|
‘எதையும் பாசிடிவா பார்க்கணும். எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் ஏதாவது பாசிடிவ் அம்சம் இருக்கும். அதில் கவனம் செலுத்தினால் ஜெயிச்சிடலாம்’ என அடிக்கடி சொல்வார் எங்கள் பெரியப்பா. அதனால் அவருக்கு பட்டப்பெயராக ‘பாசிடிவ் எனர்ஜி’ என்றே வைத்திருந்தோம். ‘‘அரண்மனை மாதிரி வீடு, ஏக்கர் கணக்கில் நிலம், ஏகப்பட்ட பணம் எல்லாம் இருக்கிற அவர் பாசிடிவ் எனர்ஜி பத்தி பேசலாம். நம்ம மாதிரி அன்றாட வாழ்க்கைக்கு போராடுறவனோட கஷ்டம் அவருக்கு என்ன தெரியும். வாழ்க்கையில ஜெயிக்க வேண்டாம், அதை சமாளிக்கறதே நமக்கு பெரிய விஷயம்’’ என்று என் அண்ணன் அவர் போனவுடன் கிண்டல் செய்வான். அவன் சொல்வதும் பொய் கிடையாது. எது எப்படியோ? பெரியப்பா என்றாலே உயர்ந்த எண்ணம் என் மனதிற்குள் இருந்தது. தோற்றத்தில் கம்பீரம், நடையில் வேகம், எப்போதும் எதிலும் நல்லதை பார்க்கும் எண்ணம் என நற்பண்புகள் அவரை உயர்ந்த மனிதராக ஆக்கியிருந்தன. வியாபாரத்தில் லாபம் ஈட்டிய அவருக்கு கடந்த ஐந்து வருடமாக தொழில் இறங்கு முகமாக இருந்தது. வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாவற்றை இழந்த அவர் அடிமட்டத்திற்கு வந்துவிட்டார். ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாமல் பிழைப்பு தேடி மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்ததால் அவரது ஒரே மகன் இப்போது அங்கு கல்லுாரி மூன்றாம் ஆண்டு படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவரின் ஓட்டலில் மேலாளராக பணிபுரிகிறார் அந்தேரியில் மிகச் சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள் என்று அவர்களைப் பற்றி கேள்விப்பட்ட போது வேதனையாக இருந்தது. மும்பைக்கு போன பிறகு அவரை சந்திக்கவே இல்லை. தற்போது அலுவல விஷயமாக மும்பை சென்ற எனக்கு அவரைச் சந்திக்கும் ஆர்வம் அதிகரித்தது. அந்தேரியில் அவரது வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டேன். ஒருவழியாக வீட்டை அடைந்தேன். என்னைக் கண்டதும் பெரியம்மா ஆச்சரியத்துடன் வரவேற்றார். உடல் மெலிந்த அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. பெரியப்பா இல்லையா?’ எனக் கேட்டேன். ‘வாடா..கண்ணா’ என்றபடி உள்ளே இருந்து வேகமாக பெரியப்பா வந்தார். அவர் முகத்தில் வாட்டம் தெரியவில்லை. அவர்களின் மகன் கல்லுாரிக்குப் போயிருந்தான். என்னிடம் குடும்ப, ஊர் நிலவரத்தை எல்லாம் விசாரித்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பெரியப்பாவின் எளிய சூழலைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. மனம் விட்டு அவரிடம் சொல்லி வருந்தினேன். ‘‘கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சா... இருக்கிறதோட அருமை தெரியாம போயிடும். இப்பவும் நல்லாப் படிக்கிற, எங்களை மதிக்கிற நல்ல பிள்ளை இருக்கான். எனக்கு உழைக்கிற அளவுக்கு உடம்பில தெம்பு இருக்கு. வெளியூரா இருந்தாலும் நல்ல நண்பரின் ஆதரவு கிடைச்சிருக்கு. வாழ்க்கையை நடத்த போதுமான வருமானம் இருக்கு. இப்படி ‘இருக்கிற’ விஷயங்கள் நிறைய இருக்கு’ என்றார் பெரியப்பா. காபியுடன் வந்த பெரியம்மா, ‘உங்க உபதேசத்தை நிறுத்துங்க. ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சதை இழந்துட்டுக் கஷ்டப்படறது வேற.. ஊம்....வாழ்க்கையில எதுவும் நிரந்தரமில்லை’’ ‘‘எதுவுமே நிரந்தரமில்லைன்னா... நீ கஷ்டம்னு நினைக்கிற இதுவும் நிரந்தரம் இல்லை தானே? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்ற’’ என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார். பிரமிப்புடன் தலையாட்டினேன். பெரியப்பாவின் மதிப்பு என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்தது. நிஜமாகவே பெரியப்பா ‘பாசிடிவ் எனர்ஜி’ கொண்டவர் தான் என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன்.
|
|
|
|