|
மணிகண்டன் ஒரு குட்டிப்புலி என்பதை உணராத மந்திரி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். திட்டப்படி மகாராணி தனக்கு தலைவலி வந்தது போல அரற்ற ஆரம்பித்தாள். அவளது நடிப்பு பிரமாதமாக இருந்தது. அவள் எழுப்பிய அவலக்குரல் ஏற்கனவே உடல்நலமின்றி இருந்த பந்தளராஜாவையும் பீதி கொள்ளச் செய்தது. அவர் தன் நோயையும் பொருட்படுத்தாமல் ராணியின் அருகில் வந்து என்ன ஏதென்று விசாரித்தார். ராஜவைத்தியர் வரவழைக்கப்பட்டார். அவர் ராணியை சோதித்து விட்டு,“இது என்னவென்றே புரியவில்லையே! என் வாழ்நாளில் இப்படி ஒரு காரணமற்ற வலியை நான் பார்த்ததே இல்லை” என பொய் சொன்னார். அவர் மந்திரியிடம் பணம் பெற்றுக் கொண்டு அவரது கையாளாகி விட்டவர். இதையடுத்து மேலும் பல சிறப்பு வைத்தியர்களை ராஜா வரவழைத்தார். அத்தனை பேரையும் மந்திரி சரிக்கட்டி வைத்திருந்தான். அதனால் எல்லாருமே சொல்லி வைத்தது போல காரணமற்ற வலி என்று ராஜாவிடம் கூறினர். “என்ன செய்வீர்களோ! ஏது செய்வீர்களோ! ராணியைக் குணப்படுத்தாமல் யாரும் அரண்மனையை விட்டு வெளியேறக் கூடாது” என ராஜா திட்டவட்டமாக சொல்லி விட்டார். அப்போது ஒரு வைத்தியர்,“மகாராஜா! நான் மருத்துவ நுால்கள் பல கற்றவன். குறிப்பிட்ட ஒரு நுாலில் காரணமற்ற வலிக்கு ஒரு மருந்து சொல்லியுள்ளனர். ஆனால் அதை தயாரிப்பது நடக்காத காரியம். அதனால் தான் யோசிக்கிறேன்” என்றார். பந்தளராஜா அவரைப் பிடித்து உலுக்கினார். “நடக்காது என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது. அரண்மனை பொக்கிஷம் முழுவதும் கரைந்தாலும் பரவாயில்லை, ராணியைக் காப்பாற்றும் மருந்தை கொண்டு வந்தாக வேண்டும். அது எங்கிருக்கிறது. இப்போதே ஆட்களை அனுப்பி அதைக் கொண்டு வருகிறேன்...தேவைப்பட்டால் நானே போகிறேன்” என்றவரை இடைமறித்த வைத்தியர்,“மகாராஜா, அது புலியின் மடியில் இருக்கிறது” என்றார். ராஜாவுக்கு அது புதிராக இருக்கிறது. “புலியின் மடியா! நீர் என்ன சொல்கிறீர்? விளக்கமாகச் சொல்லும்” என்றார். “ராஜா! அரசியின் நோய் தீர்க்கும் மூலிகைகள் எங்களிடம் உள்ளன. அது விஷயத்தில் பயமில்லை. அந்த மூலிகைகளை அரைத்து பொடியாக்கி வைத்து விட்டோம். அதை தண்ணீரிலோ, தேனிலோ கரைத்துக் கொடுக்க முடியாது. புலிப்பாலில் தான் கரைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் புலியிடம் பால் கறப்பவர் யார்? அது எப்படி? அருகில் சென்றாலே அடித்துக் கொன்று விடுமே! புலியிடம் பால் கறக்குமளவு தைரியசாலிகள் யாராவது இருக்கிறார்களா என்ன! அதனால் தான், என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறோம்” என்று மந்திரி சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் ராஜாவிடம் சொன்னார் வைத்தியர். ராஜா ஆழ்ந்த கவலைக்கு ஆளானார். புலிப்பால் கொண்டு வருவதா! இது யாரால் இயலும்! நானே சென்று கொண்டு வர வேண்டும் என்றால் புலியைப் பிடிக்கும் அளவு உடலில் தெம்பில்லை. அப்படியே பிடித்து கூண்டில் அடைத்தாலும் புலிப்பாலை கறக்கும் வித்தை யாருக்கு தெரியும். என்ன செய்வது?” என்ற யோசனையில் ஆழ்ந்தார். அப்போது அவரது தோளை ஆதரவாகப் பற்றியது மணிகண்டனின் சின்னஞ்சிறு கை. “அப்பா! வைத்தியர் சொன்னதை நானும் கேட்டேன். வீரமிக்க பிள்ளைகளை பெற்றிருக்கும் நீங்கள், இதற்காக அஞ்சலாமா? நான் செல்கிறேன். ஒன்றென்ன! நுாறு புலிகளைப் பிடித்து வருகிறேன். தேவையான அளவு பால் கறந்து கொள்வோம். மற்றவர்களால் முடியாவிட்டால் நானே பால் கறக்கிறேன்” என்றான். பந்தளராஜா பயந்து விட்டார். “மணிகண்டா! நீயும் ராஜராஜனும் சிறுவர்கள். புலியின் உறுமல் கேட்டாலே