|
ராமன் போய்விட்டான். அவனை சுமந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் உருளும் ஒலியும் மறைந்துவிட்டது. பின்தொடர்ந்து சென்ற மக்களின் தவிப்பு ஆரவாரமும் அடங்கி விட்டது. நிசப்தம் அயோத்தியைக் கவ்வியது. தசரதன் முற்றிலும் செயலிழந்தார். வேதனையில் தடுமாறினார். தன்னுடன் ராமன் இல்லை என்ற உண்மை தணலாய் தகித்தது. அவரது உடல் பொலிவிழந்து, மெலிந்தது, வற்றியது. தரையிலிருந்து கையை ஊன்றி எழவும் சக்தியற்றவராகிப் போனார். ‘காட்டுக்குப் போ’ என்று சொன்னதை ஒரு மந்திர ஆணையாக ஏற்று அப்படியே செய்த ராமன், அடுத்து ‘போகாதே’ என்று புலம்பினேனே, அதை ஏன் ஏற்கவில்லை? இத்தனைக்கும் காட்டிற்குப் போகச் சொன்னது நேரடியாக கைகேயிதான். என் சார்பாக அவள் சொல்லியிருக்கிறாள் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்த ராமன், நான் நேரடியாக, ‘போக வேண்டாம்‘ என்று கேட்டுக் கொண்டபோது அதற்குரிய மரியாதையை அவன் ஏன் தரவில்லை? - தனக்குள்ளாகப் புலம்பிக் கொண்டிருந்தார் தசரதன். முதலாவது, தாய்க்குத் தந்தை கொடுத்த வரம், அதில் தான் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை தந்தைக்காக கட்டாயம் நிறைவேற்ற வேண்டியது தன் கடமை; அடுத்து தன்னைப் போக வேண்டாம் என்று அவர் தடுத்த உணர்வானது பாசத்தின் பிரதிபலிப்புதான், பதினான்கு வருடங்கள் கழித்து புதுப்பித்துக் கொள்ளக் கூடியதுதான் என்றே ராமன் கருதினான். இரண்டாவது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் அயோத்தியிலேயே தங்குவானானால் என்னென்ன விரும்பத் தகாத நிகழ்வுகளை காண வேண்டியிருக்கும் என்பதை ஊகித்ததனாலும் அதை ராமன் ஏற்கவில்லை. பாசத்தால் கட்டுண்டு கிடந்த தசரதனுக்கு இது புரியவில்லைதான். ராமன் பிரிவு வெறும் பதினான்கு ஆண்டுகளுக்கு மட்டும்தான் என அவரால் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அயோத்தியில் கோலோச்சப் போகும் பரதன் அந்த காலகட்டத்திற்குப் பிறகு ராமனை இந்த நகருக்குள் வர விடுவானா? அல்லது எங்கே ராமன் திரும்பிவிடுவானோ என்ற அச்சத்தில் தானே காட்டிற்குச் சென்று ராமனைக் கொன்று விடுவானோ! இதற்கு கைகேயியும் உடந்தையாக இருப்பாளோ! இந்தத் தற்காலிகப் பிரிவு போதாதென்று அடுத்து ராமனிடமிருந்து நிரந்தரப் பிரிவு என்ற சோகத்தையும் தான் சுமக்க வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பயங்கர கற்பனைக்கு உள்ளானார் தசரதன். அதனால்தான் தான் வருந்தி, விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில், சும்மா காட்டுக்குப் போவதாகக் காண்பித்துக் கொண்டு ராமன் மீண்டும் அயோத்திக்குத் திரும்பிவிடுவான் என சிறு குழந்தைபோல ஆவலுடன் காத்திருந்தார் தசரதன். அதே போல அயோத்திக்குள் தேர் நுழைந்ததாகத் தகவல் கிடைத்தவுடன் அவர் பரபரத்தார். ‘ராமன் மனம் மாறி திரும்ப வந்திருப்பான்’ என்ற அளவு கடந்த பாச எதிர்பார்ப்புடன் சுமந்திரனை எதிர்நோக்கினார். ராமன் திரும்ப வராத சோகத்தைத் தம் தோற்றத்தாலேயே தெரிவித்தார் சுமந்திரன். தேர்ச் சக்கரங்களில் படிந்திருந்த சேறும், தேரின் மேல் ஒடிந்து சிக்கியிருந்த மரக் கிளைகளும், கொடிகளும் அந்த சோகத்தை அதிகப்படுத்திக் காட்டின. மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், ‘‘ராமன் எங்கே இருக்கிறான்? கானகம்தான் என்றாலும் அருகிலேயேதானே இருக்கிறான்?’’என்று ஆதங்கத்துடன் கேட்டார் தசரதன். ‘‘இல்லை அரசே, மூவரும் மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் வெகுதொலைவுக்கு நடந்து சென்று விட்டார்கள்’’ என்று பதிலளித்தார் சுமந்திரன். நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல துடித்தார் தசரதன். அவருக்கு ராமனின் வைராக்கியம் புரிந்தது. இனி பதினான்கு ஆண்டுகளுக்கு முன் அவன் அயோத்தி திரும்ப மாட்டான்… பளிச்சென்று முந்தைய சம்பவம் ஒன்று அவரது நினைவுக்கு வந்தது. நாட்டிற்குள் வந்து தொல்லை கொடுக்கும் காட்டு விலங்குகளை வேட்டையாட அவ்வப்போது வனத்துக்குச் செல்வார் தசரதன். அப்படி ஒருமுறை சென்றார், ஏற்கனவே ‘சப்த வேதனம்’ என்ற வில்வித்தையில் அபாரத் தேர்ச்சி பெற்றவர் அவர். அதாவது ஏதேனும் மிருகம் ஒலி எழுப்புகிறது என்றால், அது எந்த மிருகம், எத்தனை தொலைவில் இருக்கிறது என அனுமானித்து இங்கிருந்தபடியே அம்பெய்தினார் என்றால், அடுத்த கணமே அந்த மிருகம் உயிரற்று கீழே விழும். இத்தகைய ஆற்றல் பெற்ற அவர், அதனாலேயே கர்வம் கொண்டிருந்தார். தன் ஊகம் தப்பாது, தன் குறியும் தப்பாது என்ற ஆணவம்! அந்த வகையில் சரயு நதிக்கரையில் நின்றிருந்தபோது தொலைவில், அடர்ந்த மரங்களுக்கு அப்பால், ஒரு யானை தண்ணீர் உறிஞ்சிக் குடிக்கும் ஒலியைக் கேட்டார். அந்தக் காட்டு யானை தன் நாட்டு மக்களைத் துன்புறுத்தக் கூடியதாக இருக்கும் என்ற எண்ணத்தில் உடனே அந்த இலக்கு நோக்கி அம்பைச் செலுத்தினார். பொதுவாக தர்ம சாஸ்திரப்படி யுத்தம் தவிர்த்து, பிற சந்தர்ப்பங்களில் யானையைக் கொல்வது பாவம். ஆனால் தான் ஒரு சப்தவேதி என்ற அகங்காரத்தில், கண்ணால் காணாமலேயே, சப்தத்தை வைத்தே யானையைக் கண்டுபிடித்துவிட்ட மமதையில் அவ்வாறு அவர் அம்பு எய்தியதுதான் தவறாகப் போய்விட்டது. ஆமாம், அவருடைய அம்பு பாய்ந்த அதே கணத்தில், ‘அம்மா…‘ என்ற ஒரு சிறுவனின் தீனக்குரல் கேட்டது. திடுக்கிட்ட தசரதன் குரல் கேட்ட திசை நோக்கி விரைந்தார். அங்கே சலபோசனர் என்ற முனிவரின் குமாரன் சுரோசனன் மீது அம்பு பாய்ந்திருந்தது. சிரவண குமாரன் என்றும் அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், பார்வையிழந்திருந்த தன் பெற்றோரிடம் பாசமும், பக்தியும் கொண்டிருந்தான். பெற்றோர் தீர்த்த யாத்திரை போக விரும்பியதால் அவர்களை இரு உறி கட்டிய காவடியில் அமர்த்தி, சுமந்து சென்று கொண்டிருந்தான். வழியில் அவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டதால் அந்தக் காவடியை ஒரு மர நிழலில் வைத்துவிட்டு, உடன் கொண்டு வந்திருந்த குடத்தை எடுத்துக் கொண்டு நதிக்கு வந்தான். நதியில் குடத்தை அமுக்கி நீர் நிரப்பியபோது அது ஒரு யானை நதியிலிருந்து நீரை உறிஞ்சிக் குடிப்பது போல சப்தம் ஏற்படுத்தியது. இதைக் கேட்ட தசரதன் அந்த ஒலியை வைத்து யானைதான் என நினைத்து அம்பு எய்துவிட்டார். தான் பெருந்தவறு இழைத்தது அறிந்து, ஓடோடிப் போய் சிறுவனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டார். தன் தவற்றைப் புலம்பலாகத் தெரிவித்தார். ஆனால் சிறுவனோ, ‘ஐயா, நான் இனி பிழைப்பதற்கில்லை. அந்தகர்களான என் பெற்றோர் தாகத்தோடு காத்திருப்பார்கள். அவர்களுக்குத் தண்ணீர் எடுக்கதான் வந்தேன். சரி, என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்த நீரைக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுங்கள்’’ என்று கேட்டுக் கொண்ட சிரவண குமாரன் உயிர் விட்டான். கண்ணீருடனும், கையில் நீருடனும் அவனது பெற்றோரைப் போய்ப் பார்த்தார் தசரதன். அவர்களிடம் நீரைக் கொடுத்தபோது, அவ்வாறு தருவது தங்களின் மகன் இல்லை, வேறு யாரோ என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், ‘யார் நீ?’ எனக் கேட்டனர். வேறு வழியின்றி தசரதன் நடந்ததைச் சொன்னார். அப்படியே துடிதுடித்துப் போனார்கள். சிறுவனின் உடலை சிதையில் இட்டு தீ மூட்ட தசரதன் தானே முன் வந்தார். ‘நானே உங்களுக்கு மகனான இருந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றி தருவேன்’’ என்று உறுதியளித்தார் தசரதர். வேதனையால் அரற்றிக் கொண்டே இருந்த பெற்றோர், பொறுக்க மாட்டாமல், ‘எங்கள் குழந்தையை இழந்து தவிப்பது போல, நீயும் உன் மகனைப் பிரிவதால் உயிர் விடுவாய்’’ என சாபமிட்டனர். அதுமட்டுமல்லாமல் அதே சிதையில் விழுந்து இருவரும் தம் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். அவர்கள் சாபத்தால் தசரதர் துயருற்றாலும், ஓரளவு மகிழவும் செய்தார். ஆமாம், அதுவரை தனக்கு மகப்பேறு இல்லாததால் வருந்தியிருந்தார் அவர். இந்த சாபம் பலிக்க வேண்டுமென்றால் தனக்கு புத்திர பாக்கியம் ஏற்பட வேண்டும் அல்லவா? ஆனால் மகன் பிறந்த பிறகு அவனை இழப்பதும், அதனால் ஏற்படும் சோகமும் எத்தகையது என்பதை அவரால் அப்போது உணர இயலவில்லை. இப்போது உணர்ந்தார்.
|
|
|
|