‘‘ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்’’
-என்பது முன்னோர் பழமொழி.
‘‘கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்தேன்
முற்பருவத்தில் செய்தவினை’’ -இதுவும் அவர்கள் சொன்னதே.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை. மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்து பயங்கரமான சரிவு காத்திருக்கிறது. என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால், என் எழுத்து வண்டி இருபத்தைத்தாண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் ‘‘சகடயோகம்’’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ, எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே! ‘அடுத்த பாதை என்ன, பயணம் என்ன’ என்பது உனக்குத் தெரியாது; ‘‘எல்லாம் தெய்வத்தின் செயல்’’ என்றார்கள் நம் முன்னோர்கள்.
‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன. தெய்வ புருஷன் ராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே! அதனால் வந்த வினை தானே, சீதை சிறையெடுக்கப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்! சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக் கூடாது என்ற புத்தி உதயமாகவில்லையே! அதன் விளைவு தானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்! முக்காலமும் உணர்ந்த கௌதமனுக்கே, பொய்க் கோழி எது, உண்மைக் கோழி எது என்று தெரியவில்லையே! அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு இந்தக் கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காகக் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள். இந்தக் கதைகளை ‘‘முட்டாள்தனமானவை’’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு. ஆனால் முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள் அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை. நான் சொல்ல வருவது, ‘இந்து மதத்தின் சாரமே உனது லெளகிக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது’ என்பது தான்.. துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப் போகிறது? அந்த சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்து விடும். தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல. கஷ்டத்திலும் நேர்மையாக இரு.
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய். தெய்வநம்பிக்கை உன்னைக் கைவிடாது.
கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நுாலில் இருந்து ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்.