|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பரசுராமனாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
தன் தந்தை சாந்தனுவின் மகிழ்ச்சிக்காக தான் வருங்காலத்தில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சபதம் செய்தவன் பீஷ்மன். எனினும் காசிராஜன் தனது மூன்று மகள்களுக்கு சுயம்வரம் நடத்தப் போவதாக அறிவித்ததும் அங்கு சென்றான். தனக்காக அல்ல, தன் சகோதரன் விசித்திரவீரியனுக்கு அந்த மூவரையும் மணமுடிக்க.மற்ற மன்னர்களை எல்லாம் தோற்கடித்து அந்த மூன்று இளவரசிகளையும் தேரில் தன் நாட்டுக்குக் கடத்தி வந்தான். அந்த மூவரில் ஒருத்தியான அம்பை தானும் சால்வ மன்னனும் ஒருவரையொருவர் விரும்புவதாகக் கூறினாள். எனவே பீஷ்மன் அவளை விடுவித்தான். ஆனால் சால்வ மன்னன் அவளைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். ‘என்னைப் போரில் தோற்கடித்து அத்தனை பேர் நடுவில் உன்னை பீஷ்மன் கவர்ந்து சென்றான். எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது’ என்றான். மீண்டும் பீஷ்மனிடம் வந்த அம்பை தான் விசித்திரவீரியனைத் திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக் கொண்டாள். ஆனால் இன்னொருவனை மனதில் வரித்த ஒருத்தியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று விசித்திரவீரியன் கூற, அவனுக்கு மீதி இரு இளவரசிகளை மட்டும் திருமணம் செய்து வைத்தான் பீஷ்மன். பீஷ்மனிடம் ‘நீங்களே என்னை மணந்து கொள்ளுங்கள்’ என்று கோரினாள் அம்பை. ஆனால் தான் எடுத்துக் கொண்ட பிரம்மச்சரிய சபதத்தைக் கூறி அதற்கு உடன்பட மறுத்தான் பீஷ்மன். சோகத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளான அம்பை தன் நிலைமைக்குக் காரணம் பீஷ்மன்தான் என்று கருதி அவனைப் பழிவாங்கத் தீர்மானித்தாள். என் உதவியை நாடினாள். நான் இனி ஆயுதங்களை எடுக்க மாட்டேன் என்று உறுதி பூண்டிருந்தேன். ஆனாலும் என்னை நாடி வந்த பெண்ணை ஏமாற்ற எனக்கு மனமில்லை. பீஷ்மனை அழைத்து அவளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். அவன் மறுத்தான். பீஷ்மனும் நானும் போரிட்டோம். போர்க்கலையில் மிகத் தேர்ச்சி பெற்றவன் பீஷ்மன். அவன் என்னிடமும் போர்ப்பயிற்சி பெற்றதுண்டு. இருபத்தி மூன்று நாட்கள் போரிட்டும் என்னை வெல்ல முடியாது அவன் களைப்படைந்து விட்டான். அடுத்தநாள் தேவர்களை அணுகி பாசுபதாஸ்திரம் தொடர்பான ஆற்றலைப் பெற்றான். ஆனால் அதை அவன் எனக்கு எதிராக பயன்படுத்த முயற்சித்த போது நாரதரும் பிற முனிவர்களும் அங்கு வந்து அவனைத் தடுத்தார்கள். பிறகு அவர்கள் என்னிடமும் வந்து நாங்கள் இருவரும் போரிட்டு வந்தால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதைக் கூறி போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நான் ஒத்துக் கொண்டதும் அம்பை என் மீதும் கடும் கோபம் கொண்டாள். பிறகு சிவனை நோக்கி தவம் இருப்பதற்காக சென்றாள். நாளடைவில் சிவனருளால் அவள் அடுத்த பிறவியில் சிகண்டி ஆக மாறி பின்னர் பாரதப் போரில் பீஷ்மனை கொன்றாள். இதற்கு முன் தர்மவழியிலிருந்து தவறி ஆட்சி செய்த மன்னர்களை 21 முறை போர் நடத்திக் கொன்றேன். யாகம் செய்து