Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தந்தையார் சம்மதம் வேண்டும்
 
பக்தி கதைகள்
தந்தையார் சம்மதம் வேண்டும்


தர்பாரில் அனைவரும் பிரமிப்பில் ஆழ்ந்து போயிருந்தார்கள். எப்படி நிகழ்ந்தது அது? ராமன் சிவதனுசைப் பற்றி எடுத்ததைத் கண்டோம், கண் சிமிட்டும் நேரத்தில் என்ன மாயம் நிகழ்ந்தது, படீரென்ற ஒலியுடன் தனுசு தரையில் இரண்டாக வீழ்ந்து கிடக்கிறதே!
தங்களால் அந்த மின்னல் வேகக் காட்சியைப் பார்க்க முடியாதவர்கள் அந்த ஏக்கத்தை மறந்து, அடுத்து நிகழவுள்ள சீதா ராமன் திருமணம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அத்துடன் ராமனின் தோற்றம் பற்றிய தகவலும் பிரமிப்புடன் பரவவே, ‘நம் சீதைக்கு ஏற்ற மணாளன்தான்’ என ஏகோபித்த அபிப்ராயம் கொண்டனர். உடனே தங்கள் வீட்டு விசேஷம் என்ற உணர்வுடன் கல்யாண வைபவத்தில் பங்கேற்க தங்களைத் தயார் செய்து கொண்டனர்.
தர்பாரில் விஸ்வாமித்திரரின் கண்கள் பெருமித உணர்வைக் காட்டியது. ராமனின் சாதனையைத் தன் குருநாதர் என்னும் அந்தஸ்துக்கு கிடைத்த விருதாக கருதினார். அடுத்தது என்ன? ராமன் – சீதை கல்யாணம்தானே!
ராமனுக்கு வெற்றி மாலையைச் சூட்டி, அவனுடைய வீரத்தை அங்கீகரித்துவிட்டு உடனே நாணத்துடன் உள்ளே ஓடிய சீதையின் மனம் படபடத்தது. என்ன அதிசயம் இது! நேற்று காதல் கொண்டவனுடன் இன்று கல்யாணம்!
இத்தனை நாள் தான் பாதுகாத்து வந்த சிவதனுசு, தன் பொறுப்பை நிறைவேற்றிய நிறைவுடன் விழுந்து கிடப்பதைப் பார்த்தார் ஜனகர். அதற்கு மானசீகமாக நன்றி தெரிவித்தார். இந்த பந்தத்தில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஆமாம், சீதைக்கேற்ற மணாளன் கிடைத்ததோடு அவன் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கிறான். அதாவது தன்னுடைய சந்திர வம்சத்தோடு சூரிய வம்சம் சம்பந்தம் கொள்ளப் போகிறது!
ஸ்ரீ ரத்வச ஜனகர் என்றும் அழைக்கப்பட்ட அவர், சுகர் முனிவருக்கே ஞானம் போதித்தவர் என்ற பெருமை பெற்றவர். இப்போது தன் மகள் சீதையின் திருமணத்தின் மூலம் ஒரு தந்தையின் பொறுப்பையும் நிறைவேற்றும் உவகையில் ஆழ்ந்தார்.
விஸ்வாமித்திரருக்கோ பேரானந்தம். தன் பிராயசித்த முயற்சி வெற்றி பெறப் போவதை எண்ணி நிம்மதி அடைந்தார்.
ஆனால் ராமன் கண்களில் ஏதோ குழப்பம் நிலவுகிறதே! தன் காதல் கல்யாணமாகக் கனிந்து வருவதை அவன் பூரண மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டாமா? இவனைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே!
லட்சுமணனைப் பார்த்து கண்களாலேயே வினவினார் முனிவர். பளிச்சென்று ஒளிராத ராமனின் கண்கள் அவனுக்கும் புதிராகத்தான் இருந்தன. இதற்கிடையில் ஜனகரின் அரசு அலுவலர்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளில் ஆர்வமாக இறங்க ஆரம்பித்தனர்.
விஸ்வாமித்திரர் ராமனை நெருங்கி அவன் தோளை ஆதுாரமாகத் தழுவியபடி, ‘என்ன யோசனை ராமா?’
ராமன் தாழ்ந்த குரலில், ‘மகரிஷியே நான் வந்தது உங்களுடைய யாகத்தை தடங்கல் இன்றி நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இல்லையா? அந்த நோக்கம் நிறைவேறிய பிறகு என்னையும், என் தம்பியையும் மிதிலாபுரிக்கு அழைத்து வருவீர்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இங்கு வந்த பிறகும் சிவதனுசை நான் முறிப்பதும், அதன் பலனாக சீதையை மணப்பதும் எல்லாம் தற்செயலாக நிகழ்ந்தவை. உண்மையில் சிவதனுசில் நாணேற்றினால் சீதை எனக்கு கிடைப்பாள் என்ற விபரம் எனக்குத் தெரியாது, நீங்களும் சொல்லவில்லை. என் பலத்தை என் குருநாதராகிய தாங்கள் நிரூபிக்க விரும்பியதாகவே வில் முறித்த சம்பவத்தை எடுத்துக் கொண்டேன்’’
விஸ்வாமித்திரருக்கும், லட்சுமணனுக்கும் கவலை ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுப் பாலம் இந்த சம்பந்தம் மூலம் அமையப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, ராமன் அதற்கு உடன்படாதவன் போலப் பேசுகிறானே!
