|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பீமனாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
‘கவுரவர்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டால் நுாறு என்று கூறி விடுவீர்கள். குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மகாபாரத யுத்தத்தில் அந்த நுாறு பேரில் நான் எத்தனை பேரைக் கொன்றேன் என்பது தெரியுமா? அத்தனைபேரையும்! நான் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாமவன். வாயு தேவனின் அருளால் குந்திக்குப் பிறந்தவன். எங்கள் ஐவரில் முதலில் திருமணம் எனக்கு தான் நடந்தது. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி வனத்தில் வசித்தபோது நான் இடும்பியைத் திருமணம் செய்து கொண்டேன். பஞ்ச பாண்டவர்களாகிய நாங்களும் எங்களது அன்னையான குந்தியும் அரக்கு மாளிகையிலிருந்து சுரங்கப் பாதையின் வழியாக தப்பி வந்தோம். நாங்கள் இறந்து விட்டதாகவே துரியோதனன் நினைப்பதுதான் எங்களுக்கு நல்லது என தீர்மானித்து சில காலம் நாங்கள் வனத்திலேயே மறைந்து வாழ்ந்தோம். ஏகசக்ரபுரம் என்ற ஒரு கிராமத்தில் பிட்சையெடுத்து, கிடைத்த உணவை நாங்கள் ஐவரும் அன்னையிடம் அளிப்போம். அவர் அதை இரு பாகங்களாகச் செய்து ஒரு பாதியை எனக்குக் கொடுத்து விடுவார். மறுபாதியை மற்ற அனைவரும் உண்பார்கள். காரணம் எனக்கு பசி மிக அதிகம். இதனால் எனக்கு விருகோதரன் என்ற பெயரும் உண்டு. அதற்கு எளிதில் திருப்திப் படாத ஓநாய் போன்ற வயிறு கொண்டவன் என்று பொருள். ஒருநாள் ஒரு வீட்டுத் திண்ணையில் நாங்கள் உட்கார்ந்திருந்த போது உள்ளே இருந்து அழுகுரல் கேட்டது. அந்த வீட்டில் வசித்த பிராமணரும் அவர் மனைவியும் அழுது கொண்டே உரையாடிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து சில விஷயங்கள் புலப்பட்டன. அந்த ஊரின் எல்லையிலிருந்த குகையில் பகாசூரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் அந்த ஊரில் இருந்த அனைவரையும் இஷ்டத்துக்குக் கொன்று தின்று கொண்டிருந்தான். பிறகு ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டான். தினமும் ஒரு வண்டி நிறைய அன்னத்தையும், மாமிசத்தையும் கிராம மக்கள் அவனுக்கு அனுப்பவேண்டும். அவன் அந்த வண்டியில் உள்ள உணவுப் பொருள்களோடு வண்டியை ஓட்டி வந்த மனிதனையும் சாப்பிட்டு விடுவான். யாராவது அந்த கிராமத்திலிருந்து தப்ப முயற்சித்தால் அவரைத் தேடி கண்டுபிடித்து கொன்று விடுவான். அன்று வண்டியோட்டிச் செல்ல வேண்டியது அந்த பிராமணரின் முறை. இதைக் கேட்டதும் என் அன்னை அந்த பிராமணருக்கு பதிலாக என்னை அனுப்புவதாகக் கூறினார். எனக்கு ஒரே சந்தோஷம். பகாசுரன் வசித்து வந்த குகைக்கருகே சென்ற நான் அதற்கு வெளியே இருந்தபடி வண்டியில் இருந்த உணவுப் பொருட்களை தின்னத் தொடங்கினேன். குகையிலிருந்து வெளியே வந்த பகாசுரன் என்னைத் தாக்கத் தொடங்கினான். நான் கவலைப் படாமல் நிதானமாக அனைத்துப் உணவுகளையும் சாப்பிட்டு முடித்தேன். பிறகு எங்கள் இருவருக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இறுதியில் அவனைக் கொன்றேன். அப்போதுதான் என்றில்லை, மகாபாரதம் முழுவதும் என் வீரம் தனிப்பட்ட