|
என்னை துவாபர யுகத்தின் தலைசிறந்த மல்யுத்த வீரன் என்பார்கள். நான் பீமனுக்கும் துரியோதனனுக்கும் மல்யுத்தப் பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டேன். வேறு பலருக்கும் கூட போர்ப் பயிற்சி அளித்ததுண்டு. அவர்களில் கண்ணனின் மகன் சம்பா, அபிமன்யு ஆகியோரும் உண்டு. நான் ஜராசந்தனை பலமுறை தோற்கடித்து இருக்கிறேன். அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்திருக்கிறேன். என் மனைவியின் பெயர் ரேவதி. ஒரு விதத்தில் ரேவதி என்னைவிட வயதில் மூத்தவள். கொஞ்ச நஞ்சமல்ல, மிகப் பல வருடங்கள் மூத்தவள். இதன் பின்னணி மிக விந்தையானது. அவள் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய குஸஸ்தாலி என்ற ராஜ்யத்தை ஆண்ட காகுட்மி என்ற மன்னரின் மகள். ரேவதி அழகானவள், திறமையானவள். அவளுக்கு ஏற்ற துணை யார் என்று பிரம்ம தேவனே கூறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவள் தந்தை. இதற்காக பிரம்ம லோகத்துக்கே சென்றார். கூடவே தன் மகளையும் அழைத்துச் சென்றார். அங்கே பிரம்மனை சந்திக்க அவர் காத்திருக்க நேரிட்டது. பின் அவரை சந்தித்த போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. ‘பூவுலகில் உள்ள காலப் பிரமாணமும் பிரம்ம லோகத்தின் காலப் பிரமாணமும் மிக வித்தியாசமானவை. எனவே இங்கு குறைவான நேரமே காத்திருந்ததாக நீங்கள் கருதினாலும் உண்மையில் பூமியைப் பொறுத்தவரை பல வருடங்கள் கழிந்து விட்டன. உன் மனதில் சில ராஜகுமாரர்களை பட்டியலிட்டு வைத்து அவர்களில் யார் ரேவதிக்கு பொருத்தமானவர் என்று என்னை கேட்க வந்திருக்கிறாய். ஆனால் அந்த ராஜகுமாரர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை. இப்போது துவாபரயுகம் தொடங்கி விட்டது. கண்ணன், பலராமன் என்ற இரு சகோதரர்கள் இப்போது உலகில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களில் பலராமனுக்கு உன் மகள் ரேவதியை விவாகம் செய்துகொடு’ என்றான் பிரம்மதேவன். அதன்படி ரேவதி என் மனைவியானாள். ஒருமுறை நைமிசாரண்யம் என்ற தலத்திற்குச் சென்றேன். அங்குள்ள முனிவர்களும் பண்டிதர்களும் என்னை மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். பணிவுடன் நடந்து கொண்டார்கள். ஆனால் ரோம ஹர்ஷணன் என்பவன் என்னைக் கண்டு எழுந்திருக்காமல் அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட நான் ஒரு தர்ப்பைப் புல்லை பயன்படுத்தி என் தவ வலிமையால் அவனைக் கொன்றேன். பொதுவாகவே ஆணவமும், பெரியோர் நிந்தனையுமாக வாழ்ந்து கொண்டிருந்த ரோம ஹர்ஷணன் இறந்ததில் யாருக்கும் வருத்தம் இல்லை. என்றாலும் ஒரு பிராமணனைக் கொன்றதால் எனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதை நீக்குவதற்கு ஒரு வருடம் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செய்து பிராயச்சித்தம் பெற்றேன். சரஸ்வதி நதிக்கரையில் இருந்த புண்ணியத் தலங்களுக்கு விஜயம் செய்தேன். வழிபட்டேன். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாகைக்கும் சென்றேன். கயாவில் உள்ள பல்குண நதியில் நீராடி முன்னோர்களுக்கான திதிகளைச் செய்தேன். பின்னர் ஸ்ரீசைலம், திருவேங்கட மலை, காஞ்சிபுரம் என பயணம் தொடர்ந்தது. பாரதப்போரில் நான் பங்கேற்கவில்லை. பாண்டவர்களும் கவுரவர்களும் போரில் ஈடுபடுவதை நான் அங்கீகரிக்கவில்லை. இருதரப்பினருக்கும் இது குறித்து நான் கூறிய ஆலோசனைகளை அவர்கள் ஏற்கவில்லை. வருத்தமும் கோபமாக நான் துவாரகைக்குத் திரும்பி வந்து விட்டேன். நான் பாண்டவர்களுக்கு ஆதரவாக இல்லாதது (அதுவும் என் தம்பி கண்ணன் அவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்த போது) பலருக்கும் வியப்பு. ஆனால் என்னைப் பொறுத்தவரை தர்மன் சூதாடித் தன் ராஜ்யத்தை இழந்தான். வனவாசம் முடிந்த பிறகு அவனுக்கு சுதந்திரமாக இருக்கும் உரிமை உண்டு. ஆனால் இழந்த ராஜ்யத்தை அவன் உரிமையுடன் கேட்க முடியாது. அதேசமயம் துரியோதனன் தானாக அதில் பாதியையாவது கொடுத்திருக்கலாம்தான். ஆக தவறு இருபுறமும்தான். அர்ஜுனன் மகன் அபிமன்யு இறந்தபோது பாண்டவர்கள் நிலைகுலைந்து போனார்கள். அந்த சமயத்தில் அபிமன்யுவின் இறுதிக் காரியங்களை நான்தான் முன்னெடுத்துச் செய்தேன். திருமாலின் திவ்ய கலப்பையான சம்வர்த்தகம் என்பது எனக்கு அளிக்கப்பட்டது. என்னிடம் உள்ள தெய்வீக வில்லின் பெயர் ரவுத்திரம். இதை நான் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். என்னுடைய தேரில் பறக்கும் கொடியில் பனை மரத்தின் உருவம் இருக்கும். காலப்போக்கில் யாதவ வம்சம் முற்றிலும் அழிந்தது. நான் தனிமையை நாடினேன். தியானத்தில் அமர்ந்து என் மனித உருவில் இருந்து நீங்கிய போது என் உடலிலிருந்து ஆயிரம் தலைகள் கொண்ட ஒரு வெள்ளை நாகம் வெளிப்பட்டு மேலுலகம் நோக்கிச் சென்றது. நான்தான் ஆதிசேஷனின் அம்சம் ஆயிற்றே. திருமாலின் அவதாரமான கண்ணன் என்னிடம் வந்தார். இருவருமாக வைகுண்டம் சென்றோம்.
|
|
|
|