|
ஆருணீ, உபமன்யு இருவரும் ஆயோத தவும்ய முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். அவர்களின் குருபக்தியை சோதிக்க எண்ணிய முனிவர் குருகுலத்தில் இருந்த பசுக்களை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். பசுக்களை ஓட்டிக் கொண்டு காட்டுக்கு கிளம்பினர். அப்போது உணவு ஏதும் உண்ண வேண்டாம் என முனிவர் உத்தரவிட்டார். ‘தங்களின் கட்டளைப்படி நடப்போம்’ என்று சொல்லி விட்டு காட்டுக்கு கிளம்பினர். பகலில் நேரம் செல்லச் செல்ல சூரியனின் தாக்கம் அதிகமானது. பசி வாட்டியது. அப்போது உபமன்யுவிடம், “குருநாதர் ஏதும் சாப்பிடக் கூடாது என்று தானே சொன்னார். குடிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே! பாலைக் குடித்து பசியாற்றுவோம்” என்றான் ஆருணி. இருவரும் பாலைக் கறந்து குடித்தனர். சோர்வின்றி குருகுலத்திற்கு சேர்ந்தனர். சீடர்களைக் கண்ட முனிவர் ‘காட்டில் என்ன சாப்பிட்டீர்கள்’ எனக் கேட்டார். ‘குருவே! சாப்பிடவில்லை. கறந்த பாலைக் குடித்தோம்’ என்றனர். சீடர்களிடம் ‘போனால் போகட்டும்...நாளை முதல் பால் குடிக்காதீர்கள்’ என்றார் முனிவர். சம்மதித்த அவர்கள் மறுநாள் பசுக்களுடன் புறப்பட்டனர். செல்லும் வழியிலுள்ள கிராமத்தினர் சிறுவர்களின் நிலை கண்டு இரக்கப்பட்டனர். “பாலும், உணவும் சாப்பிடத்தானே உங்கள் குருநாதர் தடை விதித்துள்ளார். பழங்கள், தண்ணீரை யாசகம் பெறத் தடையில்லையே’ என்றனர். கிராமத்தினர் கொடுத்த பழங்களை வாங்கி பசியாறினர். மாலையில் குருகுலம் திரும்பினர். “என் கட்டளையை மீறி பாலைக் கறந்து குடித்தீர்களா?’ என மிரட்டினார் முனிவர். ‘இல்லை குருநாதா! கிராம மக்களிடம் பழங்கள், தண்ணீரை யாசகம் பெற்றோம்’’ என்றனர். ‘இனி யாசகம் பெறவும் கூடாது’ என்றார். மறுநாள் அவர்கள் பசியுடன் காட்டுப் பாதையில் கால் போன திசையில் நடந்தனர். வழியில் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் இருந்த மரங்களில் பழங்கள் பழுத்திருந்தன. ‘அடேய் ஆருணீ! யாசகம் வாங்கி சாப்பிடாதே என்று தானே சொன்னார். மரங்களில் பழங்களைப் பறிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே, இதை இருவரும் சாப்பிடுவோமா?’ என்றான். ஆளுக்கொரு பழத்தை சாப்பிட்டு குளத்து நீரை குடித்தனர். விஷ மரம் என்பதால் அதன் பழங்களைச் சாப்பிட்ட இருவருக்கும் பார்வை போனது. வழியறியாமல் திகைத்து நின்றனர். மாலையில் குருகுலம் திரும்பாத சீடர்களைத் தேடி காட்டுக்கு வந்தார் முனிவர். குளக்கரையில் பார்வையின்றி நிற்பபதைக் கண்டார். நடந்ததை எல்லாம் முனிவரிடம் விவரித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட முனிவரின் உள்ளம் உருகியது. சீடர்களை தழுவியபடி கண்ணீர் சிந்தினார். மருத்துவர்களான அசுவினி தேவர்களை பிரார்த்தித்து பார்வை பெறச் செய்தார் முனிவர்.
|
|
|
|