|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பார்பாரிகாவாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
மகாபாரதக் கதையை மேலோட்டமாக அறிந்த பலருக்கும் என்னைப் பற்றி தெரியாது. ஆனால் என் தாத்தாவைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்தான் பீமன் - பாண்டவர்களில் இரண்டாமவர். அவருக்கும் அவர் மனைவியான இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன்தான் என் தந்தை. ஆக மன்னர் குலம், அரக்கர் குலம் இரண்டின் ரத்தமும் என் உடலில் ஓடியது. சொல்லப்போனால் யாதவர் குலமும்தான். யாதவ அரசன் மூருவின் மகள் மவுர்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என் தந்தை கடோத்கஜன். அவர்கள் இருவருக்கும் பிறந்தவன்தான் நான், அதாவது பார்பாரிகா. பாரதப் போர் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்குமிடையே நடைபெற்ற ஒன்று என்றாலும் அதில் பல திருப்பங்களை ஏற்படுத்தியவர் கிருஷ்ணர் என்பது உங்களுக்குத் தெரியும். பாரதப் போர் நடப்பதற்கு முன்னால் முக்கியமான சிலரை அவர் சந்தித்தார். அவர்களுடன் பேசும்போது ‘பாரதப்போர் நடந்து முடிய எத்தனை நாள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைத் தவறாமல் கேட்டார். பீஷ்மர், துரோணர், கர்ணன், அர்ஜுனன் போன்ற பலரும் அவரவருக்குத் தோன்றிய நாள் கணக்கைக் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் கூறிய பதில் கிருஷ்ணருக்குப் பெரும் வியப்பை அளித்தது. ‘ஒரே நிமிடத்தில் அந்தப் போர் முடியலாம்’ என்றேன். ‘அது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டார் கண்ணன். பாண்டவர் தரப்பிலும் கவுரவர் தரப்பிலும் மிகச்சிறந்த தளபதிகளும் போர் வீரர்களும் இருந்தனர். அப்படியிருக்க ஒரு நிமிடத்தில் பாரதப்போரை முடிக்க முடியும் என்ற என்பதில் யாருக்கும் அதிர்ச்சியை அளிக்கும்தான். ஆனால் என் பதிலில் நான் உறுதியாக இருந்தேன். பின்னர் அதே பதிலை கொஞ்சம் விளக்கமாகக் கூறினேன். ‘நான் நினைத்தால் ஒரே நிமிடத்தில் அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும்’ என்றேன் ‘ஏதாவது சமாதானப் பேச்சு பேசப் போகிறாயா? துாது சென்ற என்னாலேயே அது முடியாத காரியமாக இருந்தது’ என்றார் கண்ணன் புன்னகையுடன். அவருக்குத் தெரியாதது இல்லை. இருந்தாலும் என் வாயால் உண்மையை வரவழைக்க விரும்பினார் விளக்கினேன். நான் மிகச்சிறந்த உடல்கட்டு பெற்றவன். பீமர், கடோத்கஜர் ஆகியோர் பரம்பரையில் வந்தவன் வேறு எப்படி இருப்பான்? சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தேன். சில வரங்களை அருளினார். பின்னர் எட்டு திசைகளுக்கும் அதிபதிகளாக இருந்த அஷ்டதிக்கு பாலகர்களை நோக்கித் தவமிருந்து மூன்று அம்புகளை வெகுமதியாகப் பெற்றேன். ‘தீன் பாண்’ என்று அறியப்பட்ட இந்த மூன்று அம்புகளும் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் முதல் அம்பின் மூலம் யார் யாரையெல்லாம் அழித்து விட முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். அடுத்த அம்பின் மூலம் யார் யாரையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறித்து தனிமைப்படுத்த முடியும். மூன்றாவது அம்பின் மூலம் அழிக்கப்பட வேண்டும் என்று வரையறுத்தவர்களை அழித்து விட முடியும். சுருக்கமாகச் சொன்னால் இந்த மூன்று அம்புகளின் மூலம் யாரை வேண்டுமானாலும் என்னால் ஒரு நிமிடத்திற்குள் அழித்துவிட முடியும். அவர்களின் எண்ணிக்கை எத்தனை அதிகமாக இருந்தாலும் அந்த அம்புகள் அவர்களை அழித்துவிடும். இந்தப் பின்னணியை நான் கூறியதும் கண்ணன் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். ஒரு முனிவர் போல வேடமிட்டு என்னிடம் வந்தார்.