|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » யுதிஷ்ரனாகிய நான் |
|
பக்தி கதைகள்
|
|
ஊசிமுனை அளவு நிலத்தைக் கூட திருப்பி அளிக்க முடியாது என்று கூறிவிட்டான் துரியோதனன். போரிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தனர் என் தம்பிகள். என் உறவினர்களான பீஷ்மர், கவுரவர்கள், ஆசிரியர் துரோணர் ஆகியோருடன் போரிடுவது எனக்கு உகந்ததாக இல்லை. ஆனால் துச்சாதனனைக் கொல்வேன் என்ற பீமனின் சபதமும், விரிந்த திரவுபதியின் கூந்தலும் என்னை மாற்றின. தவிர தீயசக்திகள் ஒழிக்கப்பட வேண்டியவைதான் என்று கண்ணனும் உறுதியாகக் கூறிவிட்டான். கவுரவர்களைப் போரிட்டு வெல்வதும் கூட தர்மத்தின்படி சரியானதுதான் என்றான். கவுரவர்கள் என்னை வேறொரு விதத்திலும் தடுமாற வைத்தனர். பொய் கூறுவதை மாபாவமாகக் கருதிய என்னைப் பொய் கூற வைத்துவிட்டனர். அஞ்ஞாத வாசமாக ஒரு வருடம் கழிக்க வேண்டும் என்பதைப் பகடையின் நிபந்தனையாக்கி விட்டனர். வனவாசத்துக்குப் பிறகு காட்டில் வசிக்காமல் ஏதாவது நாட்டில்தான் வசிக்க வேண்டும். அதுவும் பிறர் அறியாமல் மாறுவேடத்தில் ஒரு வருடம் கழிக்க வேண்டுமென்றால் எப்படி பொய் கூறாமல் இருப்பது? ‘யுதிஷ்டிரனின் நண்பன் கங்கன் எனப்படும் பிராமணனாகிய நான் என் செல்வங்களை இழந்து உங்கள் ஆதரவை நாடி வந்துள்ளேன்’ என்று விராட மன்னனிடம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய நிலை! ஒரே வாக்கியத்தில் எத்தனை பொய்கள்! என் வாழ்வில் மற்றொரு சூழலிலும் வேறு வழியின்றிப் பொய் கூற நேரிட்டது. அஸ்வத்தமா என்ற பெயர் கொண்ட யானை இறந்ததை அஸ்வத்தாமன் என்ற துரோணரின் மகன் இறந்துவிட்டான் என்ற பொருள்படக் கூறினேன். கண்ணனின் கட்டளை! இதன் விளைவாக துரோணர் இறந்தார். போரில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று தினமும் பல பொய்களைக் கூறும் மனிதர்கள் கூறலாம். ஆனால் அந்தப் பொய்கள் என்னை மிக வருத்தின. குற்றம் குற்றம்தானே? போரில் எங்கள் தரப்பிலும் பல தலைசிறந்தவர்கள் இறந்துவிட்டனர். தவிர எங்கள் ஆச்சாரியர்களின் இறப்பு எனக்கு பெரும் துயரத்தைத் தந்தது. மேலும் கவுரவர்களும் என் தம்பிமார்கள்தானே! போரில் இறந்தவர்களுக்கான தர்ப்பணத்தை செய்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று வேண்டினேன். ஹஸ்தினாபுரத்தின் ஆட்சியை துவக்கினேன். என்றாலும் ஆட்சியின் வழிகாட்டியாக என் பெரியப்பா திருதராஷ்டிரரை நியமித்து அவரது கடந்த கால தவறுகளை மன்னித்தேன். பின்னர் உலகெங்கும் தர்மத்தின் ஆட்சி நிலவ வேண்டும் என்பதற்காக அஸ்வமேத யாகம் ஒன்றை செய்தேன். யாகத்தின் முடிவில் எனது குதிரை ஒன்றை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப, அதன் பின்னால் அர்ஜுனன் சென்றான். என் தலைமையை ஏற்றுக் கொண்ட மன்னர்கள் அந்த குதிரையை தொடர்ந்து செல்ல அனுமதிப்பார்கள். என் தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அந்தக் குதிரையை கட்டி வைத்து விட வேண்டும். ஆனால் அந்தக் குதிரை எல்லா நாடுகளிலும் தடையின்றிக் சென்றது. அனைவரும் என்னை சக்கரவர்த்தியாக ஏற்றுக்கொண்டார்கள். காலம் கடந்தது, கலியுகம் பிறந்தது. எங்கள் தரப்பின் ஒரே வாரிசான அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்கு பட்டம் கட்டிவிட்டு பாண்டவர்களாகிய நாங்களும் திரவுபதியும் உலக வாழ்க்கையைத் துறந்து இமயமலையின் மீது ஏறத் தொடங்கினோம். வழியில் ஒவ்வொருவராக இறந்தனர். மலை உச்சியை என்னால் அடைய முடிந்தது. அங்கு தேவேந்திரன் எனக்காக காத்திருந்தார். தன் தேரில் என்னை தேவலோகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால் மலை ஏறுகையில் என்னோடு ஒரு நாயும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அதையும் என்னோடு தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். இந்திரன் வியப்புடன் என்னை பார்த்து ‘தம்பிகளை எல்லாம் இழந்த நீங்கள் இந்த நாயை மட்டும் ஏன் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டான். ‘உரிய காலம் வந்ததால் அவர்கள் இறந்தனர், என்னை விட்டுச் சென்றனர். ஆனால் இந்த நாய் இதுவரை என்னை விட்டுச் செல்லவில்லை. மாறாக நான் அதை விட்டுச் செல்வது நியாயமல்ல’ என்றேன். அடுத்த நொடியில் அந்த நாய் என் தந்தை தர்மதேவனாக மாறியது. இது எனக்கு வைக்கப்பட்ட சோதனை என்பதை உணர்ந்தேன். தேரில் சொர்க்கத்தை அடைந்தேன். ஆனால் என் வாழ்வில் எனது சில செயல்களுக்காக தலைகுனிந்துதான் ஆகவேண்டும். என் சகோதரர்களையும், மனைவியையும் பணயமாக வைத்து சூதாடியிருக்கக் கூடாது. அவர்கள் உயிரற்ற பொருள்கள் அல்லவே. எனக்கு இரண்டு மகன்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? எனக்கும் திரவுபதிக்கும் பிறந்த மகனின் பெயர் பிரதிவந்தியன். அவன் ஒரு சிறந்த போர் வீரன். பாரதப் போரில் முக்கிய பங்கு வகித்தவன். பெரும் போர் வீரனான அஸ்வத்தாமனை முன்னேற விடாமல் நீண்ட நேரம் தடுத்த பெருமை அவனுக்கு உண்டு. திரவுபதியைத் தவிர தேவிகா என்றும் எனக்கு ஒரு மனைவி உண்டு. சிவி ராஜ்யத்தை ஆண்டு வந்த கோவசேனர் என்பவரின் மகளாகிய அவளை பாரதப் போருக்குப் பிறகு ஆட்சியேறியபின் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் பிறந்த மகனின் பெயர் யவ்தேயன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்பது என் வாழ்க்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
|
|
|
|
|