|
வயதான விவசாயி பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போனது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் "என்ன ஒரு துரதிர்ஷ்டம்?" என பரிதாபத்துடன் விசாரித்தனர். ‘இருக்கலாம்’ என்று ஒரே வார்த்தையில் விவசாயி பதிலளித்தார். அடுத்த இரண்டே நாட்களில் தொலைந்த குதிரை தன்னுடன் இரண்டு குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி தான். இப்போ மூணு குதிரை கிடைச்சிடுச்சு" என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதுபடுத்தாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்றதால் கீழே விழுந்தான். அவனுக்கு வலது கால் முறிந்தது. "என்னப்பா, உன் குடும்பத்தில ஒரு நன்மை நடந்தா... அடுத்தே ஒரு தீமை நடக்குது. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேலாகும் போலிருக்கே. ரொம்ப கஷ்டம் தான்" என்று கூறி ஆதங்கப்பட்டனர். விவசாயி பெரிதாக வருந்தவில்லை. "இருக்கலாம்" என்று வழக்கமான பதிலையே கூறினார். ஒரு மாதம் கடந்தது. அண்டை நாட்டு மன்னன் போர் தொடுக்கவே, நாட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் பங்கேற்க வேண்டும் என மன்னர் ஆணையிட்டார். அரண்மனை காவலர்கள் வீடு வீடாக புகுந்து இளைஞர்களை போர் பயிற்சியில் ஈடுபடுத்த அழைத்துச் சென்றனர். ஆனால் விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் பயிற்சியில் இருந்து விலக்கு அளித்தனர். இதைக் கண்டு மக்கள் விவசாயியின் மகனை அதிர்ஷ்டசாலி எனப் புகழ்ந்தனர். அப்போதும் விவசாயி "இருக்கலாம்" என்றே பதிலளித்தார். எந்த சூழலிலும் விவசாயியின் மனம் சமநிலையை இழக்கவில்லை. மனித வாழ்வின் இயல்புகளை அவர் நன்றாக புரிந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் மறைமுகமாக பல பாடங்களை இயற்கை நமக்கு உணர்த்துகிறது. நன்மையும், தீமையும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். கஷ்டமான சூழ்நிலை என்பது யாருக்கும் நிரந்தரமானதல்ல. நாளையே அது நன்மையாக மாறி விடும். சந்தோஷமான சூழ்நிலையில் நாம் தலைகால் புரியாமல் ஆடத் தேவையில்லை. சுகமும், துக்கமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை என்பதை உணர்ந்தால் போதும்.
|
|
|
|