|
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை வளர்த்து வந்தாள். ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறி விட்டார். உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இல்லாவிட்டால் என் மனம் தாங்காது என வருந்தினாள். ‘‘கவலைப்படாதே இந்திராணி...நான் பிரம்மாவிடம் முறையிடுகிறேன்...ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர் தானே? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம் என்று சொல்லி பிரம்மாவைத் தேடிச் சென்றார். விஷயத்தைக் கேட்ட பிரம்மா, ‘‘இந்திரா... உயிர்களைப் படைப்பது மட்டுமே எனது பணி. உயிர்களை காப்பது மகாவிஷ்ணுவின் தொழில். அவரிடம் சென்று உதவி கேட்போம்’’ என அழைத்துச் சென்றார். இந்திரனுடன் வைகுண்டம் சென்ற பிரம்மா, விபரங்களை மஹாவிஷ்ணுவிடம் தெரிவித்தார். ‘‘உயிர்களை காப்பவன் நான் தான். ஆனால் கிளி இறக்கும் தறுவாயில் உள்ளது. அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவனே அதிலிருந்து அதற்கு விலக்கு அளிக்க வேண்டும். எனவே இதை சிவனிடம் முறையிடுவோம்’’ என்று சொல்லி பாம்பணையில் படுத்திருந்த மகாவிஷ்ணு எழுந்தார். விபரங்களைக் கேட்டார் சிவன். ‘‘அழிக்கும் தொழில் என்னுடையது தான். ஆனாலும் உயிரை எடுக்கும் பொறுப்பு எமதர்மனுக்கு உரியது. அதனால் எமதர்மனிடம் அந்த கிளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கலாம் என்று அவர்களுடன் எமலோகம் புறப்பட்டார் சிவன். சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் என நால்வரும் வருவதைக் கண்ட எமன் பதறிப்போய் ஓடி வந்தார். விஷயத்தைக் கேட்ட அவர், ‘‘ஒரு உயிரை எந்த நேரத்தில்? எந்த சூழ்நிலையில்? என்ன காரணத்தால்? எடுக்கவேண்டும் என்னும் காரணத்தை மரண ஓலையில் எழுதி அறையில் தொங்க விட்டு விடுவோம். அந்த ஓலை அறுந்து விழும் நாளில் குறிப்பிட்ட ஜீவனின் ஆயுள் முடியம். வாருங்கள்... அந்த அறைக்குச் சென்று கிளியின் மரண ஓலையைப் பார்த்து அதை மாற்றுவோம் என அழைத்துச் சென்றார். இப்படியாக இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எமதர்மன் ஆகிய ஐவரும் அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அறுந்து விழுந்தது. அந்த ஓலையை பார்த்தனர். அதுதான் அந்த கிளியின் மரண ஓலை. அதில் ‘இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எமன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அந்த நேரத்தில் இந்த கிளியின் வாழ்வு முடியும்’ என்றிருந்தது. இதுதான் விதி!! விதியை மாற்ற யாராலும் முடியாது. யாருக்கு விதி எப்படி முடியும் என்பது யாரும் அறியாத பரம ரகசியம்.
|
|
|
|