|
தசரதன் கொஞ்சம் பரபரப்பாகவே இயங்கினார். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அவர் மனதில் ஊன்றிய விதை மிகப் பெரிய விருட்சமாக வளரத் தொடங்கியிருந்தது. குலகுரு வசிஷ்டரும் தசரதனை வித்தியாசமாகப் பார்த்தார். ஏன் இத்தனை பதட்டம், பரிதவிப்பு? ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தைத் தன்னிடமும் சொல்லியிருந்தார்தான். ஆனால் அது, வெகு இயல்பாக, வெகு சந்தோஷமாக, யாருக்கும் எந்த மன அழுத்தமும் இன்றி நடைபெற வேண்டிய வைபோகமாயிற்றே! தன்னிடம் தசரதன் அந்த இனிய தருணத்தைப் பற்றிப் பேசினார் என்றாலும், நாள் பார்த்து, முகூர்த்தம் கணித்து, ஊரெல்லாம், உலகெலாம் கூட்டி நடத்த வேண்டிய இந்த மகோன்னதத்தை, அதன் மதிப்பை முற்றிலுமாகக் குறைக்கும் வகையில் உடனே நடத்த வேண்டும் என்று அவசரப்படுவதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று வசிஷ்டர் குழம்பித்தான் போனார். மந்தரையும் வெகு உன்னிப்பாக தசரதனை கவனித்து வந்தாள். வெகு நாட்களாக மாமன் உதாஜித் தன் மருமகனான பரதனைத் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல கோரியும், அத்தனை நாட்களாக அதில் அக்கறை காட்டாத தசரதன் திடீரென்று இப்போது அனுப்பி வைக்கக் காரணம் என்ன? பரதனை அயோத்தியிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைத்து, ராமனுக்கு பட்டம் சூட்டுவதுதானே நோக்கம்? கைகேயியும் தன் மகன்தான் அயோத்தி அரியணை ஏற வேண்டும் என்று கோருவாள் என்று தசரதன் கவலையுடன் எதிர்பார்க்கிறாரோ? அவளைத் தவிர்க்கும் வழியாகத்தான் பரதனை அனுப்பி வைத்தாரோ? வசிஷ்டர் தசரதனுடன் விரிவாகப் பேச முனைந்தார். ஆனால் என்னவோ தசரதன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ‘எல்லோருக்கும் விவரம் தெரிவிக்க வேண்டாமா? அதற்கான கால அவகாசம் போதாதே! நாளையே பட்டாபிஷேகம் என்பதெல்லம் நடக்கக் கூடிய செயலா? ஒரு சாதாரண குடிமகனின் வீட்டு விசேஷத்துக்கே எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கின்றன… இப்படி ராஜபதவி மேற்கொள்ளும் நிகழ்ச்சி எந்த முக்கியத்துவமும் இல்லாமலா நடைபெற வேண்டும்? எளிமையாகவே நடைபெறட்டும் என்றாலும், பிரதான விருந்தாளிகளுக்கு, பிரமுகர்களுக்குத் தகவல் தெரிவிக்ககூட நேரம் இல்லையே!‘ என்று நியாயமாக ஆதங்கப்பட்டார். ஆனால் தசரதனோ, மைத்துனன் உதாஜித்துக்கு, ஏன் ஜனகருக்குக்கூட தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியது வசிஷ்டருக்கு எதிர்பாராத அதிர்ச்சியையே அளித்தது. தசரதன் மனதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லையே! வேறு யாரோ வந்து கொத்திக் கொண்டு போய்விடுவார்களோ என்று பயப்படும் சமாசாரமா இந்தப் பட்டாபிஷேகம்? மந்தரை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிந்துகொண்டு விட்டாள். பரதனைப் புறக்கணித்துவிட்டு ராமனுக்கு ராஜ கீர்த்தி அளிக்க விரும்புகிறார் தசரதன். இதையே மிகைப்படுத்திச் சொல்லி கைகேயியை உசுப்பிவிட வேண்டியதுதான். மந்தரை நேராக கைகேயி இருப்பிடம் சென்றாள். ஒரு நாளைக்கு நாலைந்து முறை அவள் அவ்வாறு வருவது வாடிக்கை என்பதால் கைகேயி சாதாரணமாக, ‘வா, மந்தரை‘ என்று ஒப்புக்கு வரவேற்றள். ஒரு தீர்மானத்துடன் வந்திருந்த கைகேயி, ‘பரதன் எத்தனை நாள் கேகயத்தில் இருப்பான்?