|
அயோத்தியே அல்லோலகல்லோலப் பட்டது. ராமன் கானகம் செல்கிறான், ஓரிரு நாட்களுக்கல்ல... பதினான்கு ஆண்டுகள் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். அதுதான் ராமனின் தனிச்சிறப்பு. அவனுக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தெரியாது; ஆனால் அந்த ஒவ்வொருவருக்கும் அவனைத் தெரியும்! நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அவனுடைய பாசம் அவர்களைத் தொட்டிருந்தது. அவனைப் பற்றி நினைத்தாலே மனம் முழுவதும் ஆனந்தம் பொங்குவதை அவர்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தவர்கள். அவன் உப்பரிகையிலே தோன்றும் போதோ, ராஜவீதியில் ரதத்தில் செல்லும் போதோ அல்லது எப்போதெல்லாம் அவன் அரண்மனையை விட்டு வருகிறானோ அப்போதெல்லாம் அவனைப் பார்ப்பதற்கென்றே மக்கள் திரண்டு விடுவார்கள். அவனை தரிசித்தாலேயே தாங்கள் மேன்மையடைந்து விடுவதாக கருதினார்கள். நாட்டில் வறுமை எட்டிப் பார்க்காததற்கும், வளமான வாழ்க்கை தமக்கு அமைந்ததற்கும் ராமனின் இருப்பே காரணம் என நம்பினார்கள். அப்படி ஒரு காந்தமாக அவன் அனைவரையும் ஈர்த்தான். பெற்றோரிடமும், தம்பிகளிடமும் ராமன் பாசத்துடன் பழகும் நேர்த்தியை அறிந்திருந்த ஒவ்வொரு குடிமகனும் அதைத் தன் இல்லத்திலும் பின்பற்ற விரும்பி அப்படியே செய்தான். இதனால் அவன் குடும்பத்தில் எந்த காரணத்துக்காகவும் சண்டை உருவானதில்லை. அதே போல அக்கம் பக்கத்தினருடன் மனித நேயத்தோடு பழகினான், அதனால் அங்கே பகை ஏற்படவில்லை. ராமனை முன்மாதிரியாகக் கொண்டிருந்த அனைவருக்கும் பரிபூரண ஆனந்த வாழ்க்கை அமைந்திருந்தது. ஆனால் இப்போது ராமன் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறான். இனி இங்கே அமைதி நிலைக்குமா? சம்பிரதாயங்களை மீறி ராமனுக்கு பதிலாக பரதன் அரியணை ஏறுவதால் இதை ஒரு முன்னுதாரணமாக வைத்து மக்களும் இனிமேல் தம் குடும்பங்களில் சம்பிரதாயங்களை மீறுவார்களா? அல்லது ராமனைப் போல பொறுமை காப்பார்களா? மூத்தாள் மகன் என்பதால் பாரபட்சம் காட்டும் கைகேயியின் துரோகம் குடிமக்கள் குடும்பங்களிலும் படர்ந்து விடுமோ? மனைவிக்கு வாக்கு கொடுத்த காரணத்தால் உத்தமமான மகனை நாட்டை விட்டே விலக்கும் தகப்பனின் பாசம் பிறழ்ந்த செயல், பிற குடும்பங்களிலும் பிரதிபலிக்குமா? அல்லது சித்தி உறவே ஆனாலும் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக அவளைக் கொஞ்சமும் துாற்றாமல், அடிபணிந்து ராமன் செலுத்திய மரியாதை தொடர்ந்து பின்பற்றப்படுமா? பரதன் வந்து அரியாசனத்தில் அமர்வானானால் அந்த சகோதர துரோகம் குடிமக்களின் இல்லங்களிலும் நிகழக் கூடுமோ! மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற வகையில் அயோத்தியில் அரச குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் விரும்பத் தகாத நடவடிக்கைகளை சலுகைகளாகக் கொண்டு மக்கள் குடும்பங்களிலும் அராஜகம் தலை