|
நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார் பண்ணையார் ஒருவர். அவர்களில் நான்காவது மனைவி மீது தான் ஆசை வைத்திருந்தார். எப்போதும் அவள் மீது அக்கறையுடன் இருப்பார். மூன்றாவது மனைவியையும் அவருக்கு பிடிக்கும். ஆனால் அவரை வெளியாட்களிடம் அறிமுகப்படுத்தவும் மாட்டார். யாருடனும் போய் விடுவாளோ என்ற பயம் கூட உண்டு. இரண்டாவது மனைவியிடம் ஏதாவது பிரச்னை வந்தால் மட்டும் சொல்வார். அவளும் அதை தன் பிரச்னையாக கருதி தீர்த்து வைக்க முயற்சிப்பாள். முதல் மனைவியைக் கண்டாலே அவருக்கு பிடிக்காது. பார்க்கவும் விரும்ப மாட்டார். இப்படி வாழ்ந்த பண்ணையாருக்கு வயதாகி விட்டது. மரண படுக்கையில் கிடந்தார். அப்போது மனைவிகளிடம், ‘‘உங்களுக்குள் என் மீது அன்பு கொண்டவள் யார்? சாகும் போது என்னுடன் வரத் தயாராக இருப்பது யார்?’’ எனக் கேட்டார். நான்காவது மனைவி, ‘‘இவ்வளவு காலம் உங்களுடன் இருந்ததே அதிகம்’’ என்று சொல்லி கையை விரித்தாள். மூன்றாவது மனைவி, ‘‘ உங்களுடன் நான் ஏன் வரவேண்டும், எனக்கு இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கிறது’’ என்று நகர்ந்தாள். இரண்டாவது மனைவியோ, ‘‘என்னால் வர முடியாது. வேண்டுமானால் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்யும் வரை இருக்கிறேன்’’ என்றாள். அதைக் கேட்டு அழுதார் பண்ணையார். அப்போது முதல் மனைவி, ‘‘நான் உங்களுடன் வரத் தயார். மரணத்திற்கு பிறகும் உங்களுடன் தான் இருப்பேன்’’ என்றாள். மனைவியை நிமிர்ந்து பார்த்த அவருக்கு அழுகை பீறிட்டது. காரணம் அவள் மிக மெலிந்திருந்தாள். இவ்வளவு காலமாக இவளை புறக்கணித்து விட்டேனே என்ற கவலையுடன் உயிரை விட்டார். இந்த பண்ணையாரைப் போலவே நம் அனைவருக்குமே நான்கு மனைவிகள் இருக்கிறார்கள். நான்காவது மனைவி தான் நம் உடல். அதை அழகுபடுத்திக் காட்ட என்னென்னவோ முயற்சிகளில் ஈடுபடுகிறோம். ஆனால் அது மரணத்திற்குப் பின் நம்முடன் வருவதில்லை. மயானத்தில் எரிக்கப்பட்டு சாம்பலாகி விடும். மூன்றாவது மனைவி தான் நாம் சேர்த்த பணம், சொத்துக்கள். அவற்றை மறைக்கவே விரும்புகிறோம். மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்ற பயம். ஆனால் அவை நம் காலத்திற்குப் பிறகு மற்றவருக்கு உரியதாகும். இரண்டாவது மனைவி தான் குடும்பம், உறவினர்கள். அவர்கள் இறுதி பயணத்துடன் நம்மை விட்டு விலகிச் செல்வர். முதல் மனைவியே நம் ஆன்மா. இதுவே கடைசிவரை நம்முடன் இருக்கும். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. ஒழுக்கக்குறைவு, தீயபழக்கங்களால் ஆன்மாவை சித்திரவதை செய்து பாவச்சுமைக்கு ஆளாகிறோம். நலமுடன் வாழ வேண்டிய அவள் நம்மால் நலிவடைகிறாள். ஆன்மாவை வலுவாக வைத்திருங்கள். தவறு எனத் தெரிந்தே செய்யும் செயல்களால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு முதல் மனைவியான ஆன்மா பலத்தை இழக்கிறது. ஆன்மபலம் கொண்டவர்கள் மரணத்தைக் கண்டும் அஞ்ச மாட்டார்கள். மற்ற மூன்று மனைவிகளிடம் கிடைப்பவை எல்லாம் தற்காலிக இன்பமே. முதல் மனைவியான ஆன்மா மட்டுமே நிலையான மகிழ்ச்சியைத் தரும்.
|
|
|
|