‘ என்று நேரடியாகக் கேட்டாள். திடுதிப்பென்று இப்படி ஒரு கேள்வியை கைகேயி எதிர்பார்க்கவில்லை. ‘எத்தனை நாள் என்ன, எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இருந்துவிட்டு வரட்டுமே! தன் மனைவியுடன்தானே போயிருக்கிறான்! கூடவே சத்ருக்னன், அவனுடைய மனைவி. அவர்கள் விருப்பம்போல மகிழ்ந்திருந்துவிட்டு வரட்டுமே!‘ என்றாள். ‘அதற்குள் இங்கே எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்திருக்கும்.‘ ‘தலைகீழாகவா, இங்கா, அயோத்தியிலா? என்ன உளறுகிறாய்?‘ ‘உங்கள் கணவர், ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்தத் தீர்மானித்திருக்கிறார், தெரியுமா உங்களுக்கு?‘ ‘என்ன!‘ அப்படியே சந்தோஷத்தில் துள்ளினாள் கைகேயி. ‘என் ராமனுக்கு பட்டாபிஷேகமா? என்ன மகிழ்ச்சியான செய்தி! மந்தரை, இந்தச் செய்தியைச் சொன்ன உன் வாய்க்கு அணிகலன் பூட்டி அழகு பார்க்க முடியாதே! ஆனால் இனிப்பை வழங்கிக் கொண்டாடலாமே! இந்தா இந்தப் பணியாரத்தை இனியதைச் சொன்ன உன் நாவுக்குக் கொடு…‘ கைகேயி இப்படி நடந்து கொள்வாள் என்பது மந்தரை எதிர்பார்த்ததுதானே! அதனால் அவள் விரக்தியுடன் சிரித்தாள். கைகேயி அவளைக் குழப்பமாகப் பார்த்தாள். ‘என்ன மந்தரை சந்தோஷப் புயலாக ஓடோடி வந்து சொல்ல வேண்டிய இந்தத் தகவலை, ஏதோ துக்க வீட்டில் விசாரிப்பது போல சொல்கிறாயே!‘ என்று கடிந்து கொள்ளவும் செய்தாள். ‘இது துக்கம்தான். சந்தோஷம் என்று தவறாகக் கற்பித்துக் கொண்டால் நான் என்ன செய்வது?‘ மந்தரையின் குரலில், கைகேயியை எப்படியாவது வளைத்துவிட வேண்டும் என்ற உறுதி. மிகப் பெரிதாக நகைத்தாள் கைகேயி. ‘உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது, என்னவெல்லாமோ பிதற்றுகிறாய்!‘ மந்தரை நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். ‘சரி, சந்தோஷமான சமாசாரமாகவே இருக்கட்டும். ஆனால், பரதன் இல்லாதபோது ராம பட்டாபிஷேகத்தை நடத்திவிட தசரதன் துடிப்பது ஏன்? பரதன் இங்கே இருந்திருக்கும்போதேவோ அல்லது அவன் வந்த பிறகோ வைத்துக் கொண்டால், பரதன் என்ன வேண்டாம் என்றா சொல்வான்?‘ ‘அதெப்படிச் சொல்வான்? ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று தெரிந்தால் முதலில் சந்தோஷப்படக் கூடியவன் பரதன்தான்.‘ ‘அப்படி என்றால் ஏன் இந்த சூழ்ச்சி?‘ ‘உளறாதே. இது சூழ்ச்சியல்ல, திடீரென்று என் கணவருக்கு இப்போதுதான் தோன்றியிருக்கும். எந்தத் தடங்கலும் வந்துவிடக் கூடாதே என்று உடனடியாக பட்டாபிஷேகத்தை நடத்திவிட அவர் நினைத்திருக்கலாம்…‘ ‘அந்தத் தடங்கல், பரதன் என்பது என் கணிப்பு…‘ ‘அது உன் கற்பனை.