|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நேர்மைக்குக் கிடைத்த பரிசு |
|
பக்தி கதைகள்
|
|
“என் பையன் குமார் பேங்க்ல கேஷியரா இருக்கான் சார். நேர்மையானவன். திறமைசாலி. நல்லா வேலை பாப்பான். நாலு நாளைக்கு முன்னால பேங்க்ல ரெண்டு லட்ச ரூபாய் பணத்தைக் காணோம். இவனும் எல்லா எடத்துலயும் தேடிப் பாத்துட்டான். பணம் வாங்கினது பட்டுவாடான்னு எல்லாத்தையும் சரி பாத்துட்டான். பணம் கெடைக்கல” என்னிடம் புலம்பியவருக்கு அறுபது வயது இருக்கும். “தொலைஞ்ச பணத்தக் கட்டிடவேண்டியதுதான். வேற வழியில்ல” “பத்து நாளுக்கு முன்னால குமார் பேங்க்ல ரெண்டு லட்ச ரூபாய் கடன் கேட்டிருக்கான். வங்கி விதிமுறைப்படி அந்தக் கடனை உடனே தந்திருக்கலாம். மேனேஜருக்கு குமாரை பிடிக்காது. அதனால சேங்ஷன் செய்யல. தொலைஞ்சதும் ரெண்டு லட்சங்கறதுனால குமார்தான் பணத்த எடுத்துட்டு நாடகமாடறான்னு அவனை சஸ்பெண்ட் பண்ணிட்டாரு. போலீஸ்ல சொல்லிக் கைது பண்ணப் போறாங்களாம்” அன்று மாலையில் வெளியே சென்றபோது ஒரு கூடைக்காரி வழிமறித்தாள். “வெள்ளரிக்கா வாங்குறீங்களா” “ஆமா இப்போ அதுதான் குறைச்சல்” “யாருக்கோ பிரச்னை என்றால் என் மீது ஏனப்பா கோபம்” அவள் காலில் விழுந்து வணங்கினேன். “குமார் வேலை பார்க்கும் இடத்தில் என் பக்தை பைரவி இருக்கிறாள். அவளைப் பார்” பைரவிக்கு நாற்பது வயது இருக்கும். கருப்பாக, திருத்தமாக இருந்தாள். “குமார் நல்ல பையன். நேர்மையானவன். பலருக்கு உதவி செஞ்சிருக்கான். அவன் கொஞ்சம் முன்கோபி. ஆனா எந்த தப்பும் செய்யல” தொய்வான நடையுடன் வங்கியை விட்டு வெளியேறினேன். வாசலில் அதே வெள்ளரிக்காய் விற்பவள். அவள் காலடியில் விழுந்து வணங்கினேன். “பைரவி சொன்ன கடைசி வாக்கியத்தில்தான் சூட்சுமம் இருக்கிறது” “அவன் கொஞ்சம் முன்கோபி’’ “அவள் லேசாக சொல்லிவிட்டாள். குமாருக்குக் கோபம் வந்தால் அவன் வாய் தீயைக் கக்கும். வாடிக்கையாளர்கள், சகஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் அவனால் காயப்பட்டிருக்கிறார்கள். அவன் மனைவி தினமும் அழுதபடி இருக்கிறாள்” “அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா...தாயே” “நேர்மையாக இருந்தால் பிறரைக் காயப்படுத்தலாம் என்றில்லை. ஒருவனைக் கத்தியால் குத்திக் கொன்றாலும், வார்த்தையால் குத்தி உணர்வுகளைக் கொன்றாலும் ஒரே கர்மக்கணக்குதான்” “அவன் திருந்த வாய்ப்பு தரக் கூடாதா?” “ அவனிடம் பேசு. கேட்டு நடந்துகொண்டால் தப்பிக்கலாம்” “இல்லாவிட்டால்...’’ “சிறைவாசம்... சீரழிவுதான்” குமார் ஆள் பார்க்க அழகாக இருந்தான். முகத்தில் அறிவுக்களை இருந்தது. “என்னால ஆனதை செஞ்சிட்டேன். நீ ஜெயில் தண்டனை அனுபவிக்கவேண்டிய காலம் இது” “நேர்மைக்கும், திறமைக்கும் கிடைக்கற பரிசு ஜெயில் தண்டனை. பச்சைப்புடவைக்காரியோட ஆட்சி பிரமாதம்” என்று பேச ஆரம்பித்தவன் திடீரென அழுதான். அவனை அழவிட்டேன். ‘‘குமார் உன் கர்மக் கணக்குல எங்க தப்பு நடந்திருக்குன்னு என்னால சொல்ல முடியும். ஆனா என்ன பரிகாரம்னுதான் கண்டுபிடிக்க முடியல” “எங்க தப்பு நடந்திருக்கு” அவனைச் சுற்றியிருந்தவர்கள் மீது வீசிய வார்த்தை கங்குகளைப் பற்றியும், அவை உண்டாக்கிய தீக்காயங்கள் பற்றியும் சொன்னேன். “எப்படி பரிகாரம் செய்யறதுன்னு...” “எனக்கு தெரியும் சார். நன்றி. வரேன்” காரை நோக்கி நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது. காருக்கு அருகில் வெள்ளரிக்காய் விற்பவள். விழுந்து வணங்கினேன். “அவனைக் காப்பாற்றிவிட்டாயே. பலே ஆளப்பா நீ” “பரிகாரம்” “செய்யத் தொடங்கி விட்டான். அங்கே தெரியும் காட்சியைப் பார்” வீட்டுக்குச் சென்ற குமார் மனைவியை கூப்பிட்டான். பயந்தபடி