|
கிராமம் ஒன்றில் மூன்று சாலைகள் கூடும் ஓர் இடத்தில் அடர்ந்த மரம் ஒன்று இருந்தது. அங்கு அனாதைச் சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்தான். அந்த வேப்ப மரமே அவனது இருப்பிடமாகி விட்டது. நாளடைவில் அவன், “ஐயா, பிச்சை போடுங்கள்!” என்று கூட சொல்லத் தேவையில்லாமல் போய் விட்டது. சாலையில் வருவோரும், போவோரும் தாங்களாகவே சில்லறை கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியே ஆண்டுகள் கடந்தன. வாலிபனாக வளர்ந்த அவன் வாழ்வின் இறுதிக்காலத்தை கழித்தான். 60 ஆண்டுகளாக வேப்ப மரத்தடியில் வாழ்ந்த பிச்சைக்காரன் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்தான். அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்துப் பழகிய ஊர் மக்களுக்கு பரிவு ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவன் சடலத்தை அடக்கம் செய்ய முடிவெடுத்தனர். புதைப்பதற்காக அவன் நிற்கும் வேப்ப மரத்தடியில் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர். கடப்பாறையால் சில அடி தோண்டியதும், ‘டங், டங்!’ என சத்தம் கேட்டது. தோண்டுவதை விட்டு விட்டு மண்ணைக் கிளறிய போது செப்புக்குடம் ஒன்று தெரிந்தது. அதில் பொற்காசுகள் நிரம்பியிருந்தன. அதைக் கண்ட ஊர் மக்கள், “இந்தப் பிச்சைக்காரன் காலடியிலேயே பெரிய புதையல் இருந்திருக்கிறதே... இந்த உண்மை புரியாமல் இத்தனை காலமும் வாழ்ந்திருக்கிறானே! ஒருவேளை தெரிந்திருந்தால் வருகிறவர்கள், போகிறவர்களிடம் கையேந்தி பிச்சை எடுத்திருக்க மாட்டான்’’ என வருத்தப்பட்டனர். அப்போது அங்கு வந்த துறவி ஒருவர், “தன் காலடியில் புதையல் இருப்பது தெரியாமல் பிச்சை எடுத்தே வாழ்க்கையை கழித்து விட்டான். இவனது நிலையில்தான் உலகில் மனிதர்கள் இருக்கிறார்கள். புதையல் போல கடவுள் நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கிறார். அதை அறியாமல் வெளியுலகில் தேடி அலைகிறோம். “நமக்குள் ஏராளமான ஆற்றல், திறமை, நற்குணம், மகிழ்ச்சி, மனத்திருப்தி எல்லாம் புதைந்திருக்கின்றன. இதை உணர மறுத்து விட்டு வெளியுலகில் தேடுகிறோம். அதனால் நிம்மதியின்றி தவிக்கிறோம். “நம் ஹிந்து மதத்திலேயே உயர்ந்த தத்துவம், ஆன்மிகச் சிந்தனை எல்லாம் இருக்கின்றன. ஆனால் அதை பின்பற்றாமல் அந்நிய நாட்டுப் பழக்க வழக்கங்கள், மதம், கொள்கை, தத்துவங்களின் பின் ஓடிக் கொண்டிருக்கிறோம்” என வருத்தப்பட்டார்.
|
|
|
|