‘ ‘அப்படியென்றால் உங்கள் சகோதரன் உதாஜித்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? ராமனின் மாமனார் ஜனகருக்கும் அழைப்பு இல்லையாம்….! கைகேயியின் முகம் லேசாக உற்சாகமிழந்தது. மெல்லக் கேட்டாள்: ‘என்றைக்கு பட்டாபிஷேகம் என்று சொன்னார்?‘ ‘நாளைக்கே!‘ கைகேயியைத் தன் பக்கம் இழுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பதிலளித்தாள் மந்தரை. ‘அதுதான் காரணம்…‘ கைகேயி பளிச்சென்று முகம் மலர்ந்தாள். ‘நாளைக்குள் என் சகோதரனாலும் சரி, ஜனகராலும் சரி, வந்து சேர முடியாதல்லவா, அதனால்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்!‘ இப்படிச் சொல்லிவிட்டு உடனே பரபரப்பானாள் கைகேயி. ‘நாளைக்கு என்றால், அதற்குள் பார்க்க வேண்டிய வேலைகள் ஏராளமாக இருக்குமே! என் பங்குக்கு நான் என்னென்ன பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று தெரியவில்லையே!‘ என்று தவிக்க ஆரம்பித்தாள். ‘எதிர்காலத்தை யோசிக்காமல் உணர்ச்சி வசப்படாதீர்கள் தேவி,‘ மந்தரை அவளைக் கட்டுப்படுத்த முயன்றாள். ‘பிறப்பிலிருந்தே ராஜ பாரம்பரியம் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் மூதாதையரெல்லாம் எப்படி ராஜாங்கம் புரிந்தார்களோ அப்படி உங்கள் மகன் ராஜ பரிபாலனம் மேற்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா?‘ ‘இது என்ன நியாயமற்ற பேச்சு?‘ கைகேயி அவளை அடக்கினாள். ‘எங்காவது மூத்தவன் இருக்க, இளையவன் தந்தையின் அரியணையை அலங்கரித்ததாக சரித்திரம் இருக்கிறதா? ராமன்தான் மூத்தவன். அவனுக்குதான் அந்த உரிமையும், தகுதியும் இருக்கின்றன. இதில் முரண் என்ன இருக்கிறது?‘ ‘புரியாமல் பேசுகிறீர்கள். நீங்கள் மூவரில் ஒருவர் அல்ல, பிற இருவரையும்விட எல்லா வகைகளிலும் உயர்ந்தவர். தசரதருக்கு உங்கள் மீது தனி மதிப்பு உண்டு….‘ கலகலவென்று சிரித்தாள் கைகேயி. ‘எங்கள் திருமணத்தின்போது என் தந்தை, எனக்கு முதலில் மகன் பிறந்தால் அவன்தான் என் கணவருக்குப் பிறகு ராஜ்யத்தை ஆளவேண்டும்,‘ என்ற நிபந்தனையை விதித்திருந்தது உண்மைதான். ஆனால் அப்படி ஆகவில்லையே! முதலில் கோசலைதானே ராமனைப் பெற்றாள்? இன் மகன் இரண்டாமவன் தானே?‘ ‘இந்த தயாள கருத்து இப்போதைக்குப் பேசவோ, கேட்கவோ இனிமையாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தையும் சிந்திக்க வேண்டும். எல்லோரும் நல்லவராகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், ராமன் ராஜாவானால் கோசலைக்குதானே பிரதான அந்தஸ்து, தனிப்பட்ட அதிகாரம், முதல் மரியாதை எல்லாம்? நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள், புறக்கணிக்கப் படுவீர்கள், தனிமைப் படுத்தப் படுவீர்கள், ஒரு கட்டத்தில், வாழ்ந்தும் வாழாதவராகவே ஆகிப்போவீர்கள், ஒரு ராஜமாதா, அடிமையாக வாழ வேண்டிய காலம் வரும்…‘ மந்தரையை உற்றுப் பார்த்தாள் கைகேயி. அவளுடைய கண்களிலிருந்து அவள் மனதைப் படிக்க மந்தரையால் இயலவில்லை. (தொடரும்)
|
|
|
|