|
அரச மண்டபத்துக்கு சிவதனுசுப் பெட்டி வீரர்களால் இழுத்து வரப்பட்டு நடுநாயகமாக வைக்கப்பட்டது. அத்தனை கனம்! ஒரு பெட்டி என்று சொல்லி அதன் பிரமாண்டத்தைக் குறைத்து விடக் கூடாதுதான். இதுவே இப்படியென்றால் உள்ளே தன்னைப் பற்றித் துாக்கப் போகிறவன் யார் என்பதை அறியக் காத்திருக்கும் தனுசு எத்தனை பராக்கிரமம் மிகுந்ததாக இருக்கும்! புதிதாக ஓர் இளைஞன் சிவதனுசில் நாணேற்ற வந்திருக்கிறான் என்ற செய்தி நாடெங்கும் பரவியது. அந்த சாகச நிகழ்ச்சியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மண்டபத்தில் நிறைந்திருந்தனர். ‘‘அந்த இளைஞன், அயோத்தி இளவரசனாம். வயதில் சிறியவனாக இருந்தாலும், தாடகை, சுபாகு, மாரீசன் முதலான அரக்கர்களை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டவனாம்‘‘ ஒருவர் தெரிந்த தகவல்களை பக்கத்திலிருந்தவரிடம் சொன்னார். ‘‘ஆனால் அயோத்தி மன்னர் தசரதனுக்கு மூன்று மனைவிகளாயிற்றே! இந்த வாலிபன், தன் தந்தை வழி போகாது இருக்க வேண்டுமே’’ என கவலைப்பட்டாள் ஒரு மூதாட்டி. ‘‘நீயும், உன் சிந்தனையும்’’ என்று சொல்லிக் கடிந்து கொண்டாள் அருகில் இருந்த பெண்மணி. ‘‘தசரதருக்கு என்ன நிர்ப்பந்தமோ, எதனால் அப்படி மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டதோ, யாருக்குத் தெரியும்? குழந்தைப் பேறுக்காக, அரச குடும்பத்துப் பெரியவர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம். அதோடு, இந்தப் பிள்ளையின் முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது? திட சிந்தனை, ஒழுக்கம், நேர்மை எல்லாம் இந்த முகத்தில் பிரகாசிக்கிறதே! அப்படியே தகப்பனார் மூன்று தாரங்களைக் கொண்டிருக்கிறார் என்றால், அவரைப் பார்த்து எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும் ஒரு மகன் கற்கலாமே! இந்த வீரன் அத்தகைய மகனாக இருக்கலாமே’’ ‘‘இவன் ரவிகுலத்தைச் சேர்ந்தவன் என்று கேள்விப்பட்டேன். அதாவது இக்ஷ்வாகு வம்சம். இவனுடைய மூதாதையர்களில் ஒருவர்தான் அரிச்சந்திரன் என்பார்கள். உண்மைக்கும், வாய்மைக்கும், கொடுத்த வாக்கைக் காக்கும் பேராண்மைக்கும் அவரை சிறந்த உதாரணமாகச் சொல்வார்கள். அந்த வம்சாவழி பிள்ளை நிச்சயம் தர்மத்தின் வழி செல்லக் கூடியவனாகத்தான் இருப்பான்’’ ‘‘உண்மைதான். அந்த வகையில் சீதை அதிர்ஷ்டசாலிதான்‘‘ ‘‘அதெப்படி...நம் விருப்பம் அதுவாக இருந்தாலும், இந்த வீரன் சிவதனுசில் நாணேற்றும் சாதனையைப் புரிந்தால்தானே அதுவும் கைகூடும்?’’ ‘‘இவனால் நிச்சயம் முடியும். எனக்குத் தெளிவாகப் புலனாகிறது. தன்னால் முடியுமோ, முடியாதோ என்ற கலக்கம் இவன் முகத்தில் காணப்படவில்லை. அந்த தீர்க்கமான பார்வை, தீட்சண்யமான கண்கள், காண்போரை அவரவர் எண்ணப்படி ஆக்கிரமித்துக் கொள்ளும் வசீகரம், ‘இவன் வெற்றி பெற்ற வேண்டுமே’ என நம்மையெல்லாம் பிரார்த்தித்துக் கொள்ளச் செய்யும் தோற்றம்….. இவனால் நிச்சயம் முடியும்’’ குடிமக்கள் மட்டுமல்ல, தர்பாரில் வீற்றிருந்த பிரமுகர்களும் ராமன் வெற்றியடைய வேண்டுமே என்ற பதட்டமுடன் அமர்ந்திருந்தனர். அப்படி ஓர் ஈர்ப்பு இவனிடம். ஆமாம், இதற்கு முந்தைய போட்டியாளர் யாரிடமும் இப்படி ஒரு அந்நியோந்நியத்தை அவர்கள் காட்டவில்லை என்பதும் உண்மை. ஜனகர் விஸ்வாமித்திரரைப் பார்த்தார். ‘ராமன் தயாரா’ எனக் கேட்டது அந்தப் பார்வை. முனிவர் புன்முறுவல் பூத்தார். ராமனை நோக்கினார். தன் தகுதியைப் பறைசாற்றவிருக்கும் சம்பவத்தை மேற்கொள்ளும் உண்மையான வீரனின் முகம் எத்தனை களிப்படைந்திருக்கும்! ஆனால் ராமன் முகத்தில் மெலிதாக ஏதோ குழப்ப ரேகை ஓடுகிறதே! அதை லட்சுமணனும் கவனித்தான். இந்த பிரமாண்டமான பெட்டியைப் பார்த்ததும் ராமன் தயங்குகிறானோ? இதனுள் இருக்கும் சிவதனுசும் பெரியதாகத்தானே இருக்கும் என மலைக்கிறானோ? ஆனால் அண்ணனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையே! தாடகையையும், சுபாகுவையும் வதம் செய்த ஆற்றல், மாரீசனை கடலுக்குள் விரட்டிய பராக்கிரமம் இவற்றைவிடவா இந்தப் போட்டி கடினமாக இருந்துவிடும். இல்லை. அண்ணனின் குழப்பத்துக்குக் காரணமே வேறு. இந்த சிவதனுசில் நாணேற்றினால் ஜனகர் தன் மகளை ராமனுக்குத் திருமணம் செய்து வைப்பார் என்பது இந்த வீரத்துக்கான பரிசாக இருந்தது. ஆனால் நேற்றே அண்ணன் ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டாரே! பார்வைச் சங்கிலியால் பிணைத்து, மனதுக்குள் சிறை வைத்துக் கொண்டிருக்கிறாரே! அந்தப் பெண் யார்? அவள் ஜனகரின் மகளாக இருந்துவிட்டால் அது எத்தனை பெரிய சந்தோஷம்! தயக்கத்துடன் முனிவரைப் பார்த்தான் லட்சுமணன். சகோதரர்களின் தவிப்பைப் புரிந்து கொண்ட அவர், மெல்ல ராமன் அருகே குனிந்தார். ‘‘கவலைப்படாதே ராமா. நீ சிவதனுசையும் வெல்வாய், உன் மனதைக் கவர்ந்தவளையும் வெல்வாய். ஆமாம், ஜனகர், இந்த நிபந்தனையில் வெற்றி பெறுபவருக்குத் தன் மகளை மணமுடிப்பதாக அறிவித்திருக்கிறாரே, அந்தப் பெண் வேறு யாருமில்லை, நீ கண்ணோடு கண் நோக்கியவள்தான்’’ என்றார். குழப்ப ரேகை ராமனின் முகத்திலிருந்து நீங்கியது. அதோடு தன் மனதை முனிவர் பெருமான் படித்து விட்டாரே என்ற வெட்கமும் அவனைச் சூழ்ந்தது. லட்சுமணன் நிம்மதியடைந்தான். அண்ணனின் விருப்பம் நிறைவேறப் போகிறது. சிவதனுசில் நாணேற்றுவதுதான் பிரச்னை என்றால், நானும் அந்த முயற்சிக்கு உதவலாம். ஆனால் இது ஜனகரின் மகளைக் கரம் பிடிப்பதற்கான சவால் என்னும் போது