முறையில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மகத மன்னன் ஜராசந்தனைக் கொன்றேன். அஞ்ஞாத வாசத்தின் போது திரவுபதியிடம் தவறாக நடக்க முயற்சித்த கீசகனையும் கொன்றேன். குருக்ஷேத்திரத்தில் துரோணர் ஏறி வந்த ரதத்தை எட்டுமுறை பொடிப்பொடியாக்கினேன். என் கோபம் அடக்க முடியாதது. நான் மிக மிக மதிக்கும் என் அண்ணன் யுதிஷ்டிரரைக் கூட, அவர் திரவுபதியை சூதாட்டத்தில் பணயம் வைத்து இழந்தபோது கொதித்தெழுந்தேன். இதை உங்கள் காலத்தைச் சேர்ந்த கவிஞர் பாரதியார் கூட ‘இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா’ என்று நான் கூறுவதாக விவரித்திருக்கிறார். துரியோதனனை நான் கொல்ல, ஒருவழியாக பாரதப் போர் முடிவுக்கு வந்தது. கண்ணன் வயதில் என்னை விட வயதில் சிறியவன் என்றாலும் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். அவன் தெய்வ அம்சம் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே அவனை மிக மதித்தவன் நான். எனக்கு சிறுவயதில் கொஞ்சம் சீண்டிப் பார்க்கும் பழக்கம் உண்டு. நகுல, சகாதேவனிடம் கூட இப்படி விளையாடுவதுண்டு. அவர்கள் அதைத் தவறாக எண்ணியதில்லை. ஆனால் குருகுலத்தில் படிக்கும்போது அடிக்கடி கவுரவர்களை மற்போரில் வென்றுவிட்டு அதில் தோற்கும் துரியோதனனைக் கிண்டல் செய்வேன். இந்தச் செயல் அவன் மனதில் அவ்வளவு வஞ்சத்தை வளர்க்கும் என்று நான் எண்ணவில்லை. என் உணவில் நஞ்சைக் கலந்து நான் மயங்கியிருந்தபோது என்னை நதியில் தள்ளி விட்டான். அதுவும் எனக்கு நல்லதாக முடிந்தது. நதியின் அடியில் வசித்த நாகராஜனான வாசுகி என்னைக் காப்பாற்றினான். நாகர்கள் அளித்த திரவத்தைக் குடித்ததனால் பலவானானேன். நாகங்கள் என்னைக் கடித்தாலும் அவற்றின் விஷம் என் உடம்பில் ஏறாது என்ற நிலை இதனால் ஏற்பட்டது. திரவுபதியின் மூலம் எனக்குப் பிறந்தவன் சுதசோமன். பின்னர் காசி மன்னரின் மகள் வளந்தரை என்பவளை மணந்தேன். சாவர்கன் என்ற பெயரில் எங்களுக்கு ஒரு மகன் உண்டு. இடும்பியின் மூலம் பிறந்தவன் கடோத்கஜன். பாரதப் போரில் வாயுதேவன் எனக்களித்த வாயவ்யம் என்ற தெய்விக வில்லைப் பயன்படுத்தினேன். எனது சங்கின் பெயர் பவுண்டுரம். பாரதப் போர் முடிந்தபிறகு பாண்டவர்களாகிய நாங்கள் ஹஸ்தினாபுர அரண்மனையை அடைந்தோம். அப்போது பெரியப்பா திருதராஷ்டிரர் மிகுந்த கோபத்தோடு இருந்தார். அத்தனை மகன்களையும் இழந்த துக்கம் கோபமாக மாறியிருந்தது. என்னை அணைத்துக் கொள்ள விரும்புவதாகச் சொன்னார். என்னைத் தடுத்து நிறுத்திய கண்ணன் எனக்கு பதிலாக ஒரு கற்சிலையை பெரியப்பாவின் முன் நிறுத்தினார். அவரது அழுத்தமான குரோதமான ஆலிங்கனத்தில் அந்தச் சிலை பொடிப்பொடியானது. பின்னர் இதற்காக மனம் வருந்தினார் அவர். மகாபாரதத்தின் உத்யோக பர்வம் என்ற பகுதியில் நான் இப்படி விவரிக்கப்படுகிறேன். ‘கதாயுதப் பயிற்சியிலும் யானைகளைச் செலுத்துவதிலும் பீமனுக்கு ஒப்பானவர் யாருமே இல்லை. தேரோட்டுவதில் அர்ஜுனன் கூட அவனுக்கு இணையானவன் இல்லை. பலத்தில் பீமன் பத்தாயிரம் யானைகளுக்கு இணையானவன்’.
|
|
|
|
|