|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » இடும்பியாகிய நான் ... |
|
பக்தி கதைகள்
|
|
‘நான் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவள். என் அண்ணனின் பெயர் இடும்பன். நாங்கள் வசித்த காட்டுக்கு யாரோ மனிதர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் என்னை அனுப்பிப் பார்த்து வரச் சொன்னான் என் அண்ணன். இப்படி வந்து சேர்ந்தவர்கள் குறித்து பின்னர் அறிந்து கொண்டேன். பாண்டவர்கள் தங்கிய அரக்கு மாளிகை தீப்பற்ற ஏற்பாடு செய்தான் துரியோதனன். அதில் அவர்கள் எழுப்பிய சுரங்கப்பாதை வழியாக பாண்டவர்களும் அவர்கள் தாய் குந்தியும் வெளியேறினார்கள். அங்கிருந்து ஒரு படகில் ஏறி கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டனர். உடலும் மனமும் களைத்துப் போக பீமன் தவிர்த்த மற்றவர்களும் குந்திதேவியும் அங்கு படுத்து உறங்கத் தொடங்கினார்கள். பீமன் அவர்களுக்கு காவலாக விழித்திருந்தார். இந்த சூழலில்தான் என் அண்ணனின் ஆணைப்படி நான் பாண்டவர்கள் இருந்த பகுதியை அடைந்தேன். அங்கே காவல் இருந்த பீமனைப் பார்த்ததும் என்மனம் அவர் வசம் சென்று விட்டது. என்ன ஒரு அழகான முகம்! என்ன ஒரு திடகாத்திரமான உடல்! அவரை மணந்து கொண்டு அவர்களுடனேயே தங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் அரக்கியான தோற்றத்தோடு சென்றால் அவர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாரே! எனவே என் மாய சக்தியால் மிக அழகான ஒரு பெண்ணாக என் உருவத்தை மாற்றிக் கொண்டேன். சில நகைகளையும் அணிந்து கொண்டு பீமனை அணுகினேன். ‘நீங்கள் யார்? உன் பலமான உடலும் களையான முகமும் என்னைக் கவர்ந்து விட்டன. நான் உங்களை மணந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். இந்தக் காட்டுக்கு அதிபதியாக என் சகோதரன் இடும்பன் இருக்கிறான். அதனால்தான் இந்தக் காட்டுக்கு இடும்ப வனம் என்று பெயர். அவன் மனிதர்களைக் கொன்று தின்பவன். அவன் இங்கு வந்தால் உங்கள் அனைவருக்கும் ஆபத்து. எனவே உங்கள் சகோதரர்களையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள். நானும் உங்களுடன் வந்து விடுகிறேன்’ என்றேன். பீமன் சிரித்தார். ‘உன் அண்ணன் வந்தால் அவனை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியும். தூங்கும் என் சகோதரர்களையும் அம்மாவையும் அவனுக்காக எழுப்ப முடியாது’ என்றார். நான் தவித்தேன். நான் பயந்தபடியே என் சகோதரன் அங்கு வந்து சேர்ந்தான். பாண்டவர்களைக் கண்டவுடன் தனக்கான அன்றைய உணவு வந்துவிட்டது என்று இடும்பன் எண்ணினான். அதேசமயம் அழகான உருவத்தை எடுத்துக் கொண்டு நான் பீமனுடன் அன்புடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் அவன் மிக ஆத்திரம் கொண்டான். என்னைப் பார்த்து மிகவும் கோபத்துடன் ‘முட்டாளே, நம் அரக்க குலத்துக்கே நீ அவமானத்தைத் தேடித் தந்து விட்டாய். போயும் போயும் ஒரு மனிதனையா காதலிக்கிறாய்? உன்னை இப்போதே கொல்லப் போகிறேன். அடுத்ததாக இந்த மனிதர்களையும் கொல்வேன்’ என்றான் உரத்த குரலில் குரலில். இப்படிக் கூறிக் கொண்டே தன் கைகளால் என் கழுத்தை நெரிக்க வந்தான். அப்போது அவன் கையைத் தடுத்து நிறுத்திய பீமன் ‘என் எதிரில் ஒரு பெண்ணைக் கொல்ல சம்மதிக்க மாட்டேன். தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோது’ என்றார். அதுவரை என் அண்ணனை யாரும் இப்படி எதிர்த்து பேசியதில்லை.அவன் பீமனை நோக்கிப் பாய்ந்தான். பீமன் சிறிதும் கவலைப்படவில்லை. இடும்பனை எளிதில் தடுத்து நிறுத்தினார். பிறகு இருவரும் நெடுநேரம் சண்டையிட்டார்கள். எனக்குப் பதற்றம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் விழித்துக் கொண்ட பிற பாண்டவர்கள் தங்கள் சகோதரனுக்கு உதவுவதற்கு முன் வந்தார்கள். ஆனால் அவர்களை உதவிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார் பீமன். சற்று நேரத்தில் என் சகோதரனைத் தோற்கடித்த பீமன் தன் கரங்களால் அவனைத் துாக்கினார். அவனைச் சுழற்றியபடி கீழே வீசினார். கீழே விழுந்த என் சகோதரன் இறந்தான். பிற பாண்டவர்களும் குந்தியும் பீமனைப் பாராட்டினார்கள். இறந்தது என் அண்ணன் என்பதால் நான் அதற்காக அழுவேன் என்று பீமன் நினைத்தார். ஆனால் எனக்கு வருத்தம் ஏற்படவில்லை. ஏனென்றால் என் அண்ணனின் பல கொடும் செயல்களை நான் நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன். அப்போது பீமனைப் பார்த்து அர்ஜுனன் ‘நாம் இந்த இடத்தை விட்டு உடனே சென்று விடுவோம். இங்கு மேலும் பல அரக்கர்கள் கூட இருக்கலாம். தவிர துரியோதனனும் நம்மைக் கொல்ல தனது ஆட்களை அனுப்பி இருக்கலாம்’ என்றும் கூறினார். உடனே அவர்கள் ஆறு பேரும் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள். நானும் அவர்களைப் பின் தொடர்ந்தேன். குந்திதேவி என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். ‘நீ யார்? எதற்காக எங்களை பின் தொடர்கிறாய்?’ என்று கேட்டார். நான் அவர் பாதங்களைப் பணிந்து ‘அம்மா என் பெயர் இடும்பி. நான் ஒரு அரக்கி. இப்போது இறந்த இடும்பனின் சகோதரி’ என்றேன். பிறகு பீமனை மணம் புரிய விரும்புவதையும் தெரிவித்தேன். என்னை மணக்குமாறு தன் மகனுக்கு ஆணையிட வேண்டும் என்றும் குந்திதேவியிடம் கோரிக்கை வைத்தேன். முதலில் திகைத்தாலும் குந்திதேவி மனமிரங்கினார். பீமனைப் பார்த்தார். அவரும் என்னை விரும்புவதை உணர்ந்து கொண்டார். ‘சரி நீங்கள் இருவரும் மணந்து கொள்ளுங்கள். ஆனால் பகல் வேளையில் மட்டுமே நீங்கள் ஒருவருடன் மற்றவர் இருக்க முடியும். இரவு வேளையில் எங்கள் பாதுகாப்புக்காக பீமன் வந்து விட வேண்டும்’ என்று கட்டளையிட்டார். நாங்கள் இதற்கு சம்மதித்தோம். அதற்குப் பிறகு பீமனும் நானும் உற்சாகமாக எங்கள் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினோம். பகல் முழுவதும் என்னுடன் இருந்த பீமன் பொழுது சாய்ந்ததும் தன் அம்மா, சகோதரர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று விடுவார். காலம் கடந்தது. நான் கருவுற்றேன். எனக்கு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு கடோத்கஜன் என்று பெயர் வைத்தோம். ஒரு கட்டத்தில் பாண்டவர்கள் வனத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்தார்கள். என்னையும் கடோத்கஜனையும் அரண்மனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்றார் குந்தி தேவி. எங்கள் மகன் தன் தந்தையை நோக்கி ‘அப்பா நான் என் அம்மாவுடன் தங்குகிறேன். உங்களுக்கு எப்போது எந்த சிக்கல் நேரிட்டாலும் என்னை மனதில் நினையுங்கள். நான் வந்து உங்களுக்கு உதவுவேன்’ என்றான். பின்னர் மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியும் செய்தான். சில வருடங்களே இணைந்து வாழ்ந்தாலும் என் கணவர் பீமனுடன் நான் நடத்திய இல்லற வாழ்க்கை எனக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது. என் மகனும் எனக்குப் பெருமை சேர்த்தான்’. ---------------- மலைவாசஸ்தலமான மணாலியில் உள்ளது ஹடிம்பா ஆலயம். (இடும்பியைத்தான் வட இந்தியாவில் ஹடிம்பா என்று குறிப்பிடுகிறார்கள்). துங்ரி என்ற கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் பெரிதான சிற்ப வேலைப்பாடுகள் கிடையாது. ராஜகோபுரமும் திருக்குளமும் இல்லை. இருந்தாலும் அது அந்த பகுதியில் பிரபலமாக உள்ளது. இது மரத்தினால் செய்யப்பட்ட ஆலயம். இது ஒரு மிகப் புராதனமான கோயில்.1553ல் பகதுார் சிங் என்ற மன்னர் இந்த கோயலின் நவீன வடிவத்தை கட்டினார். என்றாலும் இதன் முக்கிய தெய்வமான இடும்பியின் சிலை சில நுாற்றாண்டுகளுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கோயில் அமைந்துள்ள இடம் அபாரம். சுற்றிலும் காட்டுப்பகுதி. இங்குதான் இடும்பனும் இடும்பியும் நடமாடினார்கள் என்றால் நம்பத் தோன்றுகிறது. ஒளி குறைந்த பகுதி என்பதால் மாலைக்கு மேல் அங்கு தரையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளிபொருந்திய விளக்குகளை எரிய விடுகிறார்கள். ஏற்கனவே பல மாய சக்திகள் பெற்ற இடும்பி மாபெரும் பலசாலியை (பீமன்) கணவனாகவும் அடைந்ததால் தெய்வ நிலையை எய்தி அருள்புரிவதாக நம்புகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் வகையில் கோயில் வளாகத்தின் வாசலில் ஆரோக்கியமான இரு முயல்களை துாக்கிக்கொண்டு நிற்கிறார்கள் திபெத்தியப் பெண்கள். புஷ்டியான காட்டெருமை ஒன்றும் காணப்படுகிறது. முயல்களைக் கையில் வாங்கிக் கொண்டும், காட்டெருமை மீது ஏறிக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டு ‘தட்சிணை’ கொடுக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். தசரா விழாவின் தொடக்கத்தில் ஹடிம்பா அம்மன் ரதத்தில் உட்கார்ந்து கொள்ள, அதற்குப் பிறகுதான் குலுா மணாலியில் உள்ள அத்தனை கோயில்களிலும் தசராக் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
|
|
|
|
|