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். யமுனையில் வாழ்ந்த காளிங்கன் என்னும் பாம்பைக் அடக்கி கிருஷ்ணர் புனிதப்படுத்தியதால் அனைவரும் யமுனை நதியைக் கொண்டாடினர்.
அதைக் கண்ட சனீஸ்வரன், ‘‘சகோதரியே! உன்னை மங்களமானவள் என்று உலகமே கொண்டாடுகிறது. ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களன் என்றும் பழிக்கிறார்களே... இதிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன்’’ என்றார். அங்கு வந்த நாரதர் அதைக் கேட்டு, ‘‘சனீஸ்வரா! கிருஷ்ணருடன் கிடைத்த நட்பால் உன் தங்கை யமுனை நற்பெயர் பெற்றாள். நீயும் அவரது அன்பை பெற்றால் நன்மை கிடைக்கும். அதற்கு முன்னதாக ேஹாலிகா என்னும் அரக்கியின் வரலாற்றை நீ தெரிந்து கொள்வது நல்லது’’ என்று சொல்ல ஆரம்பித்தார். ‘‘அசுரன் இரண்யனின் மகன் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்தான். இதை விரும்பாத இரண்யன் மகனைக் கொல்லத் துணிந்தான். தன் சகோதரியான ேஹாலிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்தான். ஏனெனில் விசேஷ சக்தி கொண்ட அவளுக்கு தீயின் வெம்மை தாக்காது என்பதால் தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ேஹாலிகா, அவன் வெளியே வரமுடியாதபடி கைகளால் அழுத்தினாள். ஆனால் பிரகலாதனைக் காப்பாற்றினார் மகாவிஷ்ணு . பெண் என்பதால் ஹோலிகாவை அவர் தண்டிக்கவில்லை. அவளோ மகாவிஷ்ணுவை பழிவாங்கத் துடித்தாள். அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தாள். கோகுலத்தில் நந்தகோபரின் மகனாக மகாவிஷ்ணு (கண்ணன்) வளர்வதை கேள்விப்பட்ட அவள், அங்கு சென்று தன் திட்டத்தை செயல்படுத்தப் போகிறாள். அதற்கு முன்னதாக ஹோலிகாவை ஒழித்துக் கட்டினால் நீ மங்கள சனீஸ்வரனாக திகழும் பேறு பெறுவாய்’’ என வாழ்த்தினார் நாரதர்.
திட்டமிட்டபடி ேஹாலிகா கோகுலத்திற்கு சென்றாள். அப்போது கண்ணனும், அவனது நண்பர்களும் தீமைகளை ஒழிக்கும் விதமாக விறகுகளை அடுக்கி தீயிட்டு ஹோலி கொண்டாட தயாராயினர். கண்ணனைக் கொல்லும் நோக்கில் ேஹாலிகா விறகு கட்டுக்குள் ஒளிந்திருந்தாள். அங்கு வந்த சனீஸ்வரன் தன் கொடிய பார்வையை ஹோலிகா மீது செலுத்த, அவளது விசேஷ சக்தி மறைந்தது. விறகில் தீயை மூட்டிய கண்ணன் ஆரவாரம் செய்தான். அதன் வெம்மை தாளாத ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நடந்த விஷயத்தை நாரதர் விவரித்த போது கண்ணனுக்கு உண்மை புரிந்தது. சனீஸ்வரனை வாழ்த்திய கிருஷ்ணர், ‘‘இன்று முதல் நீ மங்களமானவனாகத் திகழ்வாய். சனிக்கிழமையின் அதிகாலைப் பொழுது புனிதமானதாக விளங்கும். கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையில் வெங்கடேசப் பெருமாளாக நான் வீற்றிருப்பேன்.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து என்னை தரிசிப்போரின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்’’ என வரமளித்தார்.
|
|
|
|