பயந்து விடுவீர்கள். உங்கள் இருவருக்கும் புலிகளால் ஆபத்து என்றால் என்ன செய்வேன்! நீ இந்த பிரச்னைக்குள் வராதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவர் நாடெங்கும் தண்டோரா மூலம் புலிகளைப் பிடித்து பால் கறந்து தருபவர்களுக்கு ஒரு தலைமுறைக்கு தேவையான செல்வம் தரப்படும் என அறிவித்தார். மக்கள் இதைக் கேட்டாலும், பணத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட தயாராக இல்லை. ஒரு சில தைரியசாலிகள் காட்டுக்கு சென்றனர். ஆனால் திரும்பவில்லை. இதுகண்ட மன்னன், “இது என்ன சோதனை?” என கலங்கி நின்ற போது மணிகண்டன் மீண்டும் வந்தான். “அப்பா! யாரையும் நம்பி பயனில்லை. என் தாயின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவள் அரற்றும் ஓசை நெஞ்சைப் பிழிகிறது. இனியும் நான் சும்மா இருக்கமாட்டேன். தாயைப் பாதுகாக்காத பிள்ளைகள் இந்த உலகத்தில் வாழ்ந்தும் வாழாதவர்களே! அவர்கள் இறந்தவர்களுக்கு சமமாவர். என்னை தைரியமாக அனுப்புங்கள். தம்பி ராஜராஜன் அம்மாவுடன் இருந்து அவளைப் பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் கவலையின்றி இருங்கள். மிக விரைவில் வந்து விடுகிறேன்” என அம்பு, வில் ஏந்தி கிளம்பி விட்டான். இனி அவனை தடுக்க முடியாது என்பதை மகாராஜாவும் உணர்ந்து கொண்டார். “மணிகண்டா! மிகவும் பாதுகாப்பாக போய் வா. உன் உயிர் எனக்கு முக்கியம். பெற்ற பிள்ளையை வீட்டில் வைத்துக் கொண்டு வளர்ப்பு பிள்ளையை சுயநலத்துக்காக பந்தளராஜன் பயன்படுத்திக் கொண்டான் என்ற அவச்சொல்லுக்கு என்னை ஆளாக்கி விடாதே. பாதுகாப்புக்கு உன்னுடன் வீரர்களை அனுப்புகிறேன்” என்றவரிடம்,“வேண்டாம் தந்தையே! வீரர்கள் என்னுடன் வந்தால் புலிகள் கலைந்து ஓடி விடும். தனியாகச் சென்றால் அவை என்னைத் தாக்குவதற்காக ஒரே இடத்தில் கூடி நிற்கும். அவற்றை எப்படியும் பிடித்து விடுவேன். என் மேல் நம்பிக்கை வையுங்கள்” என்ற மணிகண்டனின் கோரிக்கையையும் மகாராஜாவால் தட்ட முடியவில்லை. உடனே சில தேங்காய்களை எடுத்து, அதன் கண்ணை நீக்கி அதன் வழியாக பசு நெய்யை ஊற்றி அதை அடைத்தார் மகாராஜா. “மகனே! காட்டிற்கு சென்று வர எத்தனை நாளாகுமோ? அதுவரை உணவுக்கு என்ன செய்வாய்? அதனால் இந்த நெய் தேங்காயை வைத்துக் கொள். நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். துாரதேச பயணத்துக்கு இது சிறந்த உணவு. நீண்ட நேரம் பசியும் தாங்கும்” என்றவர், அதை ஒரு துணியில் சுற்றினார். துணியின் மறுமுனையில் மணிகண்டனுக்கு மாற்று துணிகள் சிலவற்றையும், ஓய்வெடுக்கும் இடங்களில் விரிக்க ஒரு போர்வையையும் வைத்துக் கட்டினார். இந்த இருமுடிக்கட்டை பத்திரமாக வைத்துக் கொள். அவசரத்துக்கு பயன்படும்” என்றார். இந்த வழக்கம் தான் இன்று வரை ஐயப்ப பக்தர்களிடம் இருக்கிறது. ஐயப்பன் தான் முதன்முதலாக இருமுடி சுமந்தவன். அதனால் தான் அவரது பக்தர்களை ஐயப்பன்மார் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கால வெள்ளத்தில் ‘சுவாமி’ என்று மரியாதையாக அழைத்தனர். மணிகண்டன் கிளம்பி விட்டான். அவன் காட்டுக்குள் நுழைந்து புலிகளைத் தேடும் வேளையில் எதிரே தாடி வைத்த ஒருவர் வந்தார். “அன்புக்குழந்தையே! நீ யார்? காட்டிற்குள் வழி தவறி வந்து விட்டாயா? இங்கே வந்தவர்கள் உயிர் பிழைத்துச் சென்றது கிடையாது. உன் பெற்றோர் யார்? இல்லம் எங்கிருக்கிறது? சொன்னால், நானே உன் இருப்பிடத்தில் கொண்டு சேர்த்து விடுகிறேன்” என அன்பொழுக பேசினார். என்ன காரணத்தாலோ, மணிகண்டனை அந்த நடுத்தர வயது நபருக்கு பிடித்துப் போய் விட்டது.
|
|
|
|