துாக்குமோ? பலவகை எதிர்மறை எண்ணங்களால் மக்கள் குழம்பித் தவித்தார்கள். ஆனால் ராமன் கானகம் செல்வது தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதால் எதிர்ப்பைக் காட்டவும் அவர்கள் தயங்கினார்கள். அப்படி காட்டுவது தாங்கள் கடவுளாக மதிக்கும் ராமனுக்குச் செய்யும் அவமரியாதை என்ற எண்ணத்தில் கண்ணீர் பெருக்கியதோடு அமைதி காத்தார்கள். ராஜபோக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறு சூழலில் வாழ்க்கையைத் தொடரப் போவதால் ராமன், சீதை, லட்சுமணனும் அதற்கேற்ப தங்கள் உடைகளையும் மாற்றிக் கொண்டார்கள். மரவுரி அணிந்து கொண்டனர். புராண காலத்தில் அரண்மனைகளில் மரவுரி ஆடைகள் நுாற்றுக் கணக்கில் தயாரிக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். வேட்டி, புடவை போன்ற தானப் பொருட்களோடு இவையும் கொட்டாரத்தில் இடம் பெற்றிருக்கும். தேர்ந்தெடுத்த மரங்களிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட மரப்பட்டைகள், மரப்பிசின் இவற்றைக் கொண்டு அது தயாரிக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது. முக்கியமாக காடுகளில் தங்கி தவம் இயற்றும் முனிவர்களும், ரிஷிகளும் மன்னரைப் பார்க்கவும், அவரை ஆசிர்வதிக்கவும் அரண்மனைக்கு வருவது வழக்கம். அவர்களுக்கு மாற்று மரவுரி ஆடைகளை அரண்மனையில் வழங்குவார்கள். ஏற்கனவே அணிந்திருந்த மரவுரி ஆடையை விலக்கி இந்தப் புது ஆடையை அவர்கள் அணிந்து கொள்வார்கள். இந்த ஆடைகள் கானகத்து தட்ப வெப்பச் சூழலால் உடல் நலம் பாதிக்காமல் இருக்க உதவும். இப்போது ராமனும் வனவாசம் மேற்கொள்வதால் அவனுக்கும் இந்த ஆடை அந்த இயற்கைச் சூழ்நிலையை ஏற்குமாறு அமையும். அதோடு பதினான்கு ஆண்டுகள் அவன் தன் மனைவி, தம்பியுடன் தவ வாழ்க்கையையே மேற்கொள்ளப் போகிறான் என்பதால் இந்த உடை அந்த மூவருக்கும் தேவையானதாகவே இருக்கும். ராமனும் லட்சுமணனும் ஒரு மாதிரியாக அந்த ஆடைகளை அணிந்து கொண்டார்கள் என்றாலும், சீதைக்கு உடுத்திக் கொள்ளத் தெரியவில்லை. ராமன்தான் அவளுடைய புடவைக்கு மேலாகவே போர்வை போன்ற அந்த மரவுரியை அணிவித்து விட்டான். மிகுந்த நாணத்துடன் அவன் தனக்கு அலங்காரம் செய்வித்ததை அவள் ஏற்றுக் கொண்டாள். பெருந்துக்கம் ஆழ்த்திய மயக்க நிலையிலேயே தன்னைச் சுற்றி நடப்பவனவற்றை அரைகுறை உணர்வோடு கவனித்துதான் வந்தார் தசரதன். இந்தக் கட்டத்தில் அவருக்குப் பொறுக்கவில்லை. அலங்கார பூஷிதனாக, அணிகலன்கள் அழகு செய்பவனாக, பரிபூரண பேரழகனாக வலம் வந்த ராமனின் இந்தக் கோலத்தைப் பார்த்த அவர் கண்களிலிருந்து ரத்தமே வடிந்தது. ‘‘ராமா, என் செல்வமே… வேண்டாம், இந்த உடை உனக்கு வேண்டாம். என்னுடைய ராஜாராமன் நீ, உனக்கு இந்த ஆடை பொருந்தவே இல்லை. நீ உன் இயல்பான உடைகளை அணிந்து கொள்’’என்று சொல்லிக் கதறினார். ராமன் அவரை மெல்ல அமைதிப்படுத்தினான். ‘‘தந்தையே, வனத்தில் வாழப்போகும் எனக்கு