|
தன் பிள்ளையின் சாதனையையும், மேன்மையையும் புகழ்ந்து ஊரார் வந்து சொல்லும் போது பெற்றோருக்கும், ஏனைய குடும்பத்தாருக்கும்தான் எவ்வளவு பெருமிதமாக இருக்கும்! அவர்கள் வர்ணிக்கும் போது, ‘அடடா, நாம் அந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இல்லாமல் போனோமே! பிள்ளையின் பராக்கிரமத்தைக் காண முடியாமல் போய்விட்டதே!‘ என்று சந்தோஷமாய் ஏங்குவார்கள். அந்த மனநிலையில்தான் தசரதரும் மற்றவர்களும் இருந்தனர். சீதையை மணக்கும் முன் சிவதனுசை முறித்த ராமனின் பேராற்றலை காணவில்லையே என்ற அவர்களின் ஆதங்கம் பரசுராமர் ரூபத்தில் வந்து தீர்க்கப்பட்டது! தசரதர் பிரமித்து போனார். அதுவரை ஒரு பாலகனாகவே ராமனை பாவித்து வந்த அவர், பேராண்மை மிக்க, புஜங்கள் பருத்து உயர்ந்து நின்ற அவனது தோற்றம் கண்டு கர்வப்பட்டார். பிறருக்கும் அதே உணர்வுதான். ராமன் என்ற மலருக்குள் இத்தனை ஆக்ரோஷமான புயலா! எல்லோரையும் விட சீதை பெரிதும் மகிழ்ந்தாள். தன் மணாளனின் பேராற்றலை, குறுகிய காலத்துக்குள் இரண்டாம் முறையாகக் காணக் கொடுத்து வைத்தவளாயிற்றே! அவளுக்குதான் எத்தனை பெருமை! சுற்றி நின்றவர்களெல்லாம் அவளின் பாக்கியம் கண்டு கண்களாலும், மலர்ந்த முகத்தாலும் பாராட்டினர். சகோதரர்களுக்கும் தம் அண்ணனின் புஜபல பராக்கிரமம் வியப்பை தந்தது. தம்முடன் இத்தனை சாதுவாகப் பழகிய ராமனா இது! கோசலை நிலையோ கேட்கவே வேண்டாம். ஈன்ற பொழுதில் பெரிதுவந்தாள் அவள். அவளுக்குச் சமமாகவே சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் கைகேயியும், சுமித்திரையும். உடன் வந்த பரிவாரங்கள் கரகோஷம் புரிந்தார்கள். இனி அயோத்தி செல்லும்வரை ஏற்படக்கூடிய எந்தத் தடங்கலையும் ராமன் தலைமையில் தகர்த்தெறிந்து விடலாம் என நம்பிக்கை கொண்டனர். அந்தக் கணத்திலேயே அயோத்தியின் மன்னராக ராமனைத் தம் மனதில் வரித்துக் கொண்டு விட்டனர். தசரதனுக்கும் அதே எண்ண விதை மனதில் ஆழமாக வேர் கொண்டது. அயோத்தி மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் தசரத குடும்பத்தாரை எதிர் கொண்டழைத்தார்கள். நாடே கோலாகலம் பூண்டிருந்தது. அரண்மனைகள் வண்ண ஓவியங்களாலும், ஒளி விளக்குகளாலும் பிரகாசித்தன. மரம், செடி, கொடி, புல், பூண்டுகூட மெல்லத் தலையசைத்து வரவேற்பு நல்கின. தென்றல் காற்று புது மணத்துடன் வீசியது. பன்னீர் துளிகளாக லேசாக விழுந்தது மழைத்துாறல். ஆவினங்களும் உற்சாகக் குரல் கொடுத்தன. அது தம் தலைவனுக்குப் பாராட்டுச் சங்கொலி முழக்கம் போலத் தோன்றியது. ஆரத்தி, திருஷ்டி கழித்தல் முதலான சம்பிரதாயங்கள் நிறைவேறியபின் ராமனும் சகோதரர்களும் தத்தம் மனைவியுடன் அரண்மனைக்குள் வலதுகால் பதித்து உள்ளே சென்றார்கள். வெகு