|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கண்மலர் காணிக்கை |
|
பக்தி கதைகள்
|
|
ஒரு சமயம் திருமாலிடம், ‘‘சுவாமி... பக்தனுக்குரிய தகுதி என்ன? எனக் கேட்டாள் மகாலட்சுமி. ‘‘தேவி! கடவுளுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். நானும் இதை செய்து காட்டியுள்ளேன்’’ என்றார். அப்படியா... என மகாலட்சுமி கேட்டாள். ‘‘தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தவவலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திர ராஜன். தாய் கங்காதேவி. இதனால் ஆணவத்துடன் அலைந்தான். விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியைக் கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். ஒருமுறை அவரது கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான். பிரம்மா தப்பிப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து என்னைக் குறி வைத்தான். அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம் அவனைக் கொல்ல என்னாலும் முடியவில்லை. அந்தளவுக்கு அவன் வலிமையுடன் இருந்தான். அவனுக்கு வரம் அளித்த சிவனால் தான் கொல்ல முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்ப அசுரனும் ஒருநாள் கைலாயம் சென்றான். ஒரு முதியவரின் வேடத்தில் சிவன் நின்றிருந்தார். அவரிடம் சலந்தரன், ‘‘சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் போரிட்டு கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன்’’ என்றான். ‘‘சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் விரும்புகிறேன்’’ என்றார் முதியவர். ‘‘தாராளமாக’’ என்றான். கால் விரலால் தரையில் ஒரு வட்டம் போட்டார் முதியவர். ‘‘இந்த வட்டத்தை துாக்கு பார்க்கலாம்’’ என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்று சொல்லி வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியை அகழ்ந்தெடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்’’ என்று முடித்தார் திருமால். ‘‘சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது?’’ எனக் கேட்டாள் மகாலட்சுமி. ‘‘இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும்’’ என்றார் பெருமையாக. ‘‘ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?’’ எனக் கேட்டாள் மகாலட்சுமி. ‘‘இந்த சக்கரம் என்னிடம் இருந்தால் எதிர்காலத்தில் அசுரர்களைக் கொல்வதற்கு பயன்படும் எனக் கருதி சிவனிடம் கேட்டேன். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த வனத்தில் சிவலிங்க வடிவில் தான் இருப்பதாகவும் அங்கு பூஜை செய்தால் சக்கரம் கிடைக்குமென்றும் கூறினார். நானும் அங்கு தங்கி தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தேன். ஒருநாள் ஒரு பூ குறையவே என் கண்ணையே மலராகக் கருதி பூஜையில் வைத்தேன். மகிழ்ந்த சிவன் அந்த சக்கரத்தைப் பரிசளித்தார்’’ என்றார். இப்படி திருமால் கண்மலர் காணிக்கை அளித்த இடமே வேலுார் மாவட்டம் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயிலாக உள்ளது.
|
|
|
|
|