|
பெத்தான் சாம்பான் என்பவன் சிறுவயதில் இருந்தே நடராஜர் மீது பக்தி கொண்டிருந்தான். கல்வியறிவு இல்லாத அவன் உமாபதி சிவாச்சாரியாரின் பக்தி பற்றிக் கேள்விப்பட்டான். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் தொண்டு செய்ய விரும்பினான். உமாபதி சிவாச்சாரியாரின் மடத்திற்குச் சென்று அன்றாடம் தேவைப்படும் விறகுக்கட்டு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மழை காலம் ஆரம்பித்தது. பெத்தான் சாம்பனால் காட்டிற்குச் சென்று விறகு வெட்ட முடியவில்லை. உமாபதி சிவாச்சாரியாருக்கு சேவை செய்ய முடியவில்லையே என வருந்தினான். “அப்பனே! நடராஜா! அடியாருக்கு சேவை செய்யாத பாவியாகி விட்டேனே...” எனக் கதறினான். நடராஜப் பெருமானே நேரில் தோன்றி ஆறுதல் சொன்னதோடு, ‘அடியாருக்கு எளியன்’ எனத் தொடங்கும் பாடல் எழுதிய ஓலைச்சுவடியை கொடுத்தார். “இப்போதே இந்த ஓலைச்சுவடியை சிவாச்சாரியாரிடம் சேர்த்திடு” என்று சொல்லி மறைந்தார். அதன்படியே சிவாச்சாரியார் அவனுக்கு தீட்சையளித்து முக்தியடையச் செய்தார். இதையறிந்த ஊரார் சிவாச்சசாரியார் மீது சந்தேகம் கொண்டனர். அவர்களின் கண்ணெதிரே மடத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த நீரில் முளைத்திருந்த முள்ளிச் செடிக்கு தீட்சை அளித்து முக்தி அடையச் செய்தார். இதைக் கண்ட அனைவரும் உமாபதி சிவாச்சாரியாரின் பக்தி கண்டு வியந்தனர்.
|
|
|
|