|
குருநாதர் ஒருவர் சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன், ‘குருவே! மனதில் எழும் கவலையை எப்படி போக்குவது?’ என்று கேட்டான். அவனிடம் ‘உனக்கான பதிலை குட்டி குரங்கு ஒன்றின் வாழ்வில் நடந்ததைச் சொன்னால் புரியும்’ என சொல்ல ஆரம்பித்தார். அடர்ந்த காட்டில் குரங்குகள் கூட்டமாக வாழ்ந்தன. அவற்றில் சுட்டித்தனம் மிக்க குட்டி குரங்கு ஒன்றும் இருந்தது. ஒருநாள் அது தரையில் ஊர்ந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற பாம்பைக் கண்டு குதுாகலம் அடைந்தது. ஆனால் அது கொடிய விஷப் பாம்பு. இதை உணராமல் பாம்பை கையில் பிடித்தது. பிடிபட்ட பாம்பு இறுக்கமாகக் குரங்கின் கையைச் சுற்றியது. விஷ பல்லைக் காட்டி சீறியது. குட்டிக்கு பயம் வந்தது. இதைக் கண்ட குரங்குகள் எல்லாம் ஒன்று கூடின. ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. ‘ஐயோ...இது விஷப்பாம்பு. கடித்தால் இறக்க நேரிடுமே’ என்றது ஒரு குரங்கு. மற்றொன்றோ, ‘பிடியை நழுவ விட்டால் பாம்பு தீண்டும். பிழைப்பது கஷ்டம்தான்’ என்றது. இப்படியே ஒவ்வொன்றும் பயமுறுத்தியபடி நின்றன. மனவருத்தமுடன் பாம்பை இறுக்கிப் பிடித்தது குட்டி. மரண பயம் அதன் மனதை வாட்டியது. ‘ஐயோ...புத்தி கெட்டுப் போய் பாம்பை கையால் பிடித்து விட்டேனே’ எனப் புலம்பியது. நேரம் கடந்தது. உணவும், நீரும் இல்லாமல் மயக்கத்திற்கு ஆளானது. கண்கள் இருண்டன. அப்போது துறவி ஒருவர் அந்த பக்கமாக வந்தார். அவரால் தனக்கு உதவ முடியும் என நம்பியது. அருகில் வந்த அவர், ‘ஏ! குரங்கே...எவ்வளவு நேரம் இந்த பாம்பை பிடித்தபடி கஷ்டப்படுவாய்....அதே கீழே போடு’ என சப்தமிட்டார். ‘ஐயோ.. சுவாமி! நான் விட்டு விட்டால் என்னைக் கொத்தி விடுமே’ என்றது. ‘பாம்பு செத்து விட்டது. பயமின்றி கீழே போடு’ என்றார். பிடியைத் தளர்த்தி பாம்பைக் கீழே விட்டது குட்டிக்குரங்கு. பாம்பு இறந்து போயிருந்ததை அறிந்ததும், அதன் மனசில் மகிழ்ச்சி என்னும் கதவு மெல்லத் திறந்தது. ‘பாம்பைக் கையில் பிடிக்கும் முட்டாள் தனத்தை இனியும் செய்யாதே; எப்போதும் அறிவுக்கு வேலை கொடு’ என்றார் துறவி. கவலை என்னும் செத்த பாம்பை பிடித்தபடி உலகில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் கவலையை விட்டொழிப்போம். மகிழ்ச்சிக்கான கதவு திறக்கும்.
|
|
|
|