அண்ணனின் பேராற்றலை, பிறரைப் போலவே நான் ஒதுங்கி நின்று பார்த்து மகிழ்வதுதான் முறையாக இருக்கும்… ஜனகரின் உத்தரவுப்படி பெட்டியின் மூடியை வீரர்கள் திறந்தனர். சட்டென்று உள்ளிருந்து மெல்லிய ஓங்கார நாதம் வெளிப்பட்டது. அதன் தெய்வீகப் பொலிவு ஒளியாகவும் பளிச்சிட்டது. ஜனகர் விஸ்வாமித்திரரைப் பார்க்க, அவர் ராமனைப் பார்த்து கண்களால் அனுமதி அளித்தார். ராமன் இப்போது பூரண மனத்துடன் கை கூப்பி முனிவரை வணங்கினான். அருகே நின்ற ஜனகரையும் வணங்கினான். தனுசுப்பெட்டி அருகே சென்றான். அதையும் தொட்டு வணங்கினான். அவையில் கூடியவர்கள் சுவாசிக்கவும் மறந்து ராமனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கூடவே சீதையை மணமுடிக்க இவனை விடத் தகுதியானவர் யார் இருக்க முடியும், இவன் வென்றிட வேண்டுமே என மனதிற்குள் வேண்டிக் கொண்டனர். அரண்மனையின் அந்தப்புரத்தில் சீதை தவிப்புடன் காத்திருந்தாள். அவ்வப்போது சேவகப் பெண்கள் அரச மண்டப செய்திகளை உடனுக்குடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஊர்மிளையும் சீதைக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். இங்கே ராமன் சற்றே குனிந்து சிவதனுசைக் கையிலெடுத்தான். அடுத்தடுத்து மின்னல் வேகமாக அவன் அந்த தனுசின் ஒரு முனையைத் தன் இடது பாதத்தால் அழுத்திக் கொண்டதையோ, கீழிருந்து தனுசின் நாணை எடுத்ததையோ, அதை மேலே இழுத்துப் போய் அடுத்த முனையில் சுற்றிப் பிணைத்ததையோ யாரும் சரியாக கவனிக்கவில்லை. பார்வையாளர்கள் அனைவரது விழிகளும், கொஞ்சமும் இமைக்காமல் ராமனின் செயல் லாவகத்தைக் கண்டு வியந்தபடி இருந்தன. அதனாலேயே அவர்கள் ராமன் தனுசை எடுத்ததைக் கண்டார்கள்; உடனே படீரென்று அது இற்றதைக் கேட்டார்கள். சிவதனுசு இரண்டாக உடைந்து ராமன் பாதத்தைச் சரணடைந்திருந்தது. எடுத்ததற்கும், இற்றதற்குமான இடைப்பட்ட காலம் கண்ணிமைக்கும் நேரமாகச் சுருங்கிவிட்ட அதிசயத்தை பலத்த கரவொலியால் தெரிவித்து பாராட்டினர். படீரென்ற அந்தப் பேரொலி அங்கேயிருந்த அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித் தெளித்தது. ஏன்...துாரத்தில் இருந்த கயிலாயம் கூட இந்த ஒலியால் சற்றே அதிர்ந்திருக்கும். முன்னேற்பாட்டின்படி சீதையின் கைகளில் மலர்மாலை கொடுக்கப்பட்டது. ஆனந்தத்துடன் அந்தக் கொடி, மாலையைத் துாக்கி வந்தது. ராமனின் அகன்ற தோளில் அதை அணிவித்த சீதை பிறகு நாணத்துடன் தலை தாழ்த்திக் கொண்டாள். அதற்கு நாணம் மட்டுமா காரணம்? இல்லை, ‘வளைந்து கொடுக்கதானே கேட்டுக் கொண்டேன், சிவதனுசே, இப்படி முறிந்து போய் சந்தேகத்திற்கு இடம் தராத வகையில் பேருதவி செய்திருக்கிறாயே’ என்று அதற்கு நன்றி சொல்வதற்காகவும்தான்!
|
|
|
|