|
சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார் அய்யாச்சாமி. அயராத உழைப்பால் ஓட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என தொழிலில் வேகமாக வளர்ந்தார். தான் ஒரு வெற்றியாளர் என அடிக்கடி சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஒருநாள் அவர் வீடு திரும்பிய போது நள்ளிரவு பன்னிரண்டு மணி. அவருக்காக காத்திருக்கும் மனைவி அன்றைக்கு கதவைத் திறக்க வரவில்லை. பணியாளர் தான் வந்தார்.‘‘ஐயா... இன்னிக்கு திடீர்னு அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரி போயிட்டு இப்போ தான் வந்தாங்க... மாத்திரை சாப்பிட்டு துாங்குறாங்க’’
ஏன் என்னாச்சு? பிரஷர் எகிறிடுச்சு. ஓய்வு எடுத்தா எல்லாம் சரியாயிடுமாம். எனக்கு தகவல் சொல்ல வேண்டியது தானே? ஐயா...உங்க போன் ஸ்விட்ச் ஆப் இருந்ததே. அப்போது தான் ஒரு மீட்டிங் போவதற்காக மொபைல் சுவிட்ச் ஆப் செய்தது நினைவுக்கு வந்தது. மனைவியின் அறைக்கு ஓடினார் அய்யாச்சாமி. அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். ‘‘சே.. இத்தனை நாளா இவளை கவனிக்காமல் விட்டு விட்டேனே’’ என வருந்தினார். மனைவியிடம் பொழுதைக் கழித்த இனிய வருடங்கள் நினைவுக்கு வந்தன. பக்கத்து அறையில் மகன் உறங்கிக் கொண்டிருந்தான். டியிலிருந்த தன் அறை நோக்கி சென்ற போது, ‘‘ஐயா சாப்பிடுறீங்களா?’’ எனக் கேட்டார் பணியாளர். மறுப்பு தெரிவித்து விட்டு படியேறினார். . ‘‘இவ்வளவு காலம் பணம் சம்பாதித்து என்ன பிரயோஜனம்? யாருக்காக நான் வாழ வேண்டும்? அப்படி பிசினஸ் செய்து நான் சாதித்தது என்ன’’ என மனம் தத்தளித்தது. இனியாவது மனைவி மீது கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்தார். அப்போது கட்டிலுக்கு அருகில் யாரோ ஒருவர் நிற்பது தெரிந்தது. ‘‘ யார் நீங்க? என்ன வேணும்’’ எனக் கேட்டார்.
‘‘ நான் தான் மரண தேவதை.
உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன்’’ என பதில் கிடைத்தது. திடுக்கிட்டுப் போனார். ‘‘இன்று தான் குடும்பத்திற்காக வாழ முடிவு செஞ்சிருக்கேன்.
இப்போ போய்...’’ என மன்றாடினார்.
ஆனால் அதை மரணதேவதை பொருட்படுத்தவில்லை. ‘‘ எனக்கு ஒரு மணி நேரமாவது அவகாசம் கொடுங்கள். அதற்குள் என் கடமையை செய்து முடிக்கிறேன்’’ என்றார். அதையும் ஏற்கவில்லை. அழுதபடி, ‘‘ஒரே ஐந்து நிமிஷமாவது அவகாசம் கொடுங்கள். ஒரு குறிப்பு மட்டும் எழுதப் போகிறேன்’’ என்றதும் மரண தேவதை சம்மதித்தது. எழுதத் தொடங்கினார். ‘‘
நேரத்தை சரியான வழியில் செலவிடுங்கள். என்னுடைய சொத்து முழுவதையும் கொடுத்தாலும் கூட, எனக்காக ஒரு மணி நேரத்தைக் கூட வாங்க முடியவில்லை.
வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் அனுபவித்து வாழுங்கள்’’ என எழுதிய போது கதவை தட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த அய்யாச்சாமி அறைக் கதவை திறந்தார். பணியாளர் நின்றிருந்தார். ‘‘ஐயா....ரொம்ப நேரமா நீங்க வராததால பயந்துட்டேன் அதான் கதவை பலமாகத் தட்டினேன்.
அதிர்ச்சியுடன் மேஜையை பார்த்தார்.
பேனாவும், நோட்டும் இருந்தன. கண்டது கனவு என்ற உண்மை அவருக்குப் புரிந்தது.
குடும்பத்தினருக்காகவும், இயற்கைகாகவும் நேரத்தை செலவழியுங்கள். வாழ்வைக் கொண்டாடுங்கள். அதுவே நிஜமான வெற்றி.
|
|
|
|