|
கையில் தனுசுடன் ஆக்ரோஷமாக வந்து நின்ற பரசுராமரைப் பார்த்ததும் மனம் கலங்கியது சீதைக்கு. இவர் யாரேனும் பெண்ணைப் பெற்றோ அல்லது வளர்த்தோ வைத்துக் கொண்டு, இந்த தனுசில் நாணேற்றுபவருக்கு அவளை மணமுடித்துக் கொடுப்பதாக ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரோ! தசரதர், அவர் மனைவியர், ராம சகோதரர்கள் என்று அனைவரும் பரசுராமர் கோபப்படுவதன் நோக்கம் புரியாமல் குழப்பமடைந்தனர். ஆனால் பரசுராமரைப் பற்றி வசிஷ்டருக்கு நன்கு தெரியும். ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். கயிலைநாதனான பரமேஸ்வரனை நோக்கி நீண்ட நெடிய தவம் புரிந்து அவருடைய அருளாக ஒரு கோடரியைப் பெற்றார். பரசு என்றால் கோடரி. ஆகவே இவர் பரசுராமரானார். தன் தந்தையார் பாசத்துடன் வளர்த்து வந்த தேவலோகப் பசுவைக் கவர்ந்து சென்ற கார்த்தவீர்யாஜுனனை வதைத்தவர் இவர். தொடர்ந்து அவன் சார்ந்திருந்த க்ஷத்திரிய வம்சத்தின் 21 அரச வாரிசுகளை அழிப்பதாக சபதமிட்டு அவ்வாறே செய்தும் காட்டியவர். இந்த சபதம்தான் நிறைவேறிவிட்டதே, இப்போது எதற்காக ராமனை எதிர்க்கிறார்? தன் மனைவி ரேணுகாதேவியின் கற்பை சந்தேகித்த ஜமதக்னி முனிவர், அவளுடைய தலையை வெட்டிக் சாய்க்குமாறு தன் நான்கு புத்திரர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் அவ்வாறு செய்ய மறுக்கவே, அவர்களைக் கல்லாகிப் போகும்படி சபித்தார். ஆனால் ஐந்தாவது மகனான பரசுராமர் தந்தையின் கட்டளையை நிறைவேற்ற முன்வந்தார். அதற்கு பதிலாக, இரண்டு வரங்களை தந்தையார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முனிவர் சம்மதிக்கவே தன் கோடாரியால் தாயின் தலையைத் துண்டாக்கினார். தந்தை சொல் தட்டாத தன் தனயனைப் பார்த்து மகிழ்ந்த ஜமதக்னி, பரசுராமர் கேட்கும் இரண்டு வரங்கள் என்னென்ன என்று கேட்டார். ஒன்று தாயாரை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்; இரண்டு கல்லாகிப் போன தன் சகோதரர்களுக்கு மறுபடியும் அவர்களுடைய உருவையும், உயிரையும் அளிக்க வேண்டும் என்று பரசுராமன் கேட்டதும், வேறு வழியின்றி, மறுபேச்சு பேசாமல் அப்படியே அந்த வரங்களை நிறைவேற்றிக் கொடுத்தார் தந்தை. அத்தகைய பராக்கிரமசாலி, கூர்மையான நுண்மதி கொண்டவர், இப்போது ராமனை சவாலிட்டு அழைத்து அடிமைப்படுத்த வந்திருக்கிறாரோ? நேரடியாக விஷயத்துக்கு வந்தார் பரசுராமர். ‘‘சிவதனுசை முறித்துப் போட்டாயாமே! அத்தனை ஆற்றல் மிக்கவனா நீ? அது உன்னால் முடிந்தது என்றால், இதோ என்னிடம் இருக்கும் விஷ்ணு தனுசில் நாணேற்றிக் காட்டு பார்க்கலாம்’’ என்று சொன்னபடி தன் கையிலிருந்த வில்லை ராமன் முன் நிறுத்தினார். இதற்கிடையில் பரசுராமர் பிரம்மசாரி என்றும் அவருக்கு மகள் என்று யாரும் இல்லை என்றும், வளர்ப்புப் பெண்கூட இல்லை என்றும் தன் மாமியார் கோசலை சொல்லக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஆறுதல் அடைந்தாள் சீதை. சுற்றியிருந்த