|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » சங்கே முழங்கு |
|
பக்தி கதைகள்
|
|
ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தை ஜபிக்கும் துறவி ஒருவர் இருந்தார். ஊர் ஊராகச் சென்று பெருமாளை அவர் தரிசிப்பார். செல்லும் இடங்களில் மக்கள் அவரை வணங்கி ஆசி பெறுவது வழக்கம். அதில் அவருக்கு பெருமிதமும் இருந்தது. ஒருமுறை அந்த துறவி விவசாயம் செழித்திருந்த ஒரு ஊருக்குள் நுழைந்தார். அந்த வழியாகத் தான் அடுத்த கோயிலுக்கு அவர் செல்ல வேண்டியதிருந்தது.
ஊருக்கு நடுவில் இருந்த மரத்தடியில் அமர்ந்தார். மக்கள் விவசாயப் பணியில் பரபரப்பாக இருந்ததால் துறவியை யாரும் பொருட்படுத்தவில்லை. துறவிக்கு கோபம் வந்தது. “இந்த ஊரில் இன்னும் 5 ஆண்டுகள் மழையே பெய்யாது’’ என சபித்தார்.
வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்த மகாவிஷ்ணு, ‘ மக்களைப் பற்றி சிந்திக்காமல் இப்படி ஒரு சாபத்தை பக்தன் அளித்து விட்டானே. அதற்கு நாமும் துணை போகிறோமே’ என எண்ணியபடி கையில் இருந்த சங்கை தலையணைக்கு கீழே வைத்து துாங்கினார். மகாவிஷ்ணுவின் சங்கு முழங்கினால் தான் மழை பொழியும் என்பது ைதீகம். துறவி சாபமிட்டதைக் கேள்விப்பட்ட மக்கள் மரத்தடியில் குவிந்தனர். துறவியிடம் மன்னிப்பு கேட்டு சாந்தப்படுத்த முயன்றனர். ஒரு வாரம் கடந்தது. ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மட்டும் தன் வயலுக்குச் சென்று பணிகளை மேற்கொண்டார். இதைப் பார்த்த ஊரார் “ சாபத்தால் இன்னும் 5 ஆண்டுக்கு மழை பெய்யாதே.. நீ ஏன் உன் பணிகளைச் செய்கிறாய்” எனக் கேட்டனர். “ மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் நானும் இப்படி உட்கார்ந்தால் நாளடைவில் எப்படி வயலை உழுவது என்பது மறந்து போகும். அதனால்தான் தினமும் பணியைச் செய்ய வயலுக்குச் செல்கிறேன்” என்றான். கேட்டவர்கள் வாயடைத்துப் போயினர். அதில் உண்மை இருப்பதை உணர்ந்தனர். அதைக் கேட்ட துறவியும் சாபத்தை திரும்பப் பெற முன்வந்தார்.
இந்த நிலையில் இதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் ‘5ஆண்டுக்கு சங்கை ஊதாமல் நான் இருந்தால் எப்படி ஊதுவது என்பது மறந்து விடுமோ’ என எண்ணி சங்கை எடுத்து ஊதிப் பார்த்தார். அடுத்த நொடியே இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது.
|
|
|
|
|