|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » துரியோதனனாகிய நான் ... |
|
பக்தி கதைகள்
|
|
நான் கவுரவர்களில் மூத்தவன். பார்வையிழந்த திருதராஷ்டிரனுக்கும் பார்வையை மறைத்துக் கொண்ட காந்தாரி தேவிக்கும் பிறந்தவன். ஹஸ்தினாபுரத்தின் மன்னன். அதன் ஒரு துளியையும் பாண்டவர்களுக்கு விட்டுத்தர இயலாதவன். அதன் காரணமாகவே போரில் இறந்தவன். என் இயற்பெயர் சுயோதனன். பெரும் போர் வீரன் என்பது இதற்குப் பொருள். இதை துரியோதனன் என்று நானே மாற்றிக் கொண்டேன். போரில் கடுமையாக ஈடுபடுபவன் என்று இதற்குப் பொருள். நாங்கள் நுாறு சகோதரர்கள். ஒரு தாய்க்கு இத்தனை குழந்தைகளா என்று நீங்கள் வியந்தால் நாங்கள் பிறந்த விதத்தைக் கேட்டு மேலும் பலமடங்கு வியப்படைவீர்கள். ஒருமுறை மகரிஷி வியாசர் எங்கள் தந்தை திருதராஷ்டிரரின் அரண்மனைக்கு வந்தார். அவரை உபசரித்த காந்தாரி தேவியைப் பார்த்து ‘உனக்கு நுாறு குழந்தைகள் பிறப்பார்கள்’ என்று மனமார வாழ்த்தினார். ஒரு கட்டத்தில் என் தாய் கர்ப்பம் அடைந்தார். ஆனால் கருவுற்று இரண்டு வருடங்கள் ஆகியும் அவருக்குப் பிரசவம் நிகழவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த என் தாய்க்கு, வனத்தில் குந்தி தேவிக்கு அடுத்தடுத்து தர்மன், பீமன் ஆகிய இரு மகன்கள் பிறந்த தகவலும் எட்டவே அவர் மனம் ஆதங்கத்தில் பொங்கியது. கருச்சிதைவு செய்து கொண்ட என் தாய் காந்தாரியின் வயிற்றில் இருந்து ஒரு மிகப்பெரிய சதைப்பிண்டம் வெளியானது. அப்போது அங்கு வியாசர் வந்து சேர, ‘நீங்கள் கொடுத்த வரம் என்ன? இப்போது நடப்பது என்ன?’ என்று குமுறலுடன் என் அன்னை கேட்க, வியாசர் அந்த சதைப் பிண்டத்தை நுாறாக்கி அது ஒவ்வொன்றையும் ஒரு பானையில் போட்டு அது முழுவதும் நெய்யை நிரப்பி வைக்கச் சொன்னார். இப்படி நுாறு பானைகளில் நிரப்பிய பின் ஒரு மிகச் சிறிய சதைப்பிண்டம் மீந்தது. அதையும் ஒரு பானையில் நெய் நிரப்பிப் போட்டு வைத்தார் அன்னை. காலப்போக்கில் ஒவ்வொரு பானையிலிருந்தும் ஒவ்வொரு குழந்தை வெளியேறியது. இப்படி முதலில் வெளிவந்தவன் நான்தான். 101வது பானையிலிருந்து வெளியேறியவள் எங்கள் தங்கையான துச்சலை. பிறந்தவுடன் நான் அழுதபோது அது கழுதையின் குரலைப் போல இருந்ததாம். நான் பிறந்த போது நரிகள் ஊளையிட்டன. காக்கைகளும் கழுகுகளும் குரல் கொடுத்தன. புயல் வீசியது. ஞான திருஷ்டி கொண்ட என் சித்தப்பா விதுரர் என்னால் ஹஸ்தினாபுரத்திற்கு பெரும் தீங்கு தீரும் என்று கருதி என்னை நாடு கடத்தி விடக் கூறினார். ஆனால் இதற்கு என் தந்தை மறுத்ததால் நான் உயிர் பிழைத்தேன், அரண்மனையிலேயே வளர்ந்தேன். உண்மையில் வயதில் மூத்தவரான என் தந்தை திருதராஷ்டிரர் தான் அரியணையில் ஏறி ஆட்சி செய்திருக்க வேண்டும். ஆனால் பார்வையற்றவர் ஆள்வது கடினம் என்று கூறி அவர் தம்பி பாண்டுவுக்கு பட்டம் சூட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் என் சித்தப்பா பாண்டு அரண்மனை வாசத்தை விட்டு வனவாசம் செல்லத் தீர்மானித்தார். கூடவே தனது மனைவி குந்தி, மாத்ரியையும் அழைத்துச் சென்றார். அந்த இடைப்பட்ட காலத்தில் என் தந்தை திருதராஷ்டிரன் சக்கரவர்த்தி ஆனார். பதினைந்து வருடங்கள் வனத்தில் வாழ்ந்த போது என் சித்தப்பா பாண்டுவின் மனைவியருக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர். அவர்களைத்தான் பாண்டவர்கள் என்றனர். பின்னர் பாண்டு இறந்துவிட்டார். அவருடன் அவரது இளைய மனைவி