அனைவரும், ராமன் இந்த சவாலை எப்படி மேற்கொள்ளப் போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். முக்கியமாக தசரதர். ‘என் மைந்தன் சிவதனுசை முறித்த பேராற்றலை நான் காண இயலவில்லை. அதைப் பார்த்த விஸ்வாமித்திரர், லட்சுமணன் இருவரும் அந்த அசகாய சூரத்தனத்தை விளக்கியதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்தேன். ஆனால் அவர்களும், மின்னலாய்த் தோன்றி மறைந்த அந்தக் காட்சியை முழுமையாகக் காண இயலாத ஆற்றாமையையும் வெளிப்படுத்தினார்களே!’ அவர்களும், ராமனுடைய பராக்கிரமத்தைக் காண இன்னொரு சந்தர்ப்பம். இப்போதாவது இமை கொட்டாமல் கண்களை அகல விரித்து முழு காட்சியையும் கண்டுவிட வேண்டும்! என்று நினைத்துத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டார்கள். பரசுராமர் கர்ஜித்தவாறே ராமனை நெருங்கி வந்தார். ‘‘தாடகையை வதைத்தவனாமே நீ, சுபாகு, மாரீசனை எளிதாகத் துாக்கி எறிந்தவனாமே, ஜனகரின் சிவதனுசை அலட்சியமாக நாணேற்றி முறிக்கவும் செய்தவனாமே, எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். அது உண்மைதானா என்பதை இப்போது நிரூபி பார்க்கலாம். இந்தா என் விஷ்ணு தனுசு…’’ இதற்குள் தசரதரும், மற்றவர்களும் பதட்டம் அடைந்தனர். சிவதனுசை வளைப்பது ஒரு விளையாட்டுப் போட்டி போன்றது. ஆனால் இந்த விஷ்ணு தனுசை வளைப்பது ஏதோ வன்மம் தீர்க்கும் சமாசாரம் போலிருக்கிறதே! இந்த சவாலில் ராமன் தோற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரசுராமரிடம் காணப்படுகிறதே! ஆனால் அதேசமயம், இதுவரை தன் எந்த முயற்சியிலும் ராமன் தோற்றதே இல்லை; இவனால் முடியாது என்று எதையுமே, யாராலுமே சொல்ல முடியாது என்பதும் ஆறுதலாக இருக்கிறது. ராமன் தன் தந்தையாரை, தாயார்களை, குலகுரு வசிஷ்டரை வணங்கினான். சற்று தொலைவில் மாமியாருக்குப் பின்னால் பயத்துடன் ஒளிந்தாற்போல நின்றிருந்த சீதையைப் பார்த்து புன்னகைத்தான். அவள் மானசீகமாக அவனுடைய வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்வதை அவனால் உணர முடிந்தது. நிறைவாக பரசுராமரையும் வணங்கினான் ராமன். கையிலிருந்து விஷ்ணு தனுசை வாங்கி தன் இடது கையால் பற்றிக் கொண்டான். தன் அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுத்தான். தனுசின் நடுப்பகுதியைத் தன் இடது உள்ளங்கையால் உறுதியாகப் பற்றிக் கொண்டான். அவ்வாறு பற்றிய இடது கை கட்டை விரல் மீது பதியுமாறு அம்பின் தலைப்பகுதியை அமர்த்தினான். அம்பின் வால் பகுதியை நாண் நடுவே பொருத்தி, வலது கை விரல்களால் இறுக்கமாகப் பற்றி அப்படியே பின்னோக்கி இழுத்தான். ‘இதோ இந்த தனுசும் முறியப்போகிறது! ராமன் நாணைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னால் இழுக்க இழுக்க தனுசு வளைகிறது. அதன் இரு முனைகளும் மேலிருந்து கீழ் மற்றும் கீழிருந்து மேல் என்ற கோணங்களில் மெல்ல வளைகின்றன. அதனால் தனுசு முறியப் போகிறது… ஐயோ, ராமன் இன்னும், இன்னும் பின்னோக்கி நாணை இழுக்கிறானே! தன் இழுபடு திறனை முற்றிலுமாக இழந்துவிட்டால், அது படீரென்று அறுந்து போகுமே!