|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » மக்களுக்கு வந்த துன்பம் |
|
பக்தி கதைகள்
|
|
பந்தளராஜாவும், ராணியும் மட்டுமல்ல! தங்கள் மகனின் நிலை கண்டு சிவ, விஷ்ணுவுக்கும் வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் மனிதப்பிறவி எடுத்து விட்டதால் விதிப்படி அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கிறான் என்பதை அவர்கள் அறிவர். எதற்கும் ஒரு முடிவு உண்டு. தெய்வ அருள் எப்போது கிடைக்குமென்பதை யாராலும் கணிக்க முடியாது. மணிகண்டனின் அன்னையான திருமால் (மோகினி) மனித வடிவுடன் பூமிக்கு வந்தார். அவரது பெயர் தன்வந்திரி. சிறந்த மருத்துவர். அவர் தீராத நோய்களை தீர்க்கவல்லவர் என்ற செய்தி பந்தளராஜாவுக்கு கிடைத்தது. அவரை அழைத்து வந்து வைத்தியம் செய்யக் கூறினர். அவர் வந்து பார்த்த மாத்திரத்தில் நோய் குறைந்து விட்டது. அது மட்டுமல்ல! மணிகண்டன் முன்பை விட ஆரோக்கியத்துடன் எழுந்தான். இது கண்டு மந்திரி கொதித்தான். மந்திரவாதிகளை திட்டினான். மந்திரவாதிகளுக்கு தங்களின் முயற்சி தோல்வியடைந்தது கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவர்களால் மீண்டும் மணிகண்டனை சாய்க்க முடியவில்லை. இருப்பினும் பந்தளராஜா மிகவும் கவலையடைந்தார். மணிகண்டனுக்கு பட்டம் சூட்ட இருந்த நிலையில் இப்படி ஒரு தடங்கல் வந்தது அவரது மனதைப் பிசைந்தது. இதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். மனம் தான் நோய்களின் முதல் நண்பன். காய்ச்சல் வந்தால் ஒரு மாத்திரையில் குணமாகி விடும். மனம் நோய்வாய்ப்பட்டால் மருந்து கிடைப்பது கஷ்டம். மனிதன் ஏதாவது துன்பத்தில் இருக்கும் போது பேரிடியாக அடுத்தடுத்து சோதனைகள் வரும். பந்தள ராஜாவுக்கு நோயுடன் நாட்டைக் குறித்த பிரச்னை ஏற்பட்டது. ஒருநாள் ஏராளமான மக்கள் பந்தள அரண்மனை முன் கூடினர். “மகாராஜா...மகாராஜா” என அபயக்குரல் எழுப்பினர். படுக்கையில் இருந்த பந்தளராஜாவை பல்லக்கில் துாக்கி வந்தனர். மணிகண்டனும் உடன் வந்தான். “என் அருமை மக்களே! ஏன் அழைத்தீர்கள்? உங்களுக்கு ஏதாவது கஷ்டமா?” என்றார். கூட்டத்தில் ஒருவர் அவரிடம்,“மகாராஜா! தாங்கள் படுக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் தங்களைத் தொந்தரவு செய்வதற்காக மன்னியுங்கள். வேறு வழியின்றி தங்கள் உதவி நாடி வந்தோம். நாங்கள் வியாபாரத்துக்கு செல்லும் போது வாபர் என்ற கொள்ளைக்காரன் எங்கள் பொருட்களை அபகரிக்கிறான். தாங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அவர்களை சமாதானம் செய்த பந்தள ராஜா, “உடனே நமது படைகள் வாபரை கைது செய்யும். கவலையின்றி செல்லுங்கள்” என ஆறுதல் கூறினார். மக்கள் கலைந்ததும் மணிகண்டன்,“தந்தையே! கவலையை விடுங்கள். வாபரை கைது செய்வது என் பொறுப்பு. தந்தைக்கு முடியாத சமயத்தில் மகனே வீட்டுக்கும், நாட்டுக்கும் பொறுப்பாவான். எனக்கு ஆசி கூறி அனுப்புங்கள்” என வீரம் பொங்க பேசினான். இது கேட்ட ராஜா உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் சிறுவனான மணிகண்டன் வாபரைக் கைது செய்வதாவது! அந்தக் கொள்ளைக்காரன் சாதாரணப்பட்டவன் அல்ல! அவனால் மணிகண்டனுக்கு தீங்கு ஏதும் நேரலாம் என பயந்தார். அவனது வேண்டுகோளை ஏற்கவில்லை. மாறாக மந்திரியை அழைத்து பெரும் படையை அனுப்பி வாபரைப் பிடித்து வர ஆணையிட்டார். படைகள் சென்றனவே தவிர