|
மீனவன் ஒருவன் தினமும் கடலில் மீன் பிடித்து அதை விற்ற பணத்தில் குடும்பம் நடத்தினான். பாடுபட்டாலும் வாழ்வில் அவன் வாழ்வில் மகிழ்ச்சி சிறிதுமில்லை. அவனது முகம் எப்போதும் கடுகடுப்பாகவே இருக்கும். ஒருநாள் அவன் இளமைக்கால நண்பனை சந்தித்தான். அவனுடைய வருமானம், குடும்ப சூழ்நிலைகளை கேட்டறிந்தான். ஏழ்மையில் அவன் தத்தளிப்பது தெரிந்தது. ஆனாலும் புன்னகையுடன் காட்சியளித்தான். அன்றிரவு மீனவனுக்கு உறக்கம் வரவில்லை. நண்பனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். ‘நண்பனுக்கு வருமானம் குறைவு; வாழ்வில் பிரச்னைகள் அதிகம். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறானே’ என யோசித்தான். குழப்பம் தீரவில்லை. அந்த ஊரில் துறவி ஒருவர் இருந்தார். ஊராரின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு சொல்லி வந்தார். மீனவனும் துறவியின் உதவியை நாடிச் சென்றான். அவரை வணங்கி விட்டுத் தன் வருத்தத்தை தெரிவித்தான். அனைத்தையும் கேட்டுவிட்டு துறவி புன்னகைத்தார். ‘பதிலளிக்காமல் புன்னகைத்தபடி இருக்கிறாரே’ எனக் கோபம் வந்தது. ஆனாலும் சாபம் ஏதும் இட்டால் என்ன செய்வது?’ என்ற பயத்துடன் ஏதும் கேட்கவில்லை. மறுநாள் மீண்டும் துறவியைப் பார்க்கச் சென்றான். அப்போதும் துறவியிடம் இருந்து புன்னகையே பதிலாக கிடைத்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஐயா...என் பிரச்னைகளை தெரிவித்தேன். நீங்களோ தீர்வு சொல்லாமல் புன்னகை மட்டும் செய்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான். “உன்னுடைய வருமானத்தை குறைவாக நினைக்கிறாய். அதே நேரம் உனக்கு வரும் பிரச்னைகளை அதிகமாக சிந்திக்கிறாய். உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இல்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்பவனே நல்ல மனிதன். ஆசை கொள்வதில் தவறில்லை என்றாலும், பேராசை ஆபத்தில் முடியும். பிரச்னைகள் மட்டுமே உன் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. அதனால் உனக்கு சிரிப்பு என்பதே மறந்துவிட்டது. அதையே நினைவுபடுத்தினேன். எந்த பிரச்னை வந்தாலும் அதை புன்னகையோடு கடந்து செல்ல முயற்சி செய். அது வாழ்வை அழகாக்கும்” என்றார். மீனவனின் மனம் தெளிவு பெற்றது. புன்னகையுடன் துறவியிடம் விடை பெற்றான்.
|
|
|
|