|
காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்னும் வியாபாரி இருந்தார். அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையைச் சந்தித்தார். அவளது அழகு, ஆடல், பாடலில் மயங்கி காதல் கொண்டார். அதன் பிறகு அவள் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். அந்த நடிகையோ சாதுவனை விட அவரது பணத்தின் மீது ஆசை வைத்திருந்தாள். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் தரும்படி கேட்டாள். சாதுவனும் கொடுத்தார். பொருள் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு விலகினாள். தன் மனைவிக்கு செய்த துரோகத்தால் தான் தனக்கு இக்கதி நேர்ந்தது என எண்ணிய சாதுவன் வீட்டிற்குச் செல்லவில்லை. மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது வங்க தேசத்திலிருந்து வியாபாரிகள் சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களிடம் தனக்குத் தெரிந்த வியாபார நுட்பங்களை சாதுவன் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு பிடித்துப் போனது. தங்களுடனேயே கப்பலில் அழைத்துச் சென்றனர். கடலில் புயல் வீசவே கப்பல் கவிழும் நிலை ஏற்பட்டது. உடைந்த பலகை ஒன்றின் மீது சாதுவன் ஏறிக் கொண்டார். கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நலமுடன் இருக்க வேண்டுவது ஆதிரையின் வழக்கம். அதன் பயனாக சாதுவன் பாதுகாப்பாக கரை ஒதுங்கினான். ஆனால் சாதுவன் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவன் சாதுவன் இறந்ததாக ன முடிவு செய்த அவள் அழுதாள். “கடவுளே! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும்” என வேண்டியபடி தீயில் குதித்தாள். கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அப்போது அசரீரி “ஆதிரையே! உன் கணவர் மீண்டும் வருவார்” என ஒலித்தது. இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனைக் காவலர்கள் அந்நாட்டு மன்னரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னார். அப்போது மன்னர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள்ளை சாதுவன் ஏற்கவில்லை. “நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் மது, மாமிசத்தை படைக்கப்பட்டுள்ளது. ஏன் சாப்பிட மறுக்கிறாய்?” எனக் கேட்டார் மன்னர். ஒழுக்கமின்றி வாழ்ந்த தான் அடைந்த இழிநிலையை வருத்தமுடன் தெரிவித்தான். இதைக்கேட்ட மன்னரும் மனம் திருந்தியதோடு பரிசளித்து கவுரவித்தார். சாதுவன் சொந்த ஊரான காவிரிப்பூம்பட்டினத்திற்கு கப்பலில் புறப்பட்டார். ஊர் திரும்பிய சாதுவன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு ஒன்று சேர்ந்தார். கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை என்னும் பெயரில் நட்சத்திரமாக வானில் ஒளிர்கிறாள்.
|
|
|
|