‘ லட்சுமணன் பிரமிப்புடன் அண்ணனை(லை)ப் பார்த்தான். ஸ்ரீராமனின் இந்தத் தோற்றத்தை இவ்வளவு நெருக்கமாக இதுவரை கண்டதேயில்லையே! திண்ணென்று பூரிக்கும் அவனுடைய புஜபலம் எல்லோரையும் பிரமிக்க வைக்கிறதே! பேரிடியாய் முழங்கி உடைபட்டு வீழ்ந்த சிவதனுசுபோல இந்த தனுசும் முறிந்து வீழுமோ? ஆனால் இந்த தனுசு அண்ணனின் பலத்தை இவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறதே, எப்படி? ஒருவேளை இது விஷ்ணு தனுசு என்பதாலோ? சீதையும் மருட்சியுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவதனுசு எந்த எதிர்ப்பையும் காட்டாமல், கொஞ்சம்கூட ராமனை சிரமப்படுத்தாமல், அவன் எடுத்த மாத்திரத்திலேயே படீரென்று உடைந்து விழுந்து விட்டது. ஆனால் இந்த விஷ்ணு தனுசு ராம பலத்தை அப்படியே தாங்கிக் கொண்டு கொஞ்சமும் நெகிழாமல் நிற்கிறதே! பரசுராமர் திகைத்துப்போய் சிலையாய் நின்றுவிட்டார். ‘‘சொல்லுங்கள் பரசுராமரே,‘‘ ராமன் கணீரென்று கேட்டான். ‘‘உங்கள் விஷ்ணு தனுசில் என் அம்பை நான் பூட்டிவிட்டேன். ஆனால் இதற்கு ஓர் இலக்கை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இலக்கை நிர்மூலம் செய்துவிட்டு இந்த அம்பு என்னிடம் திரும்பிவிடும். சொல்லுங்கள், எது இலக்கு’’ பரசுராமர் குழம்பினார். எந்த இலக்கைச் சொன்னாலும் அது முற்றிலும் அழிக்கப்படுமானால் அது இயற்கைக்கோ, சமுதாயத்துக்கோ பேரிழப்பாகி விடுமே என்று யோசித்தார். முடிவில், தன் தவப் பயன்களையெல்லாம் ஒன்று திரட்டி அருவமாக்கினார். அதையே இலக்காகக் கொள்ளும்படி ராமனைக் கேட்டுக் கொண்டார். உடனே ராமன் அம்பை விடுக்க, அது அப்படியே பரசுராமரின் தவப் பயன்களையெல்லாம் வாரி சுருட்டிக் கொண்டு அவனிடமே திரும்ப வந்தது. தசரதர் ராமனை அணைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். அவருடைய மனைவியரும், சீதையும், புதுமணத் தம்பதியரும் மகிழ்ச்சியடைந்தனர். பரசுராமர் கைகூப்பி ராமனை வணங்கினார். தன் ஆணவம், கோபம் எல்லாமும் அந்த அம்பு வீச்சுக்கு இரையாகிவிடவே, புத்துணர்வு பெற்றவரானார். விஷ்ணு தனுசை ராமனிடமே கொடுத்துவிட்டு, தெற்கு நோக்கிப் பயணித்தார். இப்போதைய கேரள பூமிக்கு வந்து சிவன் கோவில்கள் பலவற்றை நிர்மாணித்தார். கேரளப்பகுதி பரசுராம க்ஷேத்திரம் என்றே அழைக்கப்பட்டது. ராமனின் இந்த அற்புத ஆற்றலைக் காண அஷ்டதிக்கு தேவர்களும் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரான மனித குலத்துக்குப் பயனளிக்கும் மழையை அருளும் வருண பகவானிடம் விஷ்ணு தனுசை வழங்கினான் ராமன். தந்தை சொல் தட்டாத பரசுராமரின் சவாலை, தந்தை மீது மிகுந்த மரியாதையும், அபிமானமும் கொண்ட ராமன் ஏற்று முடித்ததுதான் எவ்வளவு பொருத்தம்!
|
|
|
|