தொலைவில் திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்தபடி அவர்கள் அரண்மனைக்குள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மந்தரை என்ற கூனி. அவளது முதல் பார்வை விழுந்தது பரதன் மேல்தான். ‘அடடா, இந்தப் பிள்ளைதான் மணக்கோலத்தில் எத்தகைய பேரழகனாகத் திகழ்கிறான் என மனதுக்குள் வியந்தாள். ஆனால் பரதனுக்கும் முன்னால், சீதையுடன் வந்து கொண்டிருந்த ராமனை அவளது பார்வை குரோதத்துடன் விலக்கியது. கூன் விழுந்த தன் முதுகை பால வயது ராமன் உண்டிவில் கல்லால் அடித்தானே என்ற காழ்ப்புணர்ச்சி அவளுக்குள் வளர்ந்து விட்டிருந்தது. ராமனின் சிறுபிள்ளை விளையாட்டு என பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்ளாமல் தன் குறையை கேலி செய்த விஷமமாகவே அவள் கருதினாள். அற்பமான காரணம்தான். ஆனால் தான் மகாராணி கைகேயியின் சேவகி என்ற அகங்காரம் அவள் உள்ளத்தில் ஊறிவிட்டதால், தன்னையும் ராணியைப் போல அனைவரும் நடத்த வேண்டும் என்றும் எதிர்பார்த்தாள். ஏற்கனவே கூனிக்கு அயோத்தி வாழ்க்கையின் பொதுவுடைமை பிடிக்கவே இல்லை. கைகேய நாட்டில் தான் ஏகபோகமாக வாழ்ந்ததென்ன, இங்கே தனக்கு மதிப்பு கொடுப்பாரின்றி அவமானப்படுவதென்ன... கைகேய நாட்டில் தன்னைக் கண்டு எப்படி பயப்படுவார்கள்! கைகேயியின் பணிப்பெண் என்பதில்தான் தனக்கும் எவ்வளவு அதிகாரம் இருந்தது! பிற பணியாளர்கள் தன்னைக் கண்டு நடுங்குவார்களே... இங்கே அத்தகைய செல்வாக்கு இல்லையே! ஆமாம். அயோத்தியில் நட்பும் பாசமும்தான் மிகுந்திருந்ததே தவிர, அதிகாரமும் ஆணவமும் யாரிடமும் இல்லை. இங்கு ராஜாங்கம் நடந்தாலும், அரச நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது சம்பிரதாயமான நடவடிக்கைகளாகத்தான் இருந்தனவே தவிர, எங்கும் ஆதிக்க குணம் மேலோங்கவில்லை. ராஜநடையில் கம்பீரம் இருந்தாலும் அதனால் தரை அதிரவில்லை. ராஜபார்வையிலும் கடுமையில்லை; கருணையே நிரம்பியிருந்தது. இது கூனிக்குப் பிடிக்கவில்லை. தன் அதிகாரம் செல்லுபடியாகவில்லையே என்ற ஆத்திரம் அவளுடைய கூன் விழுந்த முதுகை மேலும் குறுக்கியது. மந்தரை என்ற தன்னுடைய சொந்தப் பெயர் தனக்கே மறந்துவிடும் அளவுக்குத் தன் குறையையே பெயராக்கிவிட்ட கொடுமையில் ஏற்கனவே மனம் நொந்திருந்தவள் அவள். முக்கியமாக ராமன், தன் முதுகில் உண்டிவில் கல்லால் அடித்தல்லவா கேலி செய்தான்! அவள் பொருமினாள். அந்த ராஜ குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என தீர்மானித்தாள். இளம் வயது முதலே தன்னுடனேயே இருந்து, தன் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொண்டு, தன் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவள் என்ற வகையில் கூனி மீது கைகேயிக்குத் தனி பாசம் இருந்தது. சில முக்கிய விஷயங்களில் அவளது