மாத்ரியும் இறந்து விட்டார். குந்தி தேவியும், பஞ்சபாண்டவர்களும் எங்கள் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர். வராமலேயே இருந்திருக்கலாம். சித்தப்பா பாண்டு இறந்து விட்டார். அப்படி இருக்க அவரது அண்ணனின் மூத்த மகனான எனக்குத்தானே அடுத்தது அரசாட்சி வந்திருக்க வேண்டும். ஆனால் அந்த முடிவைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களை குருகுலத்திற்கு அனுப்பினார் என் பாட்டனார் பீஷ்மர். எங்கள் குருவாக துரோணர் இருந்தார். கதைஆயுதப் பயிற்சியில் நான் சிறப்பு பெற்றேன். ஆனால் வில்வித்தை உட்பட பல்வேறு பயிற்சிகளில் அர்ஜுனன் சிறந்து விளங்கித் தொலைத்தான். பாண்டவர்களை எனக்குப் பிடிக்காது. அதுவும் பீமனை அறவே பிடிக்காது. காரணம் அவன் அடிக்கடி எங்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பான். குருகுலம் முடிந்தது. குருதட்சிணையாக துரோணர் கேட்டது அவரை அவமானப்படுத்திய துருபதனை சிறைப்படுத்த வேண்டும் என்பதுதான். முதலில் துருபதன் மீது போர் தொடுத்தது நான்தான். ஆனால் தோற்றுவிட்டேன். அந்தத் தோல்வியை விட எனக்கு அதிகக் கசப்பை அளித்தது அர்ஜுனன் துருபதன்மீது போர் தொடுத்து வென்றது. ‘அர்ஜுனன் என் மிகச் சிறந்த மாணவன்’ என்று அவர் கூறியதை மெய்ப்பித்து விட்டானே! நாங்கள் அரண்மனை திரும்பினோம். எப்படியாவது பாண்டவர்களைப் பழி வாங்க வேண்டும். என்ன செய்யலாம்? மாமன் சகுனியின் ஆலோசனைப்படி அரக்கு மாளிகை ஒன்றில் அவர்களைத் தங்க வைத்தோம். அதற்குத் தீ வைத்தோம். அதில் எரிந்து போன வேறு ஆறு பேரை பாண்டவர்களும் அவர்களின் தாய் குந்தி தேவியும் என்று தவறாகப் புரிந்து கொண்டு சந்தோஷப்பட்டோம். ஆனால் பாண்டவர்கள் தப்பிச் சென்று வனத்தில் வசித்தனர். அப்போது பாஞ்சால மன்னனின் மகள் திரவுபதியின் சுயம்வரம் அறிவிக்கப்பட்டது. கர்ணனும் நானும் அதில் பங்கெடுக்கச் சென்றோம். ஆனால் அதிலும் வென்றவன் அங்கு வந்து சேர்ந்த அர்ஜுனனே. பீமன் மீது கொண்ட அதே குரோதம் இப்போது அர்ஜுனன் மீதும் திரும்பியது. அடுத்த மன்னனாக எனக்கே இளவரசுப் பட்டம் சூட்ட வேண்டும் என்று நானும் என் தந்தையும் விரும்பினோம். ஆனால் என்னைவிட வயதில் மூத்தவன் என்ற காரணத்தால் யுதிஷ்டிரனுக்குதான் பட்டம் சூட்டவேண்டும் என்று சித்தப்பா விதுரர் கருதினார். அவர் எப்போதுமே தர்ம வழியே தன் வழி என்று கருதியவர். அதனால் எனக்கு எதிராகத்தான் அவர் முடிவுகள் இருக்கும். அரண்மனையில் இது குறித்து பெரும் குழப்பம் நிலவியது. எரிச்சலான விஷயம் என்னவென்றால் மக்களும் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த நிலையில் ஹஸ்தினாபுரம் பிளவு படக்கூடாது என்று ஒரு முடிவை எடுத்தார்கள். எங்கள் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான காண்டவப்பிரஸ்தம் என்ற பகுதியைப் பாண்டவர்கள் ஆட்சி செய்யலாம், ஹஸ்தினாபுரத்தில் நாங்கள் ஆட்சியைத் தொடரலாம் என்பதுதான் அந்த முடிவு. காண்டவப்பிரஸ்தம் அப்படி ஒன்றும் வளமையான பகுதி அல்ல. அதனால் வேண்டா வெறுப்பாக இந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்தேன். வில் பயிற்சியில் அர்ஜுனனுக்கு சவாலாக விளங்கிய காரணத்தால் கர்ணன் எனக்கு மிகவும் பிடித்தமானவனான். அவனுடைய நட்பைத் தொடர்ந்து, அவனை அங்க தேசத்து அரசன் ஆக்கினேன். இறுதிவரை அவன் எனக்கு விஸ்வாசமானவனாக இருந்தான். என் வாழ்வின் பிற பகுதிகளை அடுத்த இதழில் பகிர்ந்து கொள்கிறேன்.
|
|
|
|
|