அறைக்குள் வந்தாள். எதிர்பாராதவிதமாக அவளின் கால்களில் விழுந்தான் குமார். “ஐயையோ! என்னங்க நீங்க’’ “மன்னிச்சிரு சாரதா. உன்னைத் திட்டாத நாளில்ல. உன்னை எவ்வளவு காயப்படுத்தியிருக்கேன்? நீ செஞ்ச நல்லதை பாராட்டியதில்ல. செஞ்ச உதவிக்கு நன்றி சொன்னதில்ல. இவ்வளவு நடந்தும் என்னை விட்டு பிரியாம இருக்கியே உனக்கு உண்மையில் பெரிய மனசு. இனிமேல் உன்னிடம் அன்பா நடந்துக்குவேன். பச்சைப்புடவைக்காரி மீது சத்தியம்” சாரதாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை. மறுநாள் காலை குமார் தன் கிளையின் மேலாளர் முன் நின்றான். “இன்னும் சஸ்பென்ஷன்லதான் இருக்க தெரியும்ல” “தெரியும் சார். ஒரு வேண்டுகோள்” “சொல்லு” “பலமுறை உங்கள துாக்கியெறிஞ்சி பேசியிருக்கேன். உங்க பதவிக்கு மரியாதை கொடுத்திருக்கணும். குறைஞ்ச பட்சம் கூட வேலை செய்யறவர்னாவது யோசிச்சிருக்கணும். உங்கள ரொம்ப காயப்படுத்திட்டேன் சார். என்ன மன்னிச்சிருங்க. உங்க கால்ல வேணும்னாலும் விழறேன்” மேலாளருக்கு ஒன்றும் புரியவில்லை. “என் சஸ்பென்ஷன ஒரே ஒரு வாரம் மட்டும் தற்காலிகமா ரத்து பண்ணுங்க சார். நான் அதே கேஷியர் வேலையைப் பாக்கிறேன். கஸ்டமர்ஸ் பலரைக் காயப்படுத்தியிருக்கேன். முடிஞ்சளவுக்கு அவங்ககிட்ட மன்னிப்பு கேக்கப் போறேன். ஒருவாரம் கழிஞ்சதும் சஸ்பெண்ட் பண்ணுங்க. கேஸ் போடுங்க. ஜெயில்ல தள்ளுங்க சார். ப்ளீஸ்” மேலாளர் மனம் இளகினார். அந்த ஒரு வாரத்தில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டான் குமார். எல்லோரிடமும் இனிமையாகப் பேசினான். வாடிக்கையாளர்கள் திட்டியபோதும் அவன் கோபப்படவில்லை. ஆறாவது நாள். காலை பதினொரு மணி. ஒரு வாடிக்கையாளர் வந்தார். “குமார் சார்... கேஷ் கவுண்ட்டர பூட்டிட்டு என் கூட வாங்க ப்ளீஸ். எல்லாம் நல்ல செய்திதான்” அவர் நேராக மேலாளரின் அறைக்குள் சென்றார். குமார் பின்னால் ஓடினான். “மேனேஜர் சார் இதுல ரெண்டு லட்ச ரூபாய் இருக்கு. போன வாரம் கேஷியர் என்கிட்ட தவறுதலா ரெண்டு லட்சம் அதிகமா கொடுத்துட்டாரு. நான் நேர்மையானவன்தான். எனக்கு அத உடனே திருப்பிக் கொடுக்கணும்னு ஆசைதான். ஆனா அன்னிக்கு குமார் என்ன ரொம்பவே திட்டிட்டாரு. மனசு நொந்துட்டேன். எனக்கு ஏற்கனவே ஆயிரம் பிரச்னை. அதோட சேத்து இவரு காது கூசறமாதிரி கன்னா பின்னான்னு திட்டிட்டாரு. அதனால பணத்த அனாத இல்லத்துக்குக் கொடுக்கலாம்னு நெனச்சிருந்தேன். நேத்தி என்கிட்ட உருகி உருகி மன்னிப்பு கேட்டாரு பாருங்க, அழுகையே வந்திருச்சி. அதான் பணத்த திருப்பிக் கொடுக்க வந்தேன். இவர் மீது எந்த தப்பும் இல்ல சார்” “என்னால் நம்பமுடியவில்லை தாயே! அது எப்படி ஒரு மனிதன் இவ்வளவு விரைவாக மாற முடியும்” “சிறைக்குச் சென்றுவிடுவோமோ என்ற அதிர்ச்சி. அதுபோக பைரவியின் அன்பு” “புரியவில்லையே” “மேலாளரைப் பார்க்க வந்தபோது பைரவியைப் பார்த்திருக்கிறான் குமார். அவன் தலையில் இருக்கும் துாசியைத் தட்டிவிடும் சாக்கில் அவன் தலையில் கைவைத்து ஆசியளித்திருக்கிறாள். தான் செய்த நல்வினைப்பயன் மொத்தத்தையும் குமாருக்குத் தருவதாக என்னிடம் வேண்டிக்கொண்டாள். அந்த அன்புதான் குமாரின் மாற்றத்துக்கு உதவியது” “குமாரின் பிரச்னை இதுதான் என்று என்னிடம் அவள் முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கலாமே” “இதில் உனக்கு மட்டுமே பெயர் கிடைக்கவேண்டும் என்று நினைத்தாள். அதனால்தான் நானே உன்னிடம் சொன்னேன்” நான் யோசித்தேன். “பைரவியைப்போல் அன்பு வேண்டுமென்று ஆசைப்படுகிறாயோ” “இல்லை தாயே! என்னால் முடிந்த எடுபிடி வேலைகளை பைரவிக்குச் செய்யும் வரத்தைத்தான் உங்களிடம் யாசிக்கிறேன்” அன்னை பெரிதாகச் சிரித்தபடி காற்றில் கலந்தாள்.
|
|
|
|
|