|
ஒருநாள் நான் முடிவு செய்தேன் வாழ்வை துறந்து விடுவது என்று… ஆம், எனது வேலை, உறவுகள் அனைத்தையும் கைவிட்டு துறவியாக வாழ வேண்டும் என காட்டிற்குச் சென்றேன். கடைசியாக கடவுளிடம் சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்” கடவுளின் பதில் வியப்பில் ஆழ்த்தியது. “ஒருமுறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் வளர்ந்துள்ளன. அதில் மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா” “ஆமாம்” என பதிலளித்தேன். “புதர் செடி, மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து பொறுப்புடன் கவனித்து வந்தேன். தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன். புதரின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் மூங்கில் விதையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதை நான் கைவிடவில்லை” என்றார் கடவுள். “மூன்றாம், நான்காம் ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் வெளியில் வந்தது. புதர்செடியை விட சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில் உயர்ந்து வளர்ந்தது. பார்க்க கம்பீரமாக இருந்தது” என்றார். “இத்தனை ஆண்டுகளாக மூங்கில் விதை செத்துவிடவில்லை. வாழத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது. எனது படைப்புகளுக்கு சவால்களை சந்திக்கும் சக்தியை கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்னைகளை நான் கொடுப்பதில்லை” என்றார். மேலும் அவர், “உனக்கு ஒன்று தெரியுமா... நீ எப்போது பிரச்னைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போது நீ வேர் விட்டு வளர்கிறாய். மூங்கில் விதையை நான் விட்டுவிடவில்லை. உன்னையும் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒப்பிடாதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதராக இருப்பார்கள். மூங்கிலும், புதர் செடிகளும் காட்டை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள். மேலும் உனக்கான நேரம் வந்து விட்டது. நீ வளர்வதற்கான நேரம் இது” என்றார் கடவுள். “எவ்வளவு துாரம் என்னால் வளர முடியும்?” என நான் கேட்டேன். “மூங்கிலைப் போல எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு உன்னால் முன்னேற முடியும்” என்று கடவுள் மறைந்தார். நம்பிக்கையுடன் வீட்டுக்கு புறப்பட்டேன்.
|
|
|
|