|
பிரதோஷம் மாமாவின் தந்தை வைத்யநாதசர்மா. சக்தி உபாசகரான இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் உண்டு. பிரதோஷம் மாமாவிற்கு தந்தையின் கவிதைகளைப் பற்றி தெரியாது. 1971ம் ஆண்டு மகாசிவராத்திரியன்று மஹாபெரியவரை தரிசித்த போது பெரியவர், ‘‘அப்பாவின் பாட்டு ஏதாவது உனக்குத் தெரியுமா’’ எனக் கேட்டார். தெரியாது என பதிலளித்தார். ‘‘தெரிஞ்சுண்டு வந்து சொல்லு’’ என அன்புக் கட்டளையிட்டார். ஆனால் அதை மறந்தே போனார். பின்னர் ஒருமுறை ஆந்திராவிலுள்ள கார்வேட் நகரில் இருந்து மஹாபெரியவர் நடை பயணம் வந்த போது பிரதோஷம் மாமா உடன் வந்தார். அப்போது, ‘‘அப்பா பாடிய பாட்டு பற்றிக் கேட்டேன். அதை தேடிக் கொண்டு வா’’ என மீண்டும் உத்தரவிட்டார். ‘முக்கிய விஷயம் ஏதோ இருக்கு’ என்ற எண்ணம் பிரதோஷம் மாமாவின் மனதில் உண்டானது. தந்தையின் பெட்டியைத் தேடி எடுத்தார். அதில் தேவி பாகவதம். மஹாபெரியவரை பற்றிய பாடல்கள் இருந்தன. பொக்கிஷம் கிடைத்தது போல மகிழ்ந்தார். ‘காஞ்சி காம கோடி பீடமும் சிறப்பதேறவே’ ‘அம்புவி மீதில் விளங்குறு தெய்வமதாகியமர் குருவே’ ‘வாழி காமகோடி பீடம் வளம் மிகுந்து வாழியே’ ‘திங்களஞ் சடை சிவபிரான் உருத்தெரியவே விளங்கரியதோர் மகான்’ என மஹாபெரியவரை சாட்சாத் சிவபெருமானின் வடிவமாக தந்தை பாடியதைக் கண்டு வியந்தார். ஒருமுறை திருவையாற்றில் பெரியவர் முன்னிலையில் ஆசுகவி பாடியதற்கு பரிசாக இரட்டை சால்வையும், ‘கவி குஞ்சரம்’ என்னும் பட்டமும் பெற்றதும் தெரிய வந்தது. ‘சந்திர சேகரேந்திர சரஸ்வதி பதம் சரண் அடைந்தனன்’ என்னும் பாடல் வரிகள் மஹாபெரியவரின் திருவடியில் தந்தையார் சரணாகதி அடைந்ததை உணர்த்தியது. பிரதோஷம் மாமாவுக்கு அந்த வரி மனதிற்கு மந்திரமாகப்பட்டது. ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாக்கை ஏற்று வழிபடத் தொடங்கினார். பிரதோஷத்தன்று எந்த ஊரில் இருந்தாலும் மஹாபெரியவரைத் தரிசிக்க வேண்டும் என உறுதி கொண்டார். ஒருநாள் பிரதோஷம் மாமாவிடம் அவரது தந்தையார் எழுதிய பாட்டுக்கு விளக்கம் கேட்ட பெரியவர், ‘இதுக்கு முன்னாடி ஒரு பாட்டு வருமே...தெரியுமா...’’ எனக் கேட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட விஷயத்தை நினைவில் வைக்க அவரைத் தவிர வேறு யாரால் முடியும்? ‘என் மேல் அருணன் உளநாளும் கருணை வைத்து....’ என்னும் அந்த வரிகளை மஹாபெரியவர் நினைவுபடுத்தினார். அதாவது உலகில் சூரியன், சந்திரன் உள்ள வரைக்கும் நம் மீது அருள் பொழியும் வள்ளலே... நீடுழி வாழ்க என வாழ்த்துவதாக அந்த பாடல் இருந்தது. தந்தையாரின் பாடல் மூலமாக தன்னை ஆட்கொண்டதை எண்ணி நெகிழ்ந்தார் பிரதோஷம் மாமா. இவரைப் போல குருநாதரின் அருள் பெற்று வாழ்வில் நாமும் நலம் பெறுவோம்.
|
|
|
|