|
கணேச சர்மா
கடவுள் மீது பக்தி செலுத்துவது என்பது நாம் அறிந்ததே. ஆனால் பெற்ற மகனை கறி சமைத்த சிறுத்தொண்டர், சிவனுக்கு கண் அளித்த கண்ணப்பர் போல அரிய செயல்களில் ஈடுபட்டு 64வது நாயன்மார் என பட்டம் பெற்றவர் ‘பிரதோஷம் மாமா’ எனப்படும் வெங்கட்ராம அய்யர். மஹாபெரியவர் மீது பக்தி கொண்டு அவரை ‘பரம்பொருளாக’ உணர்ந்து பிரதோஷ நாட்களில் தரிசித்து அருள் பெற்ற இவரை ‘பிரதோஷம் மாமா, பிரதோஷ பக்தர்’ என அழைப்பர். ரயில்வே துறையில் பணியாற்றிய அவர் பிரதோஷத்தன்று மஹாபெரியவர் எங்கு இருந்தாலும் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கு செல்வார். காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஓரிக்கையில் உள்ள ‘மஹாபெரியவர் கோயில்’ உருவாக காரணமானவர் இவரே. இவரது பக்திக்கு வித்திட்ட திருத்தலம் திருவண்ணாமலை. ஞானியர் நாடும் புனிதபூமியான இங்கு பிரேதாஷம் மாமா கிரிவலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கு அவர் வழிபட்ட ஞானிகளில் ‘திண்ணைசாமி’ என்னும் சித்தரும் ஒருவர். கால்களை நீட்டியபடி ஒரு திண்ணையில் சாய்ந்து யோகநிலையில் அவர் இருப்பார். உடம்பு பற்றிய சிந்தனை இல்லாத தியானநிலை அது. அவர் மண்டியிட்டு கிரிவலம் சுற்றும் போது முட்டிகள் தேய்ந்து ரத்தம் வழிவதைக் கூட பொருட்படுத்த மாட்டார். உடல் வேறு, ஆன்மா வேறு என்ற நிலையை எட்டிய மாமுனிவர் அவர். பிரதோஷம் மாமாவுக்கு அவரிடம் ஈடுபாடு ஏற்பட்டதால் திண்ணைசாமியை பின்தொடர்ந்தார். அப்போது, ‘‘ஏன் பின்னால வர்றே... சங்கர் மட்டுக்குப் போ, சங்கர் கேம்ப்புக்குப் போ’’ என்று விரட்டினார். அதன் பொருள் புரியாமல் குழம்பினார். யோசித்த போது உண்மை புரிந்தது. ஆமாம்...ஆதிசங்கரரின் அவதாரமான மஹாபெரியவரிடம் சரணடையச் சொல்கிறார் என்பது தெரிந்தது. பிரதோஷம் மாமா 1952ல் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் மஹாபெரியவரை முதன் முதலில் தரிசித்தார். பெரியவரின் ‘பாதுகை’ யைத் தனக்கு தர வேண்டும் எனக் கேட்டார். பெரியவரோ ‘தானாக உன்னைத் தேடி வரும்’ என வாய் மலர்ந்தருளினார். மகான்களின் வார்த்தை பொய்யாகுமா...தானாகவே தேடி வந்தது பாதுகை. ஒருமுறை சிதம்பரத்தில் பெரியவர் முகாமிட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆர்.வி.எஸ்.சர்மாவை (பிரதோஷம் மாமாவின் மூத்த சகோதரர்)அழைத்த பெரியவர், தான் நடராஜர் கோயிலுக்கு சென்று திரும்பும் வரை தன் பாதுகையை வைத்திருக்கும்படி தெரிவித்தார். ஆனால் வந்ததும் ‘நீயே அதை வைத்துக் கொள்’ என அன்பு கட்டளையிட்டார். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்தன. அப்போது சர்மா டில்லியில் வசித்து வந்தார் தன் காலத்திற்கு பிறகு பாதுகையை அக்கறையுடன் பாதுகாக்க பிரதோஷம் மாமாவே தகுதியானவர் எனக் கருதி ஒப்படைத்தார். ‘தானே வரும்’ என்னும் அருள் வாக்கு எப்படி பலித்தது பார்த்தீர்களா...இப்படியாக குருபாதுகையை பெற்ற பக்தர், மனம் என்னும் சிம்மாசனத்தில் அதை வைத்து வழிபட்டு மகிழ்ந்தார். ஆழ்ந்த பக்தியுடன் எதை வேண்டினாலும் அது தேடி வரும் என்பது உண்மை. நாமும் பக்தியுடன் வேண்டுவோம். விரும்பியதை பெற்று இன்பமாக வாழ்வோம்.
|
|
|
|