|
சுக்ரீவனுடன் இருந்த ராமர், சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். தென்திசையில் இருந்து அனுமன் விண்ணில் பறந்து வருவதைக் கண்ட சுக்ரீவன், ‘ஆ... ஹனுமான்’ என்று துள்ளிக் குதித்தான். ராமனும் அனுமனை உற்று கவனித்தார். ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லி ராமனையும், சுக்ரீவனையும் வணங்கினார் அனுமன். இதைக் கேட்ட ராமருக்கு மனதில் உற்சாகம் பிறந்தது. “ பிரபோ...கற்புக்கரசியான சீதையை என் கண்களால் கண்டேன். அரக்கியர் சூழ அசோக வனத்தில் சோகமே உருவாக அவர் காட்சியளித்தார். தாங்கள் ராவணனுடன் போரிட்டு மீட்க வராவிட்டால் உயிரை விடுவேன் என சபதம் செய்துள்ளார். எனவே நாம் தாமதிக்காமல் இலங்கை சென்று தாயை மீட்க வேண்டும்” என்று சொல்லி சீதை கொடுத்து அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தார். அதைக் கண்டதும் சீதையை நேரில் கண்டது போல ராமர் மகிழ்ந்தார். அதைக் கையில் வாங்கிய போது திருமண நாளில் சீதையின் பூந்தளிர் போன்ற கையைத் தொட்ட ஞாபகம் அவருக்கு வந்தது. நல்ல செய்தி சொன்னதோடு அதை உறுதிப்படுத்தும் வகையில் சூடாமணியும் அளித்த அனுமனை அணைத்து மகிழ்ந்தார் ராமர்.
|
|
|
|