|
பண நெருக்கடியில் சிக்கித் தவித்தார் விவசாயி பெருமாள். விரக்தியின் விளிம்பில் அவர் ஒருநாள் கால் போன போக்கில் போன போது துறவி ஒருவரை சந்தித்தார். ‘‘சுவாமி...எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என அவரிடம் வருந்தினார். விவசாயியின் மனநிலையை உணர்ந்த துறவி, “ஒருமுறை இந்தக் காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர்ச்செடிகளும் வளர்ந்துள்ளன. அதில் மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா” என்றார். “ஆமாம் சுவாமி” என பதிலளித்தார். “புதர்ச்செடி, மூங்கிலுக்கான விதைகள் எப்போது மண்ணில் விழுந்ததோ அப்போதிருந்தே கடவுள் அதை கண்காணித்து வருகிறார். தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்குகிறார். புதர்ச்செடியின் விதை மண்ணில் இருந்து துளிர் விட்டு வேகமாக வளர்ந்தது. அதன் நிறம் பூமியை அலங்கரிக்கும் விதத்தில் பசுமையாக இருந்தது. ஆனால் மூங்கில் விதையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் கடவுள் அதைக் கைவிடவில்லை. மூன்றாம், நான்காம் ஆண்டுகள் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் துளிர் வந்தது. புதர்ச்செடியை விடச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில் உயர்ந்து வளர்ந்தது. பார்க்க கம்பீரமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக மூங்கில் விதை வாழத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. பின்னரே தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது. கடவுள் தன் படைப்புகளுக்கு சவால்களை சந்திக்கும் சக்தியை கொடுத்திருக்கிறார். கையாள முடியாத பிரச்னைகளை அவர் கொடுப்பதில்லை” என்றார். மேலும் அவர், “உனக்கு ஒன்று தெரியுமா...நீ எப்போது பிரச்னைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போது நீ வேர் விட்டு வளர்கிறாய் என்பது பொருள். மூங்கில் விதையைப் போல கடவுள் உன்னையும் விட்டு விட மாட்டார். மற்றவர்களுடன் உன்னை ஒப்பிடாதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதராக இருப்பார்கள். மூங்கிலும், புதர்ச்செடிகளும் காட்டை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள். நீ வளர்வதற்கான நேரம் இது. தொடர்ந்து கடமையைச் செய்” என அறிவுறுத்தினார் துறவி. விவசாயி நன்றியுடன் கைகுவித்த போது, “மூங்கில் போல வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் நீ முன்னேற்றம் காண்பாய்” என வாழ்த்தினார் துறவி. தைரியமும், நம்பிக்கையும் பெற்றவராக விவசாயியும் கடமையாற்ற புறப்பட்டார்.
|
|
|
|