கொண்டிருக்கும் அரசர்கள், புதிதாகத் திருமணமான அரசர்கள், எந்த நிபந்தனையுமின்றி என்னிடம் சரணடைந்த மன்னர்கள் ஆகியோரை நான் கொன்றதில்லை. ஜனகர், இஷ்வாகு போன்ற நியாயவழியில் நடந்த மன்னர்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. கர்ணன் ஒருமுறை அந்தண வடிவில் என்னிடம் வந்தான். என்னிடம் ஆயுதப் பயிற்சி கற்க விரும்புவதாகக் கூறினான். பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் விற்பயிற்சி கொடுத்து வந்த துரோணர் கர்ணனுக்கு அதைப் பயிற்றுவிக்க மறுத்து விட்டார். இந்தப் பின்னணியை அப்போது அறிந்திராத நான் கர்ணன் தன்னை ஒரு பிராம்மணன் என்று கூறியதை நம்பி அவனுக்கு விற்பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன். மிகச் சிறந்த மாணவனாக அவன் ஆர்வமுடன் கற்றுக் கொண்டான். ஒருநாள் களைப்பு மேலிட கர்ணன் தொடையில் தலையை வைத்துத் துாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையைத் துளைத்துக் கொண்டே இருந்தது. இதனால் பெருகிய ரத்தம் என் தலைமுடியை நனைக்க நான் கண் விழித்தேன். என் உறக்கம் கலையக் கூடாது என்பதற்காக தன் தொடையில் உண்டான கடும் வலியைப் பொறுத்துக் கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்த கர்ணன் மீது எனக்கு ஒரு கணம் கருணை பொங்கியது. ஆனால் அடுத்த நொடியே அந்தப் பெரும் சந்தேகம் எழுந்தது. ஒரு பிராமணனால் இவ்வளவு வலியைத் தாங்கிக் கொண்டு அசையாதிருக்க முடியாதே! உண்மையில் நீ யார் என்று கர்ணனிடம் கடுமையாக சில கேள்விகள் கேட்க, தான் தேரோட்டியின் மகன் என்று கூறினான். அவன் குலத்தை விட அவன் என்னிடம் பொய் கூறிப் பயிற்சிகளைப் பெற்றான் என்பது என்னை மிகவும் கோபப்பட வைத்தது. போரின் போது நான் அவனுக்கு அளித்த ஆயுதங்கள் பயனற்றுப் போகும் என்று சாபம் அளித்தேன். இதன் காரணமாக மகாபாரதப் போரில் அர்ஜுனனோடு போரிட்ட போது நான் கர்ணனுக்கு அளித்த பயிற்சி அனைத்தும் அவனுக்கு பயன்படாமல் போனது. இந்த இடத்தில் என் அவதாரம் குறித்து சிலருக்கு எழுந்திருக்கக் கூடிய சில ஐயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் ராமாவதாரமும் ஒரே காலகட்டத்தில் வாழ்வதும் சந்திப்பதும் சிலருக்கு வியப்பளிக்கக்கூடிய ஒன்று. அவதாரம் என்பதற்கு பதிலாக திருமாலின் அம்சங்கள் என்று எங்களை எண்ணிப் பார்த்தால் இந்த வியப்பு விலகும். கலியுகத்தில் வெங்கடேசர் திருமலையில் தங்குவதற்கு ஆதிவராக மூர்த்தியிடம் அனுமதி வேண்டியதை எண்ணிப் பாருங்கள். அவர்கள் இருவரும் கூட திருமாலின் அம்சங்கள் அல்லவா? சிலர் ராமனுடன் நான் போர் புரிந்ததாக எண்ணுவதுண்டு. எங்களுக்கிடையே நடந்தது போர் அல்ல. சீதையை மணம் முடிக்க ராமன் வில்லை முறித்ததாக அறிந்ததும் கோபம் கொண்டேன். அதெப்படி புனிதமான சிவ தனுஸை (சிவன் அளித்த வில்) ராமன் முறிக்கலாம் என்று. பின்னர் அவன் கையில் அந்த வில்லை எடுத்து நாணேற்றியதும் அந்த வில் தானாக முறிந்தது என்பதை அறிந்ததும் அவனும் திருமாலின் அம்சம் என்பதை உணர்ந்து கொண்டேன். இறுதியில் என்னிடம் உள்ள விஷ்ணு தனுஸை அவனுக்கு அளித்தேன். ராவணனுடனான யுத்தத்தில் ராமனுக்கு இது பயன்பட்டது.
|
|
|
|
|