இந்த உடைகள்தான் பொருத்தமானதாக இருக்கும். என் வழக்கமான உடைகளை நான் எவ்வளவுதான் என்னுடன் எடுத்துச் செல்ல முடியும்? அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அனாவசிய பொறுப்பும் எனக்குச் சேர்ந்துவிடுமே! ஆகவே இந்த மரவுரிதான் சரி. மாற்று மரவுரி தேவையென்றால் அங்கே வசிக்கக் கூடிய முனிவர்கள், முனி பத்தினியரிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்’’ ‘‘யாசகமா, அதுவும் முனிவர்களிடமிருந்தா? அயோத்தி மன்னன் கை மேலோங்கிக் கொடுத்துதான் பழக்கப்பட்டவனே தவிர கரங்கள் தாழ்ந்து எதையும் பெற்றுக் கொள்பவன் அல்லவே!’’ ‘‘யாரிடமிருந்து பெறுகிறேன், தந்தையே! ஞான வல்லமை மிக்க தவ சீலர்களிடமிருந்துதானே பெறுகிறேன்? அது எனக்குப் பெரிய ஆசிர்வாதமல்லவா?’’ தசரதனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. ராமன் மேலும் தொடர்ந்தான்: ‘‘நான் ராஜ உடை அணிந்து காட்டில் வாழ முடியுமா? அப்படியென்றால் நான் ராஜ்யத்தைத் துறக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அரண்மனை சுகபோகம் எதையும் அனுபவிக்காமல் அங்கே வாழ்க்கையைத் தொடர்ந்தால்தான் தாங்கள் அளித்த வரத்தை நான் நிறைவேற்றுவதில் முழுமையான மதிப்பு இருக்கும். அப்படி இல்லாவிட்டால் நான் அந்தப் பதினான்கு ஆண்டுகள் கெடு முடியும் முன்னரே நாடாளும் ஆசை கொண்டு அயோத்திக்குத் திரும்பிவிடுவேன் என்ற சந்தேகம் உங்களுக்கெல்லாம் எழவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா?’’ இந்த கட்டத்தில் லட்சுமணன் கோபத்துடன் குறுக்கிட்டான். ‘‘இப்படி ஒரு நிலை உருவாகிவிடக் கூடாது என்பதுதானே கைகேயி அன்னையாரின் விருப்பம்! நாம் வேறு ஏதாவது நாட்டிற்குச் சென்று இங்கு வாழ்ந்ததைப் போன்றே அங்கே ராஜ வாழ்க்கை வாழ்ந்து விடக் கூடாது என்பதால் தானே இப்படி நிபந்தனைகளை விதித்திருக்கிறார்!’’ என்றான். ‘‘தவறு லட்சுமணா. உன்னுடைய கோபம் அநாவசிய வார்த்தைகளை உதிர்க்கிறது. அன்னையார் நாம் இப்போதே ஞானம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார். நீயே சிந்தித்துப் பார், இப்போதைய இந்த வாழ்க்கையில் தாமாக நம் அரண்மனைக்கு வரும் தவயோகிகளை தானே நாம் தரிசிக்க முடிகிறது? ஆனால் வனத்தில் எத்தனையோ சீலர்களை நாமாகச் சென்று வணங்க முடியும், ஆசி பெற முடியும். அவர்கள் வரும் போதெல்லாம் நகரத்தில் நம்மால் அவர்களை ஆதரிக்க முடிந்து. இப்போது அவர்களுடைய ஆதரவில் வாழப் போகிறோம். இது பெரும்பேறல்லவா? குருவுக்கு சமமான மகரிஷிகளுடன் ஞான வாழ்வு வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ மறுத்து சொல்ல யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. அங்கே நிலவிய தர்மசங்கடமான அமைதியை விலக்க அமைச்சர் சுமந்திரன் வந்தார். ஆம், அவர்தான் மூவரையும் தேரில் அழைத்துச் சென்று கானகத்தில் கொண்டு விடப் போகிறார்!
|
|
|
|