|
ராமனை ஏறிட்டுப் பார்த்துப் பேச கைகேயிக்கு தயக்கமாக ஏன், வெட்கமாகக்கூட இருந்தது. ஆனாலும் இப்போதைக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லத்தான் வேண்டும். அதுதான் ராமனுக்கும் நல்லது, அயோத்திக்கும் நல்லது என்று தீர்மானித்துக் கொண்டாள். ஆனால் அவனுடைய முகம்தான் எத்தனை அழகாக, புத்தம் புது தாமரைபோல மலர்ந்திருக்கிறது! அது வாடும்படியாகத் தன் திட்டத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறதே என வேதனையுற்றாள். ஆமாம். அவன் முகத்திற்கு ஒரே நிலைதான் - மலர்ந்திருப்பது. அதற்கு கூம்பவும் தெரியாது. அதனால் வாடவும் முடியாது. ஏனென்றால் அவன் வெறும் மகன் அல்ல, மகான்! ‘‘தாங்கள் என்னை வரச் சொன்னீர்கள் அம்மா. அதோ... தந்தையார் வழக்கத்திற்கு மாறாக சோர்வுடன் படுத்திருக்கிறாரே, ஏனம்மா? அவரிடம் நான் ஏதாவது தவறுதலாக நடந்து கொண்டு விட்டேனா? என்ன காரணத்துக்காகவோ இப்படி மயங்கிக் கிடக்கும் அவரைத் தேற்றுவதற்காகத்தான் என்னை வரச் சொன்னீர்களா அம்மா?’’ என பணிவுடன் கேட்டான் ராமன். கைகேயி தசரதனை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அவர் அதே மயக்க நிலையில் அரைகுறை நினைவோடு சாய்ந்திருந்தார். பிறகு ராமனைப் பார்த்தாள். ‘‘உன் தந்தையார் எனக்கு இரு வரங்களை அளித்திருந்தார். இப்போது அவற்றை நிறைவேற்றித் தரும்படி அவரிடம் கேட்டேன். ஆனால் அந்த வரங்கள் என்ன என்பதை அறிந்தபின் அவர் என் விருப்பத்தை ஈடேற்றித் தருவதாக மனம் ஒப்பினாலும், அவை உன் சம்பந்தப்பட்டவை என்பதால் எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்’’ ‘‘அதனால் என்ன அம்மா? தாங்களே சொல்லலாம். அவர் சொன்னால் என்ன, தாங்கள் சொன்னால் என்ன, நீங்கள் இருவரும் என் இரு கண்களைப் போன்றவர்கள் அல்லவா? சொல்லுங்கள்’’ ‘‘ராமா... நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம் என்பதை உன் தந்தையார் தெரிவித்திருப்பார். ஆனால் பட்டாபிஷேகம் நடக்கப்போவது உனக்கல்ல, உன் இளைய சகோதரன் பரதனுக்கு…’ இவ்வாறு சொல்லிவிட்டு கைகேயி ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். ‘‘அட... இதற்கா இத்தனை தயக்கம்?‘‘ பளிச்சென்று கேட்டான் ராமன். அந்த கண நேரத்தில் அவன் மனசுக்குள் எப்படி இத்தனை வேகமாக விவேகம் புகுந்து விடுகிறது! காதில் கேட்டது மனசுக்குள் போவதற்குள், அது எதிர்மறையாக எண்ணத் துவங்குவதற்குள் அதை அப்படியே கடிவாளம் போட்டு நிறுத்தும் பேராற்றல் இவனுக்கு எப்படிக் கைவந்தது! ‘‘இதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்கப் போகிறது அம்மா? எனக்கு பட்டாபிஷேகம் என்று தந்தையார் அறிவித்து