ஒருவர் கூட திரும்பி வரவில்லை. அனைவரும் வாபரின் தாக்குதலுக்கு இரையாகி விட்டனர் என புரிந்தது. இந்த சமயத்தில் மந்திரி ராணியைச் சந்தித்தான். “மகாராணி! நம் ராஜா நோய்வாய்ப்பட்டுள்ளார். வாபர் கடும் தொல்லை செய்கிறான். இந்த நேரத்தில் நாட்டுக்கு புதிய மன்னர் தேவை. மணிகண்டனை அரசராக்க ராஜாவும், நீங்களும் விரும்புகிறீர்கள். இது என்ன நியாயம்? ஊர் பெயர் தெரியாதவன் பந்தளத்தின் அரசனானால் நாட்டின் மரியாதை என்னாவது” என சொல்லவும் ராணி இடை மறித்து விட்டாள். “மந்திரியாரே! என் மணிகண்டனை ஊர், பெயர் தெரியாதவன் என்று உம்மைத் தவிர வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவனது தலை தரையில் உருண்டிருக்கும். நான் மணிகண்டனின் தாய். மகாராஜா தந்தை. அவன் எங்கள் உயிருக்கு நிகரானவன். இங்கிருந்து சென்று விடும்” என்று கொந்தளித்தாள். ராணியின் ஆவேசம் கண்டு மந்திரி பயப்படுவது போல் நடித்தான். “மகாராணி! நான் மணிகண்டனைப் பற்றி தவறாகச் சொல்லவில்லை. அவர் நற்குணங்கள் படைத்தவர். தங்களின் வளர்ப்பில் வளர்ந்தவர் தவறேதும் செய்வாரா! நான் அதைச் சொல்லவில்லை. வேறு ஒரு விஷயத்திற்கு யோசிக்கிறேன்” என்றவனை ராணி இடைமறித்தாள். “அப்படி என்ன தலை போகிற விஷயம்” என்றவளிடம், கைகேயியைக் கரைத்த மந்தரை போல மந்திரி பேச ஆரம்பித்தான். “மகாராணி! மணிகண்டன் அரசராவதில் தவறில்லை. ஆனால் எதிர்காலத்தை சிந்தியுங்கள். மணிகண்டனுக்கு பிறகு அவனது வாரிசுகள் தான் பதவிக்கு வரும். அவர்கள் உங்கள் வயிற்றுப்பிள்ளையான ராஜராஜனின் வாரிசுகளை எப்படி கவனிப்பார்கள்! அவர்களுக்கு துன்பம் இழைக்கலாம் இல்லையா! அரண்மனையை விட்டு துரத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறதே! அந்தக் கவலையில் தான் சொன்னேன். ராஜ விசுவாசியான நான் எனது கருத்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மந்திரியின் பணி, தக்க சமயத்தில் அரசாள்பவருக்கு உண்மையை எடுத்துரைப்பதே” என்றான். பெண்கள் மனதில் சந்தேகம் என்னும் விதையை விதைத்து விட்டால் போதும். அது வளர்ந்து விருட்சமாகி விடும். கல்லையே கரைக்கும் சக்தி கொண்ட தனது பேச்சு ராணியை யோசிக்க வைத்ததை அவளது முகபாவனை மூலம் தெரிந்து கொண்டான் மந்திரி. இப்போதைக்கு இது போதும். தொடர்ந்து பேசினால் தன் மீது சந்தேகம் வரும் என கருதிய அவன், ‘‘மகாராணி! சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். விடை கொடுங்கள்”என்று கூறி சென்றான். இதையடுத்து ராணியின் மனம் படாதபாடு பட்டது. மந்திரியின் பேச்சில் நியாயம் இருப்பதாக அவளுக்கு தோன்றியது. இனியும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணியவளாக மணிகண்டனை பார்க்க அவனது அறைக்கே சென்று விட்டாள். வாடிய முகத்துடன் வந்த தாயைக் கண்ட மணிகண்டன் அவளது திருவடிகளில் விழுந்து வணங்கினான். “அம்மா! தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தங்கள் முகம் வாடியுள்ளதாக கருதுகிறேன். அவருக்கு ஏதும் ஆகாது. நீங்கள் நிம்மதியாக இருங்கள்” என்றான். அவனிடம், “மணிகண்டா! என் கவலைக்கு காரணம் அது மட்டுமல்ல! வேறொன்றும் இருக்கிறது” என பீடிகை போட்டாள். “எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். தாயின் கவலையை போக்குவது மகனின் கடமை” என்றவன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் மணிகண்டன். ...
|
|
|
|
|