‘உனக்குத் தனித் திறமை உண்டு என்று கேள்விப்பட்டேன். இந்தக் காட்டில் உள்ள எல்லா இலைகளையும் உன்னால் காப்பாற்ற முடியுமா?’ என்று கேட்டார். நான் கண்களை மூடிக் கொண்டபோது கண்ணன் ஒரு இலையை மட்டும் தன் பாதத்துக்குக் கீழ் மறைத்து வைத்துக்கொண்டார். நான் அம்பைச் செலுத்தினேன். அந்த அம்பு காட்டில் உள்ள எல்லா இலைகளையும் குறிவைத்து விட்டு கண்ணனின் பாதத்தைச் சுற்றி சுற்றி வந்தது. சற்று யோசித்த நான் ‘உங்கள் பாதத்திற்குக் கீழே ஏதோ ஒரு இலை இருக்க வேண்டும்’ என்றேன். இதைக் கண்டதும் மகாபாரதப் போரை என்னால் ஒரே நொடியில் முடித்துவிட முடியும் என்று முனிவர் வடிவில் வந்த கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. ‘போரில் நீ யாருக்கு ஆதரவாக இருக்கப் போகிறாய்?’ என்று கண்ணன் என்னைக் கேட்டார். ‘நான் என் அம்மாவுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன். எந்த பக்கம் பலவீனமானதாக இருக்கிறதோ அந்தப் பக்கத்துக்குதான் என் ஆதரவு’ என்றேன். பாண்டவர்கள் பக்கம் படைபலம் குறைவு என்பதால் அவர்களுக்கு ஆதரவாக போரில் ஈடுபட போகிறேன் என்றேன். ‘உன் போர்த் திறமை காரணமாக கவுரவர்கள் பக்கம் பலவீனம் அடைந்தால் அப்போது என்ன செய்வாய்?’ என்று கண்ணன் கேட்க,‘அப்போது என் நிலையை மாற்றிக்கொண்டு பாண்டவர்களுக்கு எதிராகப் போர் புரிவேன்’ என்றேன். கண்ணன் திகைத்தார். ‘எனக்கு ஒரு வரம் அளிப்பாயாக’ என்று கண்ணன் கேட்க அதை ஏற்றுக் கொண்டேன். ‘எனக்கு உன் தலை வேண்டும்’ என்றான் கண்ணன். எனக்குக் கடும் அதிர்ச்சி, குழப்பம் .‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன். முனிவராக வந்த கண்ணன் திருமால் வடிவில் காட்சியளித்தார். ‘உங்கள் கோரிக்கையை ஏற்று நான் இறந்து விடுகிறேன். ஆனாலும் குருக்ஷேத்திரப் போர் முழுவதையும் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்றேன். கண்ணன் ஏற்றுக்கொண்டார். நான் தன் தலையை நீக்கிக் கொள்ள அந்தக் தலையை அங்கிருக்கும் குன்று ஒன்றின் மீது வைத்தார் கண்ணன். அங்கிருந்தபடியே நான் போர் முழுவதையும் பார்க்கும் ஆற்றலை அளித்தார். போர் முடிந்தபிறகு பாண்டவர்கள் தங்கள் வெற்றிக்கு மிக முக்கியமானவர் யார் என்று விவாதிக்கத் தொடங்கினார்கள். போர் முழுவதையும் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் இதற்கான விடையைக் கூறும்படி கேட்கும்படி கண்ணன் கூறினார். நான்தான் அனைத்துக்குமான அமைதியான சாட்சியாக இருந்தேன் என்பதால் என்னைக் கேட்கச் சொன்னார். கண்ணன்தான் பாண்டவர் தரப்பு வெற்றிக்குக் காரணம் என்று கூறினேன். அவரது ஆலோசனைகள்தானே பாண்டவர்களை ஜெயிக்க வைத்தது! பின்னர் அங்கிருந்த ரூபவதி என்ற நதியில் என் தலை சேர்க்கப்பட்டது. அதற்கு முன் கண்ணன் எனக்கு மனமார்ந்த ஆசிகளை வழங்கினார்.
|
|
|
|
|