ஆலோசனையைக் கேட்கவும் கைகேயி தயங்கியதில்லை. இப்படி இருவருக்கும் இருந்த நெருக்கத்தை பழிவாங்குவதற்கான கருவியாக பயன்படுத்த காத்திருந்தாள். வருடங்கள் கடந்தன. (ராமன் சீதையை மணமுடித்து அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தான்; அதற்குப் பிறகுதான் வனவாசம் சென்றான் என்று சில ஆன்றோர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.) ‘போதும், உங்கள் சந்தோஷம்’ என்று பழிப்பு காட்டுவதுபோல விதி விளையாட ஆரம்பித்தது. அயோத்திக்கு வந்திருந்தார் கேகய நாட்டு மன்னர். இவர் பரதனின் மாமா, கைகேயியின் சகோதரர். பெயர் உதாஜித். போரில் எதிரிகளை எளிதாக வெல்பவன் என்று இந்தப் பெயருக்குப் பொருள். வால்மீகியின் ‘உதாஜித்‘தை, கம்பர் ‘உதாசித்து‘ என்று மாற்றியிருக்கிறார். சம்பந்தி சம்பிரதாயமாகவும், சகோதரியையும் அவளுடைய பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலாலும் எப்போதாவது அயோத்திக்கு வந்து செல்வார் அவர். இம்முறை பரதனையும் அவன் மனைவி மாண்டவியையும் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உபசாரம் செய்து, தன் உறவுக் கடனைக் கழிக்க விரும்பினார். ஆனால் மைத்துனர் வந்து இங்கே தங்கி பல நாட்கள் ஆகியும் தசரதர் அவர் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. தான் கேகய நாட்டு மாப்பிள்ளை என்ற ஹோதாவோ? ஆனால் திடீரென ஒருநாள் அவர் பரதனை அழைத்தார். ‘உன் மாமன் உன்னைத் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டு இங்கே வந்து வெகு நாட்களாகத் தங்கியிருக்கிறார். ஆகவே நீ உன் மனைவியுடன் போய் சில காலம் கழித்துத் திரும்ப வா’ என அனுமதி அளித்தார். பரதனுக்கு இதில் உடன்பாடு இல்லை. ஏன்? ராமனைப் பிரிய வேண்டுமே! அவனைப் பார்க்காமல் ஒருநாள்கூட இருக்க முடியாதே. ஆனால் தந்தை கட்டளையிட்டுவிட்டாரே. (தந்தை சொல் தட்டாதவன் ராமன் மட்டுமல்ல, பரதனும்தான்!) மாமனும் வற்புறுத்துகிறாரே! வேறு வழியின்றி விடை பெறுவதற்காக ராமனைப் போய்ப் பார்த்தான். கண்களில் நீர் தளும்ப வந்து நின்ற தம்பியை அன்புடன் தட்டிக் கொடுத்தான் ராமன். ‘‘போய் வா பரதா. கொஞ்ச நாட்களில் திரும்பிவிடப் போகிறாய். இதுபோன்ற தற்காலிக பிரிவுதான் நம்மிடையே உறவை பலப்படுத்தும்’ என்றான். மனமே இல்லாமல் விடை பெற்றான் பரதன். நீண்டகாலப் பிரிவுக்கான ஒத்திகை இது என்று அவன் உணரவில்லை! ராமனுக்கு லட்சுமணன் போல பரதனுக்கு சத்ருக்னன் என்றிருந்ததால், இவனும் தன் மனைவி சுருத கீர்த்தியை அழைத்துக் கொண்டு பரதனுடன் புறப்பட்டான். கைகேயி மகிழ்ச்சியுடன் தன் சகோதரனுடன் பரதனை அனுப்பி வைத்தாள். ஆனால் தசரதன் ஏதோ திட்டமிட்டு வேண்டுமென்றே பரதனை அயோத்தியிலிருந்து அனுப்புகிறார் என கூனி சந்தேகித்தாள்.
|
|
|
|