விட்டதால் அதுதான் நிரந்தரம் என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியுமா? இப்போது அவர் மனம் மாறி பரதனுக்கு என்று அறிவிக்கிறார் என்றால், அதுவும் இந்த சக்கரவர்த்தியின் ஆணைதானே! இவ்வாறு மாற்று அறிவிப்பு சொல்வது அரசாங்க நடைமுறையில் எப்போதாவது ஏற்படுவதுதானே! எனக்கு பதிலாக பரதன் என்ற இவரது மாற்று எண்ணத்திற்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு முக்கிய காரணம் இருக்கும். ஆகவே நீங்கள் கவலைப்படாமல் இரண்டாவது வரம் என்னவென்று சொல்லுங்கள், அதை தந்தையின் சார்பாக நான் நிறைவேற்றித் தருகிறேன்…’’ தான் கைகேயியிடம் பேசிக் கொண்டிருந்தபோது இடையிடையே சற்றே பெருங்குரலெடுத்து தசரதன் புலம்புவதையும் ராமன் கவனித்தான். அவனுடைய மனம், தந்தை பாசத்தில் ஈடுபட்டுவிடக் கூடாதே என்று அவசரப்பட்டாள் கைகேயி. ‘‘அந்த இரண்டாவது வரம், அயோத்தியை விட்டு நீ ஆரண்யம் ஏக வேண்டும் என்பதுதான்’’ பளிச்சென்று சொன்ன கைகேயியைப் புன்முறுவலுடன் ஏறிட்டான் ராமன். அவனுடைய திடமான மனநிலையைக் கண்டு வியந்தாள் கைகேயி. இவனால் எந்தப் பின் நிகழ்வையும் முன்கூட்டியே ஊகிக்க முடியுமா? அதற்கேற்பத் தன்னை சலனப்படாதவனாக, உணர்ச்சி வசப்படாதவனாக நிலைநிறுத்திக் கொள்ள எங்கே பயிற்சி பெற்றான் இவன்? இது அசாதாரணமான இயல்பாக இருக்கிறதே! ‘‘அதற்கென்ன அம்மா? நான் அயோத்தியில் இருந்தாலும், ஆரண்யத்தில் இருந்தாலும் தங்களுடைய ஆசிர்வாதம்தான் எனக்கு பக்க பலமாக இருந்து காக்கிறதே, பிறகு எதற்காக கவலைப்பட வேண்டும்? நிச்சயம் செல்கிறேன். என் தம்பி பரதனின் பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் கண்குளிரக் கண்டுவிட்டே செல்கிறேன்…’’ உடனே பதைபதைத்து கைகேயி அவனைத் தடுத்தாள். ‘‘இல்லை ராமா, நீ இப்போதே கானகம் புறப்பட வேண்டும். பரதனின் பட்டாபிஷேகம் தானாக நடந்தேறும். அந்த நிகழ்ச்சிக்கு நீ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புறப்படு உடனே…’’ இவ்வாறு சொன்ன அவள் தான் சொன்னதற்காக காடு நோக்கிச் செல்லும் ராமன், உடனே வீடு நோக்கித் திரும்பி விடக் கூடாதே என பதற்றம் கொண்டாள். அதனால் ‘‘ராமா, நீ ஆரண்யத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி முனிவர்களை தரிசித்து அவர்களுடைய உபதேசங்களைப் பெற்று பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் வரவேண்டும்.’’ என்றாள். ராமன் கண்களை மூடி ஓரிரு கணம் தியானத்தில் ஆழ்ந்தான். பிறகு, ‘‘எனக்குதான் எத்தகைய பாக்கியத்தை அருளியிருக்கிறீர்கள் அம்மா. இந்த அரண்மனை வாழ்வில் என்னால் தவசீலர்களை தரிசிக்க இயலாது என்பதால், யாருடைய பார்வைக்கும் படாமல், உலக நன்மைக்காக யாகமும், தவமும் இயற்றும் பெரியோர்களை தரிசிக்கும் பெரும் பேற்றினை வழங்கியிருக்கிறீர்கள். இதற்கு நான் எப்படி கைம்மாறு செய்யப் போகிறேன்.’’ என கைகேயியிடம் மனமுருகிக் கேட்டான். அதைக் கேட்டு மனதிற்குள் ஆழிப் பேரலையாக வேதனை சுழன்றடிக்க அப்படியே உருகிப் போனாள் கைகேயி. ஆனாலும் தன் வீம்புப் போக்கைப் பார்வையாலேயே வெளிப்படுத்தினாள். அதே சமயம் சற்று தள்ளிக் கிடந்த தசரதன் தன் வலது கையை உயர்த்தி ஏதோ சொல்ல முயன்றார். அச்செயலால் அவர் தன்னை வனம் செல்ல ஆசியளித்து வழியனுப்புகிறார் என எடுத்துக் கொண்டான் ராமன். தந்தையாருக்கு ஏதோ உடல் உபாதை. இவ்வளவு மோசமான உடல்நிலையில் அவன் அவரை எப்போதும் பார்த்ததில்லை. ஆனாலும் கைகேயி அரச மருத்துவரை வரச் சொல்லி ஆள் அனுப்பியிருப்பாள் என்றும் நினைத்துக் கொண்டான். ஆனால் தசரதனின் மனம் கொந்தளிப்பதையோ, ‘வேண்டாம் ராமா, போகாதே. என்னை விட்டு நீங்காதே. என் உயிரையும் பறித்துச் செல்லாதே’ என்று சொல்ல இயலாமல் மனதால் கதறுவதை அவன் உணரவில்லை. கைகேயியின் உத்தரவுப்படி இப்போது உடனடியாக அயோத்தியை விட்டு நீங்க வேண்டும். ஆனால் அதற்கு முன் சில சம்பிரதாயங்களை அவன் அனுசரிக்க வேண்டும். ‘‘தங்கள் சித்தப்படியே இப்போதே புறப்படுகிறேன், அம்மா’’ என்று கைகேயியிடம் சொன்ன ராமன், பாசம் மிகுந்த தன் கருணைக் கண்களால் தந்தையாரை நோக்கினான். அந்தப் பார்வையிலேயே தன் மனமும், உடலும் ஓரளவு தெளிவடைந்து விட்டதை தசரதன் உணர்ந்தார். காருண்யக் கடலோ ராமனின் அந்தக் காந்தக் கண்கள்! இரு கரம் கூப்பி விடை பெற்றுக் கொள்ளும் பாவனையாக அவரை வணங்கினான் ராமன். பிறகு கைகேயியிடம் திரும்பி, ‘‘என் தாயார், மற்றுமொரு தாயார் சுமத்திரை, மனைவி சீதை, இளவல் லட்சுமணன் உள்ளிட்ட அனைவரிடமும் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன். இந்த சம்பிரதாயத்தில் அதிக நேரம் செலவிட மாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன் அம்மா’’ என்று விண்ணப்பித்துக் கொண்டான். தலையசைத்தாள் கைகேயி. எத்தகையதொரு மாபெரும் நிகழ்வுக்குத் தான் அடித்தளம் இட்டிருக்கிறோம் என்பதை அவள் அப்போதைக்கு உணராவிட்டாலும், தான் அவ்வாறு ராமனை கானகத்திற்கு அனுப்புவதன் உண்மையான காரணத்தை மனதிற்குள் புதைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளானாள். வந்த போது இருந்த அதே கம்பீரத்துடன் ராமன் புறப்பட்டுச் செல்வதைப் பார்த்து கைகேயி மனதிற்குள் அழுதாள். ராமன் தன் தாய் கோசலையின் மாளிகைக்குச் சென்றான். தந்தை கட்டளையிட்டார் என்றாலும் தாயார் அறியாமல் அந்தக் கட்டளையை அவன் நிறைவேற்றக் கூடாது அல்லவா?
|
|
|
|