‘ஆனால் இவை எல்லாம் என் தந்தையாருக்குத் தெரியாது. ‘மகரிஷியுடன் போ’ என்றுதான் அவர் எனக்குக் கட்டளையிட்டாரே தவிர இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெறும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். சிவதனுசை முறிப்பதன் பலன் சீதை எனக்கு மனைவியாவது என்ற ஏற்பாடு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே இந்த சம்பந்தத்தை அவர் எவ்வளவு துாரம் பாராட்டுவார், உடன்படுவார் அல்லது மறுதலிப்பார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த சம்பந்தத்துக்கு அவருடைய சம்மதம் கட்டாயம் வேண்டும்’
‘திருமணம் இருக்கட்டும், சீதையைக் கண்ணோடு கண் நோக்கி காதலித்தது எப்படி? தந்தையாரின் சம்மதத்தைக் கேட்டா?’ என்று விஸ்வாமித்திரர் தன் பார்வையாலேயே அவனிடம் கேட்டார்.
ஆனால் ராமன் அதை கவனிக்கவில்லை. ‘தாடகையை வதம் செய்யுமாறு தாங்கள் உத்தரவிட்டபோது, முதலில் அவள் ஒரு பெண்ணாயிற்றே என்று நான் தயங்கியது உண்மைதான். ஆனால், ‘மகரிஷியுடன் போகும் நீ அவர் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும்’ என்று தந்தையார் என்னிடம் சொல்லி அனுப்பியிருந்தார். அதனால்தான் தாடகையை வதைத்தேன். அதன் பிறகு சுபாகு வதம், மாரீசனை விரட்டியடித்தல், அகலிகை சாப விமோசனம் எல்லாம் தாங்கள் உத்தரவிட்டதாலேயே நிகழ்த்தப்பட்டன. இவையெல்லாம் சரி. ஆனால் என் தந்தையாருக்கும் புது உறவை ஏற்படுத்தப்போகும் இந்த சம்பந்தம் அவரது அனுமதியின்றி எப்படி நடக்கலாம்? இதுவும் தங்கள் உத்தரவுதான் என்றாலும், மகரிஷியே என்னை மன்னிக்க வேண்டும், தந்தையார் சம்மதமின்றி இந்த சம்பந்தத்தில் நான் ஈடுபட மாட்டேன்
விஸ்வாமித்திரர் ராமனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டார். ‘தந்தை காட்டும் பாசத்துக்கு ஈடாக, நீ காட்டும் மரியாதை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ராமா. அவர் மறுக்கப் போவதில்லை என்றாலும், அந்த சம்பிரதாயத்தை மாற்ற விரும்பாத உன் நேர்மையை  பாராட்டுகிறேன்‘ என்று தழுதழுக்கக் கூறினார்.
இதற்கிடையில் ராமன் எதற்காகவோ தயங்குகிறான் என்ற செய்தி சீதையை எட்டவே, அவள் துடித்துப் போனாள். தன் ஒரே நாள் கனவு கைகூடாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவளைக் கொஞ்சம் நடுங்க வைத்தது. ராமன் எதற்காகத் தயங்குகிறான் என்ற தகவல் அவளை எட்டவில்லை.
ஆனால் விஷயம் கேள்விப்பட்ட ஜனகர், ‘கட்டாயமாக. சக்கரவர்த்தி தசரதரின் சம்மதத்தோடுதான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற வேண்டும்.  இரு குடும்பத்தார் ஒப்புதலின்றி ஒரு திருமண பந்தம் எப்படி ஏற்பட முடியும்’ என்று சம்பிரதாயத்தைச் சார்ந்தே தானும் செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.
இப்போதுதான் ராமனின் முகம் பூரணமாக மலர்ந்தது.
உடனே தசரதனுக்குத் தகவல் தெரிவிக்க ஏற்பாடு நடந்தது. அவரது சம்மதம் பெற மதியூகிகளான அமைச்சர்களை அனுப்பி வைத்தார் ஜனகர். முறைப்படி ஆரம்ப கட்ட சீதனப் பொருட்களைத் தாங்கிய பல ரதங்கள், குதிரை, யானைப்படைகளுடன், தசரதனையும், அவன் குடும்பத்தாரையும் அழைக்கும் ராஜ பாரம்பரியம் அனுசரிக்கப்பட்டது.
இந்தத் தகவல் கிடைத்தபின், சீதை  நிம்மதியடைந்தாள்.
அயோத்தி நோக்கி வரவேற்புக் குழு புறப்பட்டுச் சென்ற பிறகு விஸ்வாமித்திரரைப் பார்த்தான் ராமன். அவன் இன்னும் ஏதோ கேட்க விரும்புகிறான் என்பதைப் புரிந்து கொண்ட முனிவர், அவன் வேறு ஏதேனும் முட்டுகட்டைப் போட்டுவிடாமல் இருக்க வேண்டுமே என சிந்திக்கத் தொடங்கினார்.
‘குருதேவா, இன்னொரு விண்ணப்பம்’ என்றான் ராமன். ‘இதோ, என்னுடன் வந்திருக்கும் லட்சுமணன், அயோத்தியில் என் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சகோதரர்கள் பரதன்,  சத்ருக்னன் ஆகியோரும் என்னுடன் ஒரே காலகட்டத்தில்தான் பிறந்தவர்கள். எனக்குத் திருமணம் என்றால் அவர்களும் திருமணத்துக்குத் தகுதியானவர்கள்தானே?  நால்வர் திருமணமும் ஒரே சமயத்தில் நிகழுமானால் பெரிதும் மகிழ்வேன்’ என்று பாசமிகுந்த குரலில் சொன்னான்.
விஸ்வாமித்திரர் மிகுந்த தயக்கத்துடன் ஜனகரைப் பார்த்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar